கருட புராணம் குறிப்பிடும் பாவத்துக்கான பலன்கள் என்னென்ன!?

கருட புராணம் குறிப்பிடும் பாவத்துக்கான பலன்கள் என்னென்ன!?

`னிதர்கள் குறைந்தபட்ச நல்லொழுக்கத்தையேனும் பின்பற்றி வாழ வேண்டும்’ என்ற உயரிய நோக்கத்திலேயே ஒவ்வொரு சொல்லுக்கும் சிந்தனைக்கும் செயலுக்கும் விளைவாக பாவ, புண்ணியங்கள் இருக்கின்றன என்று வகுக்கப்பட்டது. மனிதர்களின் பாவ, புண்ணியங்களின் அடிப்படையில், இறந்ததும் அவர்களின் ஆன்மாவுக்குத் தண்டனையோ, வெகுமதியோ உண்டு. அதற்காகவே சொர்க்கம், நரகம் படைக்கப்பட்டுள்ளன என்பதும் பொதுவாக எல்லா மதங்களும் கூறும் கருத்து. சொர்க்க, நரகம் பற்றி மற்ற எல்லா நூல்களைவிடவும் கருட புராணத்தில் தெளிவாகவும் விளக்கமாகவும் கூறப்பட்டிருக்கின்றன. பதினெட்டுப் புராணங்களில் தொன்மையான கருட புராணம் நீத்தார் வாழ்வு, ஈமச் சடங்குகள், மறுபிறவி, சொர்க்கம், நரகம் மட்டுமன்றி மருத்துவம், வானியல், உடல் இயக்கம், ஆன்மாக்களின் நிலைகள், நவரத்தினப் பலன்கள், சடங்குகள், தானம் உள்ளிட்ட பல விவரங்கள் பத்தொன்பதாயிரம் பாடல்களில் சொல்லப்பட்டிருக்கின்றன. `இறப்புக்குப் பிறகு ஆன்மாக்களின் நிலை’ என்று கருட பகவான் கேட்க, ஶ்ரீமன் நாராயணன் விளக்கிச் சொல்லும் கருத்துகளையே வியாச பகவான் 19 ஆயிரம் ஸ்லோகங்களாக, `கருட புராணம்' என்ற பெயரில் இயற்றியிருக்கிறார். 

நன்மை செய்தவர்களுக்குக் கிடைக்கும் சுகங்கள், தீமை செய்தவர்களுக்கு அவர்களுடைய பாவங்களுக்கு ஏற்றபடி 28 வகையான நரகங்களில் கொடுக்கப்படும் கொடுமையான தண்டனைகள் பற்றியும் விளக்கிச் சொல்லப்பட்டிருக்கிறது. பாவம் செய்தவர்களுக்குக் கிடைக்கும் தண்டனைகள் பற்றி கருட புராணத்தில் சொல்லப்பட்டிருக்கும் சில தண்டனைகளை இங்கே பார்ப்போம்.

கருட புராணம்

 

பொய்ச் சாட்சி சொல்லி நிரபராதிகளைத் துன்பத்துக்குள்ளாக்கும் மனிதர்களுக்கு உண்டான நரகம் `அவீசி.’ இங்கு துர்நாற்றம் கொண்ட நீரில் ஆன்மாக்கள் அழுத்தப்பட்டுத் துன்புறுத்தப்படும்.

கருட புராண நரகங்கள்

மக்களைக் கொன்று குவிக்கும், அப்பாவிகளின் உடைமைகளைப் பறித்துக்கொள்ளும் அநியாயக்காரர்களுக்கு `சாரமேயாதனம்’ என்ற நரகம் நிச்சயம். இங்குள்ள கொடிய மிருகங்கள் ஆன்மாக்களை வாட்டி வதைக்கும்.

மனைவியைத் துன்புறுத்தி வதைக்கும் நபர்களுக்கு `லாலாபட்சம்’ நரகம். இங்கு ஆன்மாக்கள் தீக்கோலால் சுட்டுத் தண்டிக்கப்படும்.

பசுக்களை காரணமின்றி வதைப்பவர்களுக்கு `விசஸனம்’ நரகம் கிடைக்கும். இங்கு ஆன்மாக்கள் சவுக்கடியால் துன்புறும்.

