Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

``பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்றிருந்தால் தோல்வியே கிடைக்கும்!'' - பைபிள் கதைகள் #BibleStories

``ன்றைக்கு `பெண் அழைத்தல்’ எனப்படும் `மணப்பெண் அழைத்தல்’ சிறப்பான ஒரு நிகழ்வு. இதேபோல முற்காலத்தில் `மணமகன் அழைத்தல்’ என்பதும்  சிறப்பான நிகழ்வாக இருந்தது. மணமகன் வரும்போது, மணமகளின் தோழிகள் தங்கள் கைகளில் விளக்குகளை ஏந்திக்கொண்டு வருவார்கள். அப்படியொரு திருமண விழாவுக்கு மணமகனை வரவேற்க, பத்து தோழிகள் அழைக்கப்பட்டிருந்தார்கள். அந்தப் பத்துத் தோழிகளும் விளக்குகளுடன் வந்தார்கள். 

பைபிள் கதை

தோழிகளில் ஐந்துபேருக்கு ஒரு பிரச்னை. அதாவது, அவர்கள் கொண்டுவந்த விளக்குகளை எரிப்பதற்குத் தேவையான அளவு க்கு அவர்கள் எண்ணெய் எடுத்து வரவில்லை. `வழியில் எங்கேயாவது கடை இருந்தால் வாங்கிக்கொள்ளலாம் அல்லது திருமண வீட்டாரிடம் கேட்டுப் பெற்றுக்கொள்ளலாம்’ என்ற நம்பிக்கையோடு அவர்கள் புறப்பட்டு வந்திருந்தார்கள். ஆனாலும் எண்ணெய் கிடைத்துவிடுமா என்று வழிநெடுக யோசித்துக்கொண்டேதான் வந்தார்கள். மற்ற ஐந்து தோழிகளிடம் போதுமான அளவுக்கு எண்ணெய் இருந்ததால், அவர்கள் அதைப் பற்றிக் கவலைப்படாமல் வந்திருந்தார்கள்.

மணமகன் வெளியூர்க்காரர் என்பதால், அவர் வருவதற்கு நேரமானது. இரவு நீண்டநேரமாகியும் அவர் வராததால், எல்லோரும் ஆங்காங்கே படுத்து உறங்கிவிட்டார்கள். நள்ளிரவில் திடீரென ஏதோவொரு சத்தம் கேட்டு எல்லோரும் தூக்கத்திலிருந்து எழுந்துகொண்டார்கள்.

`இதோ... மணமகன் வருகிறார், அவரை வரவேற்கத் தயாராகுங்கள்...' என்ற சத்தம் கேட்டு மணமகனை வரவேற்பதற்காக வந்திருந்த தோழிகள் அனைவரும் தாங்கள் கொண்டு வந்திருந்த விளக்குகளைக் கொளுத்தினார்கள். ஆனால், அவர்களில் ஐந்து பேரின் விளக்குகள் மட்டுமே எரிந்தன. எண்ணெய் எடுத்து வராத தோழிகளின் விளக்குகள் சிறிதுநேரத்தில் அணையத் தொடங்கிவிட்டன. இதைக் கண்டு பதற்றமடைந்த அந்தத் தோழிகள், `ஐயோ... எங்களது விளக்குகள் அணைகின்றன. எங்களுக்குக் கொஞ்சம் எண்ணெய் கொடுங்கள்...' என்று கெஞ்சிக் கேட்டார்கள். உடனே மற்ற ஐந்து பெண்களும், `அடடா... நீங்கள் எண்ணெய் எடுத்து வரவில்லையா? எங்கள் விளக்குகளை எரியூட்டுவதற்கு மட்டும்தான் எண்ணெய் இருக்கிறது. எங்களை மன்னித்துவிடுங்கள்...' என்று அந்தப் பெண்கள் சொன்னார்கள்.

இதைக் கேட்டு, `அப்படிச் சொல்லாதீர்கள். உங்களிடமிருக்கும் எண்ணெயில் பாதியைக் கொடுங்கள். பகிர்ந்துகொள்வோம். பிறகு எண்ணெய்க்கு ஏற்பாடு செய்கிறோம்' என்று அந்தப் பெண்கள் ஒரு வேண்டுகோளாகக் கேட்டுக்கொண்டனர். `அதெல்லாம் முடியாது. நாங்கள் உங்களுக்கு எண்ணெயைக் கொடுத்துவிட்டால் எங்கள் விளக்குகளும் பாதியிலேயே அணைந்துவிடும். கடைசியில் எல்லோருக்குமே எண்ணெய் இல்லாமல் ஆகிவிடும். திருமண வீட்டாரிடம் போய் எண்ணெய் கேளுங்கள், கிடைக்கும்' என்று யோசனை சொன்னார்கள்.

மணமகன்

`இப்போது அதற்கெல்லாம் நேரமில்லை. அதோ... மணமகன் வந்துவிட்டார். என்ன செய்வதென்று தெரியவில்லையே...' என்று பதற்றமானார்கள் அந்த ஐந்து பேரும். `இப்போது, கடைசி நேரத்தில் இவ்வளவு பதட்டப்படுகிறீர்களே... இதையெல்லாம் ஏன் நீங்கள் முன்னாடியே யோசிக்கவில்லை? இவ்வளவு நேரமாகத் தூங்கிக்கொண்டிருந்தீர்களே... அந்த நேரத்தில் கடைக்குப் போய் எண்ணெய் வாங்கிக்கொண்டு வந்திருக்கலாமே... எங்களை மன்னித்துவிடுங்கள்! எங்களால் நிச்சயமாக எண்ணெய் தர முடியாது' என்று அவர்கள் உறுதியாகச் சொன்னார்கள். இதனால் பதற்றத்தின் உச்சத்துக்குச் சென்ற அந்த ஐந்து பெண்களும் எங்கேயாவது எண்ணெய் கிடைக்குமா என்று அங்குமிங்குமாகத் தேடி ஓடினார்கள்.

