எடப்பாடி பழனிசாமி திருப்பதியில் செய்யவிருக்கும் `அஷ்டதள ஸ்வர்ண பாத பத்ம ஆராதனை' எதற்கு? | TN Chief minister Palanisamy and his family to worship at Tirupati temple

வெளியிடப்பட்ட நேரம்: 20:02 (14/05/2018)

கடைசி தொடர்பு:20:02 (14/05/2018)

எடப்பாடி பழனிசாமி திருப்பதியில் செய்யவிருக்கும் `அஷ்டதள ஸ்வர்ண பாத பத்ம ஆராதனை' எதற்கு?

எடப்பாடி பழனிசாமி திருப்பதியில் செய்யவிருக்கும் `அஷ்டதள ஸ்வர்ண பாத பத்ம ஆராதனை' எதற்கு?

திருப்பதி வேங்கடாசலபதியை தரிசிக்கக் குடும்பத்துடன் திருப்பதி சென்றிருக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.  கார்த்திகை விரதமும் அமாவாசையும் சேர்ந்து வரும் விசேஷ நாளான நாளை(15.5.2018) காலையில் வேங்கடாசலபதிக்கு நடைபெறும் அஷ்ட தள பாத பத்ம ஆராதன சேவையில் கலந்துகொண்டு பெருமாளை தரிசிக்க உள்ளார்.  அதற்காக இன்று மாலை திருப்பதி சென்றுள்ள முதல்வர், இரவு திருமலை விடுதியில் தங்குகிறார்.  நாளை அதிகாலை வேங்கடாசலபதியைச் சேவிக்கிறார்.

திருப்பதி

முதல்வர் அஷ்டோத்தர பாத பத்ம ஆராதனை சேவை என்பது  தனிச் சிறப்புடையது. தோஷ நிவர்த்திக்காக இந்த ஆராதனை சேவையைச் செய்வார்கள்...  

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அதிகாலை 2.30 மணிக்குச் சுப்ரபாத சேவை முடிந்த பிறகு, 3.30 மணி முதல் 4.00 மணி வரை  தோமால (தோள் மாலை) சேவை நடைபெறும். அதன்பின்னர் 4.30 முதல் 5.30 வரை ஸஹஸ்ரநாம அர்ச்சனை நடைபெறும். பின்னர் வேங்கடவனுக்கு நிவேதனம் படைக்கப்படும். அதன்பிறகு, வேங்கடவனுக்கே உரித்தான `கண்டாநாதம்' என்ற பிரமாண்ட மணி அதிரும். அதன்  பிறகு காலை 6 மணி முதல் 7 மணி வரை விதவிதமான மலர்களைக் கொண்டு அஷ்டோத் தர சத நாம அர்ச்சனை நடைபெறும். செவ்வாய்க் கிழமைகளில் மட்டும் தங்கத் தாமரை மலர்களைக் கொண்டு அர்ச்சனை நடைபெறும். 108 தங்கத் தாமரை மலர்களைக்கொண்டு நாராயணனின் 108  திருப்பெயர்களைச் சொல்லி இந்த அர்ச்சனை நடைபெறும். இதுவே அஷ்டோத்தர ஸ்வர்ண பாத பத்ம ஆராதனை சேவை எனப்படுகிறது. 

திருப்பதி ஏழுமலையான்

இந்த 108 தங்க மலர்களை ஏழுமலையானுக்குச் சமர்ப்பித்தவர் ஓர் இஸ்லாமியர் என்பது வியப்பான உண்மை. பதினான்காம் நூற்றாண்டில் பீவி நாச்சாரம்மா என்ற இஸ்லாமிய பக்தை வேங்கடமுடை யானை சேவித்து அவரது தேவியாகவே மாறினார். அதிலிருந்து வேங்கடமுடையானுக்கு இஸ்லாமியர்களும் பக்தர்களாக மாறினார்கள் என்கிறது திருப்பதி வரலாறு. ஆந்திர மாநிலம் குண்டூரைச் சேர்ந்த ஷேக் மஸ்தான் மற்றும் அவருடைய முன்னோர்கள் எல்லோரும் காலம் காலமாக திருப்பதி பெருமாளை செவ்வாய்க் கிழமைகளில் விதவிதமான மலர்களைக் கொண்டு பூஜித்து வந்தார்கள். 1982-ம் ஆண்டு ஷேக் மஸ்தான், 108 தங்க மலர்களை திருப்பதி தேவஸ்தானத்துக்கு வழங்கி, வேங்கடமுடையானை அர்ச்சிக்க வேண்டினார். அவரது நினைவாக, 1984-ம் ஆண்டு முதல் செவ்வாய்க்கிழமைகளில் அஷ்டதள ஸ்வர்ண பாத பத்ம ஆராதனை ஆர்ஜித சேவை அறிமுகம் செய்யப்பட்டது. அஷ்டதள ஸ்வர்ண பாத பத்ம ஆராதனை ஆர்ஜித சேவை 1984-ம் ஆண்டு முதல் பக்தர்களுக்கு அறிமுகமானது. ஏழுமலையானின் 108 திருநாமங்களை ஒரு பட்டர் சொல்ல, ஆனந்த நிலையத்தில் வீற்றிருக்கும் திருவேங்கடவனின் திருப்பாதங்களுக்குக் கீழே ஒரு பட்டர் அமர்ந்துகொண்டு நாமத்திற்கு ஒரு மலர் வீதம் அர்ச்சிப்பார். 

எடப்பாடி பழனிசாமி

`வாசனை மலர்களால் சஹஸ்ர நாம அர்ச்சனையை திருவேங்கடவனுக்கு யார் செய்தாலும், அதைப் பார்த்தாலும், சர்வ தோஷங்களும் நீங்கிவிடும்’ என்று நாரத மகரிஷி கூறியுள்ளார். திருமகளின் அம்சமான பொன்னாலான மலர்களால் பெருமானை அர்ச்சித்தால் நன்மைகள் யாவும் கிட்டும்... மன உளைச்சல் அகன்று நிம்மதி கிடைக்கும். எதிரிகளின் தொல்லை நீங்கும் என்பது ஐதீகம். முதல்வர் எடப்பாடி பழனிசாமி குடும்பத்தோடு திருவேங்கடவனின் இந்த ஆராதனை சேவையில் பங்கேற்கிறார். 

 

 


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close