திருச்செந்தூரில் மீன் சாப்பாட்டுடன் விரதத்தை முடித்த பக்தர்கள்!

வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு திருச்செந்தூருக்கு மாலை அணிந்தும் விரதம் இருந்தும் வந்த பக்தர்கள் தங்கள் குடும்பத்துடன் மீன் சாப்பாடு சாப்பிட்டு விரதத்தை முடித்தனர். 

முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடும், கடற்கரை ஓரத் தலமுமானது தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில். இங்கு ஆண்டுதோறும் நடைபெறும் முக்கியத் திருவிழாக்களில் வைகாசி விசாகத் திருவிழாவும் ஒன்று. 

இந்த ஆண்டு வைகாசி விசாகத் திருவிழா, நேற்று 28ம் தேதி நடைபெற்றது. இத்திருவிழாவில் முருகப் பெருமானைத்  தரிசனம் செய்ய தூத்துக்குடி மட்டுமல்லாமல் நெல்லை, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை மற்றும் மதுரை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த பக்தர்கள் பாதயாத்திரையாக அரோகரா கோஷம் எழுப்பியும் பக்திப் பாடல்கள் பாடியபடியும் திருச்செந்தூருக்கு வருவார்கள். 

கடலில் நீராடிவிட்டு பால்குடம் எடுத்தல், காவடி எடுத்தல், அலகு குத்தி நடத்தல், அங்கப் பிரதட்சணம் செய்தல் எனப் பக்தர்கள் தங்கள் வேண்டுதல்கள் நிறைவேற நேர்த்திக்கடன்களைச் செலுத்தி சுவாமி சுப்பிரமணியரை தரிசனம் செய்வது வழக்கம். மறுநாள் தங்களின் விரதத்தை முடிக்கும் விதமாகக் கடல் மீன் சாப்பாடு சாப்பிட்டுவிட்டு அவரவர் ஊர்களுக்குக் கிளம்புவார்கள்.  

விசாகத் திருவிழாவின் மறுநாளான இன்று விரதமிருந்தவர்கள் குடும்பத்துடன் மீன்சாப்பாடு சமைத்து சாப்பிட்டனர். அடுப்பில் மீன் பொரித்துக்கொண்டிருந்த  ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியைச் சேர்ந்த குடும்பத்தினரிடம் பேசினோம். "வைகாசி விசாகத்தை  முன்னிட்டு மாலை அணிந்து வீட்டுப் பிள்ளைகள், உறவினர்கள் 5 நாள்கள் பாதயாத்திரையாகத் திருச்செந்தூருக்கு வந்தனர். மற்றவர்கள்,  லாரியில் விசாகத்துக்கு முதல்நாள் கிளம்பி இங்கே வந்தோம். இன்று விரதம் முடிந்தது. மீன் பொறித்தும், குழம்பு வைத்தும் விரதம் முடித்துவிட்டுப் போவோம். கடந்த 9 வருஷமா தொடர்ந்து திருச்செந்தூருக்கு வருகிறோம். குடும்பத்துடன் கடற்கரைக் காற்றில் மீன் சாப்பாடு சாப்பிடுவதும் ஒருவித சந்தோஷம்தான்" என்றார். 

பக்தர்கள்

தமிழகம் முழுவதும் இனப்பெருக்கத்துக்காக மீன் பிடிக்க தடை பிறப்பிக்கப்பட்டிருப்பதால் கேரளாவிலிருந்து மீன்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. தற்போது மீன்களின் விலை அதிகம் என்றாலும் விரதத்தை முடிக்க மீன்களை வாங்கி சமைத்து வருகின்றனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!