``நித்தியானந்தா ஆதீன மடத்துக்குள் நுழைய முடியாது"- மதுரை ஆதீன மடம் விளக்கம்!

தற்போது வந்திருக்கும் தீர்ப்பின் மூலம் நித்தியானந்தா ஆதீன மடத்துக்குள் நுழைய முடியுமா?

``நித்தியானந்தா ஆதீன மடத்துக்குள் நுழைய முடியாது

துரை ஆதீன மடத்துக்குள் நித்தியானந்தா நுழைய தனி நீதிபதி விதித்திருந்த தடை உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்துள்ளது, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை . 

நித்தியானந்தா - மதுரை ஆதினம்

2012 -ம் ஆண்டு,  மதுரை ஆதீன மடத்தின் இளைய மடாதிபதியாக தற்போதைய மடாதிபதி அருணகிரிநாதரால் அறிவிக்கப்பட்டார் நித்தியானந்தா. இதனை எதிர்த்து சென்னையைச் சேர்ந்த மணிவாசகம் என்பவரும், கும்பகோணத்தைச் சேர்ந்த தியாகராஜன் என்பவரும் மதுரை 1-வது கூடுதல் செசன்சு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.  இந்த வழக்கை தள்ளுபடி செய்யக்கோரி நித்யானந்தாவும், மதுரை ஆதீனமும் பதில் மனுத்தாக்கல் செய்தனர். வழக்கு விசாரணைக்கு வருவதற்கு முன்பே தன் இளைய மடாதிபதி அறிவிப்பை வாபஸ் பெற்றார் மதுரை ஆதீனம். அதோடு, `இந்த வழக்கில் தொடர விருப்பமில்லை' என்றும் அறிவித்து வெளியேறினார். 

நித்தியானந்தா தாக்கல் செய்த மனுவில் தன்னை, `மதுரை ஆதீனத்தின் 293- ம் மடாதிபதி' என்று குறிப்பிட்டிருந்தார். அதற்கான சில ஆவணங்களையும் தாக்கல் செய்தார். இதற்கு மறுப்புத் தெரிவித்த மதுரை ஆதீனம். `நித்யானந்தா, மடத்தில் தங்கியிருந்த கொஞ்ச நாள்களில் முறைகேடாகத் தன்னை ஏமாற்றி சில ஆவணங்களில் கையெழுத்து வாங்கியதாகவும், மடாதிபதியாக அறிவித்ததாகப் போலி ஆவணங்கள் தயாரித்ததாகவும்' குற்றம் சாட்டி பதில் மனுத்தாக்கல் செய்தார். 

இது ஒருபுறமிருக்க, மதுரையைச் சேர்ந்த ஜெகதலப்பிரதாபன் என்பவர், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் ஒரு மனுத்தாக்கல் செய்திருந்தார். `மதுரை ஆதீன மடம் 1,500 ஆண்டுகள் பழைமையானது. இதன் 292-வது ஆதீனமாக அருணகிரிநாதர் கடந்த 25 ஆண்டுகளாக இருந்து வருகிறார். கடந்த 2012-ல் பிடதியில் தியான பீடம் நடத்திவரும் ராஜசேகர் என்ற நித்தியானந்தா, ஆதீன மடத்துக்குள் நுழைய முற்பட்டார். சட்டவிரோதமாகத் தயாரிக்கப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில், நித்தியானந்தா தன்னை ஆதீன மடத்தின் 293-வது மடாதிபதியாக முறைகேடாகப் பிரகடனப்படுத்திக்கொண்டார். எனவே, ஆதீன மடத்தைப் பாதுகாக்கும் வகையில், மடத்துக்குள் நுழைய நித்தியானந்தாவுக்கு நிரந்தரத் தடை விதித்து உத்தரவிட வேண்டும்" என்று கூறப்பட்டிருந்தது. `நித்யானந்தா மடத்துக்கு ஆதினமாக இருக்கத் தகுதியுடையவர் அல்ல' என்று அரசுத் தரப்பிலும் தெரிவிக்கப்பட்டது. கடந்த அக்டோபர் 11-ல் , அந்த மனுவை விசாரித்த நீதிபதி, மடத்துக்குள் நித்தியானந்தா நுழைய தடை விதித்து உத்தரவிட்டார்.

நித்தியானந்தா

 அந்த உத்தரவை எதிர்த்து, நித்யானந்தா ``நான் பக்தராக ஆதீனம் மடத்துக்குள் நுழைய தடைவிதிக்கக் கூடாது. தனி நீதிபதி உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட வேண்டும்'' என்று  உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மேல்முறையீடு செய்தார். 

இந்த மனு, நீதிபதிகள் முரளிதரன், கிருஷ்ணவள்ளி ஆகியோர்கொண்ட அமர்வு முன் இன்று (30.5.2018) விசாரணைக்கு வந்தது. அப்போது, `மதுரை ஆதீன மடத்துக்குள் நித்தியானந்தா நுழைய தனி நீதிபதி விதித்த தடை உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்து' உத்தரவிட்டனர். மேலும், இதுகுறித்து இந்து சமய அறநிலையைத் துறை, மதுரை ஆதீனம் ஆகியோர் பதில் மனுத்தாக்கல்செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜூன் 18-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

இது தொடர்பாக கருத்துக்கேட்க மதுரை ஆதீனத்தைத் தொடர்பு கொண்டோம். அவர் குருபூஜையில் இருந்ததால் அவர் சார்பில் அவருடைய உதவியாளரும் வழக்கறிஞருமான ஜெயச்சந்திரன் நம்மிடம் பேசினார். 

மதுரை ஆதினம்

``ஆதினம் சார்பில் கீழவை நீதிமன்றத்தில் ( Second sub court madurai)வாங்கப்பட்ட தடை உத்தரவுகள் அப்படியேதான் இருக்கின்றன. ஜெகதலப்பிரதாபன் என்பவர் பெற்றிருந்த தடை உத்தரவுக்குத்தான் தற்போது இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளனர். மடம் சொல்வது வேறு: தனி நபர் ஒருவர் சொல்வது வேறு. அந்த அடிப்படையில்தான் இந்தத் தடையுத்தரவு வழங்கப்பட்டுள்ளது. அந்த வழக்கில் நாங்களும் ஒரு பங்குதாரர்தான். இன்னும் எங்களுக்கு எந்த நோட்டீஸும் வரவில்லை. மடத்தின் வாயிலாகப் பெறப்பட்ட உத்தரவுகள் அப்படியேதான் இருக்கின்றன. இந்தத் தீர்ப்பின் மூலம் நித்தியானந்தா ஆதீன மடத்துக்குள் நுழைய முடியாது. நாங்கள் தொடர்ந்த வழக்குகள் தற்போதும் நடந்துவருகின்றன...“ என்றார் அவர். 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!