``கடனைத் தள்ளுபடி செய்யுங்கள், அல்லாவின் கருணை நமக்குக் கிடைக்கும்!’’ - நபிகள் நாயகம்

``கடனைத் தள்ளுபடி செய்யுங்கள், அல்லாவின் கருணை  நமக்குக் கிடைக்கும்!’’ - நபிகள் நாயகம்

ம்ஜான் நோன்பு உலகம் முழுவதும் இஸ்லாமியர்களால் சிறப்பாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. இஸ்லாமிய நெறிமுறைகளின்படி கடன்கொடுத்து, வட்டி வசூல் செய்வது பாவம். கடன் குறித்தும் கடன் கொடுத்தவர், கடன் வாங்கியவர் குறித்தும் இஸ்லாமிய நெறிமுறைகள் என்ன சொல்கின்றன என்பது பற்றி, மெளல்வி வி.எஸ்.முஹம்மத் முஸம்மில் அல் புகாரி, நபிகள் நாயகத்தின் வாழ்வில் நடந்த ஒரு நிகழ்ச்சியின் மூலமாக அழகாக விளக்கிக் கூறுகிறார். 

கடன்களை மன்னியுங்கள்

``நபிகள் நாயகத்தின் காலத்தில் நபி (ஸல்) அவர்கள், இரண்டு வகையான மனிதர்களுக்கு ஜனாசா (ஜனாசா என்றால், ஒருவர் இறந்துவிட்டால், அவரை நல்லடக்கம் செய்வதற்கு முன்னர் செய்யப்படும் தொழுகை) தொழுகையை வைக்க மாட்டார்கள். அவர்களுக்காகத் தொழவும் மாட்டர்கள். 

அவர்கள், 1) நயவஞ்சகர்கள்  2) கடனாளிகள்.

நயவஞ்சகர்களுக்குச் சரி, கடனாளிகளாக மரணித்தவர்கள், நபி (ஸல்) அவர்களால் தொழுகை வைக்கப்படாத அளவுக்கு துர்பாக்கியம் பெறுவதற்கான காரணம் என்ன என நாம் வியக்கலாம். ஏனெனில், கடன் என்பது ஒரு மனிதருக்கும் பிற மனிதருக்கும் இடையேயான உரிமை. 

கடனாளி, தான் பிறரிடம் வாங்கிய கடனைச் செலுத்தாமல் மரணித்தாரென்றால், அவரைக் கடன் கொடுத்த மனிதர் மன்னிக்காதவரை, `அல்லாஹ்’ அவரை அவர் எவ்வளவு நற்செயல்கள் புரிந்தவராக இருந்தாலும், ஏன் இறைவழியில் போரிட்டு உயிர்த் தியாகம் செய்திருந்தாலும் மன்னிப்பதில்லை. 

எனவேதான் கடன் வாங்கியவர், தனது வீட்டில் உள்ளவர்களிடம், `நான், இந்த மனிதரிடத்தில் இவ்வளவு கடனாகப் பெற்றேன். ஒருவேளை எனது வாழ்நாளில் நான் அந்தக் கடனைச் செலுத்த முடியவில்லையெனில், அதை எனக்குப் பதிலாக நீங்கள் செலுத்திவிடுங்கள்’ எனத் தெரிவிக்க வேண்டும் என்று இஸ்லாம் வலியுறுத்துகிறது.

ஒருமுறை நபியவர்களிடம் தொழுகையை வைப்பதற்காக ஒருவரின் உடல் எடுத்து வரப்பட்டது.  நபி (ஸல்) அவர்கள், ``இறந்துபோன இந்த நபர்மீது ஏதேனும் கடன் தொகை பாக்கி இருக்கிறதா?'' எனக் கேட்டார்கள். 

அதற்கு மக்கள் ``ஆம்! இவர்மீது கடன் உண்டு’’ என்றார்கள். ``கடனை நிறைவேற்றும் அளவுக்கு அவர் ஏதேனும் பொருளை விட்டுச் சென்றிருக்கிறாரா’’ என மீண்டும் நபியவர்கள் கேட்டதும் , மக்கள் ``இல்லை’’ என்றார்கள். 