மணமகன் வந்ததும், விளக்கை எரியூட்டியிருந்த ஐந்து பெண்களும் மணமகனை வரவேற்றனர். மணமகனும் மணமகளின் அந்த ஐந்து தோழிகளும் திருமண மண்டபத்துக்குள் நுழைந்தனர். இதையடுத்து மண்டபத்தின் கதவுகள் அடைக்கப்பட்டன. எண்ணெய் தேடிப்போன பெண்கள் நள்ளிரவு நேரம் என்பதால், எங்கே சென்றும் அவர்களுக்கு எண்ணெய் கிடைக்கவில்லை. நீண்ட நேர அலைச்சலுக்குப் பிறகு யாரிடமிருந்தோ கொஞ்சம் எண்ணெய் வாங்கிக்கொண்டு திரும்பினார்கள். அவர்கள் திருமண மண்டபத்துக்கு வந்து சேர்ந்தபோது அங்கே யாரையும் காணவில்லை. திருமண மண்டபம் மூடப்பட்டிருந்ததைக் கண்டு என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்தார்கள்.

திருமண மண்டபத்தின் கதவுகளைத் தட்டிய அவர்கள், `ஐயா... நாங்கள் மணமகளின் தோழிகள். கொஞ்சம் கதவைத் திறந்துவிடுங்கள்...' என்று கெஞ்சிக் கேட்டார்கள், ஆனால், அவர்களது குரல் யாருக்கும் கேட்கவில்லை; கதவுகளும் திறக்கப்படவில்லை. நீண்ட நேரமாக அவர்கள் சத்தம் போடுவதைக் கேட்டு அங்கே வந்த மணமகன், `நீங்கள் யாரென்று எனக்குத் தெரியாது. சும்மா தேவையில்லாமல் கத்தாதீர்கள்' என்று அவர்களை திட்டி அனுப்பிவிட்டார். உடனே அந்தப் பெண்கள், `ஐயா... உங்களை வரவேற்க வந்தவர்களில் மீதமுள்ளவர்கள் நாங்கள். எங்களிடம் எண்ணெய் இல்லாததால், அதை வாங்குவதற்காகப் போயிருந்தோம். நள்ளிரவாகிவிட்டதால் எண்ணெய் கிடைக்காமல் அலைந்து, திரிந்து வர வேண்டியதாகிவிட்டது. எங்களை மன்னியுங்கள்' என்று அவர்கள் மீண்டும் கெஞ்சிக் கேட்டார்கள்.

`இல்லை. உங்களை யாரென்று எனக்குத் தெரியாதது. விழிப்பாக இல்லாமல் நீங்கள் செயல்பட்டதால் உங்களுக்கு இந்த நிலைமை ஏற்பட்டிருக்கிறது. நீங்கள் வெளியே நில்லுங்கள்' என்று மணமகன் மிகவும் உறுதியாகச் சொன்னார். உள்ளே திருமண மண்டபம் கோலாகலத்துடன் இருக்க, விழிப்பாக இல்லாத அந்த ஐந்து பெண்கள் மட்டும் மண்டபத்தின் வெளியே நின்று புலம்பிக்கொண்டிருந்தார்கள்...’’

மணமகன் - மணமகள்

- இயேசு கிறிஸ்து  தன்னைச் சுற்றியிருந்தவர்களிடம் இந்தக் கதையைச் சொல்லி முடித்ததும், இந்தக் கதையின் பொருள் புரிகிறதா? என்று அவர்களிடம் கேட்டார். உடனே அவர்கள் அனைவரும் ஒருமித்த குரலில், `ஆம் ஆண்டவரே... இறையரசில் நுழைய வேண்டுமென்றால், நம்மை நாமே ஆயத்தம் செய்து கொள்ளவேண்டும்' என்று பதில் சொன்னார்கள். உடனே இயேசு அவர்களைப் பார்த்து, `சரியாகச் சொன்னீர்கள். பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று சொல்லப்படும் எந்த ஒரு விஷயமும் தோல்வியில்தான் முடியும். ஆகவே, இப்போதே நீங்கள் செல்லக்கூடிய தவறான வழிகளை விட்டு விலகி விவேகமான வழிகளில் செல்லுங்கள்' என்றார்.

`விழிப்போடு இருங்கள். உங்கள் தலைவன் எப்போது வேண்டுமானாலும், எந்த ஜாமத்தில் வேண்டுமானாலும் உங்கள் வீட்டை வந்தடையலாம். எனவே விழிப்போடு இருங்கள். தலைவன் வரும்போது விழிப்போடு இருக்கும் ஊழியனே பேறுபெற்றவன், அவனுக்கே தலைவனின் சலுகைகள் கிடைக்கும். விழிப்போடு இருந்தால், வீட்டைக் காத்துக்கொள்ளலாம். இல்லையென்றால் இழப்பீர்கள்' என்றார்.
இயேசுவின் இந்தக் கதையைக் கேட்ட அந்தக் கூட்டத்தினர் தெளிவுபெற்றார்கள்.
 

 

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
Advertisement