கோடி ஜபங்களுடன் ஸ்ரீலட்சுமி நரசிம்ம சுதர்சன மகாயாகம்!

தென் அகோபிலம் என்று வணங்கப்படும் விழுப்புரம் மாவட்டம், பூவரசங்குப்பம் ஸ்ரீலட்சுமி நரசிம்ம பெருமானுக்கு இன்று (22.05.2018)  தொடங்கி 27-ம் தேதி வரை ஆறு நாள்களும் காலை மாலை என இருவேளைகளில் 108 யாக குண்டங்களில் ஸ்ரீலட்சுமி நரசிம்ம சுதர்சன மகாயாகம் ஒரு கோடி ஜபங்களுடன் நடைபெற உள்ளது. 200-வது ஸ்வாதி நட்சத்திரத்தை முன்னிட்டு நடைபெறும் இந்த யாகத்தில் கலந்து கொள்வதால் வியாதி, கடன் தொல்லைகள் நீங்கும். குடும்பப் பிரச்னைகள் ஒழிந்து, எதிரிகளின் தொல்லைகள் விலகும். திருமணத் தடை அகலும். புத்திர பாக்கியம் உண்டாகும். உலக நன்மையை உத்தேசித்து நடைபெறும் இந்த யோகத்தால் சுபீட்சமும் அமைதியும் பெருகும் என ஆலய நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.

மகாயாகம்

இந்தியாவிலேயே முதன்முறையாக லட்சுமி நரசிம்மருக்கு நடைபெறும் இந்தச் சுதர்சன மகாயாகத்தின் இறுதி நாளான 27-ம் தேதி காலை மகா கும்ப ப்ரோக்ஷண வைபோகமும் அன்று மாலை 5 மணியளவில் ஸ்ரீலட்சுமி நரசிம்மர் திருக்கல்யாண உற்சவமும் நடைபெறும். திருமகளை இடதுபுறம் தாங்கி எழுந்தருளி இருக்கும் இந்த லட்சுமி நரசிம்மர் குடும்ப ஒற்றுமையை மேம்படுத்துபவர். தம்பதி சமேதராக இந்த யாகத்தில் கலந்துகொண்டால் சகல நன்மைகளும் உண்டாகும். தீயசக்திகளின் தொல்லை ஒழிந்து வாழ்வில் நிம்மதியும் வளமும் பெற பூவரசங்குப்பம் ஸ்ரீலட்சுமி நரசிம்ம பெருமானை வணங்கி அருள் பெறுங்கள். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!