ரம்ஜான் தொழுகை - நபிகள் நாயகம்

உடனே நபி அவர்கள், ``அவ்வாறென்றால் நீங்களே இந்த நபருக்கு ஜனாசா தொழுதுகொள்ளுங்கள். நான் தொழ மாட்டேன்’’ என்றார். 
இந்த நிலையைக் கண்ட அலி (ரலி) அவர்கள், ``இறைத்தூதரே! நான் இந்த மனிதரின் கடனை அடைக்கும் பொறுப்பை ஏற்றுக்கொள்கின்றேன்’’ என்றதும், நபியவர்கள், ``அலியே! அல்லாஹ் உம்மை நரகத்திலிருந்து காப்பாற்றுவானாக! முஸ்லிமான சகோதரர் ஒருவருடைய கடனை அடைக்கும் எந்த முஸ்லிமையும் அல்லாஹ் மறுமை நாளில் விடுதலை செய்வார்’’ எனக் கூறிவிட்டு, அம்மனிதருக்கு உரிய தொழுகையை வைத்தார்கள். 

ஏழைகள், வறியவர்களின் கடனைத் தள்ளுபடி செய்யுமாறு நபியவர்கள் அறிவுறுத்தினார்கள். தன் தோழர்களுக்கு முன் வாழ்ந்த சமூகத்திலிருந்து ஒரு சம்பவத்தையும் எடுத்துரைத்தார்கள்.

``முன்பொரு காலத்தில் ஒரு மனிதர் பாவம் செய்துவந்தார். அவர் எந்த நற்கருமமும் செய்ததே இல்லை. ஆனால், அவர் மக்களுக்குக் கடன் கொடுத்துக்கொண்டிருந்தார். அவர் தமது பணியாளர்களிடம் கடன் வசூலிக்கச் செல்லும்போது, ``நீங்கள் கடன் வசூலிக்கும்போது சிரமப்படுபவர்களைக் கண்டால், அவர்களது கடனைத் தள்ளுபடி செய்யுங்கள். வசதியானவர்களுக்குப் போதிய அவகாசம் அளியுங்கள். இதனால், அல்லாஹ் நம்முடைய தவறுகளைத் தள்ளுபடி செய்யக்கூடும்’’ என்றார்.

ரம்ஜான்

அந்த மனிதர் மரணித்த பிறகு அல்லாஹ் அவரிடம், ``நீ உலகில் வாழும்போது ஏதேனும் நற்செயல்கள் புரிந்திருக்கிறாயா’’ எனக் கேட்டபோது அந்த மனிதர், ``இறைவனே! இல்லை. ஆனால், நான் என்னிடம் கடன் கேட்பவர்களுக்குக் கடன் கொடுத்துக்கொண்டிருந்தேன்.

அவர்களிடம் அந்தக் கடனைத் திரும்பப் பெறுவதற்காக, என் பணியாளரை அனுப்புவேன். அப்போது, 'நீங்கள்  கடன் வசூலிக்கும்போது சிரமப்படுபவர்களைக் கண்டால், அவர்களது கடனைத் தள்ளுபடி செய்யுங்கள். வசதியானவர்களுக்கு போதிய அவகாசம் அளியுங்கள். இதனால், அல்லாஹ் நம்முடைய தவறுகளைத் தள்ளுபடி செய்யக்கூடும்' என்று கூறுவேன்" எனக் கூறினார். 

அல்லாஹ், ``என் அடியானே! நான் உனது தவறுகளைத் தள்ளுபடி செய்துவிட்டேன்'' என்று கூறினார். பிற மனிதர்களிடம் லகுவாகவும் மென்மையாகவும் நடப்பது மறுமை நாளில் நரக நெருப்பிலிருந்து நம்மைக் காப்பாற்றும்.

அந்த மனிதர் இறைவனால் ஏவப்பட்ட எந்த நற்செயல்களும் புரியவில்லை என்பதை அல்லாஹ் நன்கறிந்தபோதும், அவரது அந்த ஒரே ஒரு நற்செயலுக்காக அவரின் பாவங்களை மன்னித்து, அவரை ஏற்றுக்கொண்டது அல்லாஹின் அருள் விசாலத்தையே காட்டுகிறது.

 

 


 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!