எந்தத் தொந்தரவும் செய்யாத மிருகங்களை வதைக்கும் நபர்களுக்கு `பிராணிரோதம்’ நரகம். இங்கு ஆன்மாக்கள் கூரிய அம்புகளால் குத்தப்பட்டு துன்பத்தை அனுபவிக்கும்.

சொர்க்கம் நரகம்

ஒழுக்கக்குறைவாக பெரியோர்களை மதிக்காமல் மனம் போனபடி வாழும் இழி ஜன்மங்கள் `பூபோதம்’ என்ற நரகத்தை அடையும். இங்கு விஷமுள்ள ஜந்துக்கள் இவர்களைத் துன்புறுத்தும். 

தர்மமே செய்யாத லோபிகளுக்கு `வைதரணி’ நரகம். வைதரணி என்ற நதியில் கொடிய ஜந்துக்களும், பிசாசுகளும் வாழும். இங்கே பாவிகள் விழுந்து துன்பப்படுவார்கள்.

பாவம், புண்ணியம் எதையும் கண்டுகொள்ளாமல் காசுக்காக எதையும் செய்பவர்கள் `சான்மலி’ நரகத்தை அடைவார்கள். இங்கு முள் தடிகளாலும், முள் செடிகளாலும் குத்தப்பட்டு துன்பப்படுவார்கள். 

நரகம்

கொஞ்சமும் அஞ்சாமல் பிறர் உழைப்பைச் சுரண்டி வாழும் மனிதர்கள் போகும் இடம் `கிருமிபோஜனம்.`இங்கு புழு, பூச்சிகள், கிருமிகள் இவர்களைத் துளைத்துக் கொடுமைக்குள்ளாக்கும்.

தறிகெட்ட காம இச்சையால் கொடுமைகள் செய்யும் நபர்களுக்கு `வஜ்ரகண்டகம்.’ நெருப்பால் செய்யப்பட்ட பதுமைகளைத் தழுவி துன்பப்பட வேண்டும்.

பொய் சொல்லி, பிறரது உடைமைகளைக் கவரும் பாவிகளுக்கு `அக்னிகுண்டம்.’ இங்கு எரியும் அக்னிகுண்டத்தில் பாவிகள் வாட்டப்படுவார்கள்.

பிறரை ஏமாற்றி அளவுக்கு மீறி செல்வம் சேர்ப்பவர்களுக்கு `அந்தகூபம்.’ இங்கு கொடிய மிருகங்கள் ஏறி மிதித்துப் பாவிகளை இம்சிக்கும்.

இறப்புக்கு பின்னர் ஆன்மா

குற்றமற்ற எளியோர்களை தண்டிப்பவர்கள், நீதிக்குப் புறம்பாக நடக்கும் நபர்களுக்கு `பன்றி முக’ நரகம். பன்றி முகம் கொண்ட கொடிய மிருகத்தின் வாயில் சிக்கி வதைபடுவர். 

தர்ம நெறியைவிட்டு தெய்வ நிந்தனை செய்யும் பாவிகளுக்கு `அசிபத்திரம்.’ இங்கு பூதங்களால் பல கொடுமைகளுக்கு ஆளாவார்கள்.

பெற்றோரை, பெரியோர்களை இம்சிக்கும் பிறவிகள் `காலகுத்திரம்’ செல்வார்கள். இங்கு அடி, உதை, பசி என்று ஆன்மாக்கள் தவிக்கும்.

உணவில் விஷம் வைப்பவர், மிருகங்களைக் கொன்று உண்பவர்களுக்கு `கும்பிபாகம்.’ இங்கு எண்ணெய்க் கொப்பரையில் ஆன்மாக்கள் வாட்டி எடுக்கப்படும்.

கருட பகவான்குடும்பத்தைக் கெடுப்பவர், உறவுகளைப் பிரிப்பவர் செல்லும் இடம் `மகா ரௌரவம்.’ இங்கு கண்ணுக்குத் தெரியாத மாய வடிவங்கள் இம்சிக்கும்.

குழந்தைகளை, முதியவர்களை, நோயுற்றவர்களை, அபலைகளை இம்சிக்கும் எல்லோரும் செல்லுமிடம் `ரௌரவம்.’ இங்கு கிங்கரர்கள் சூலத்தால் குத்தி இம்சிப்பார்கள். 

தம்பதிகள் ஒருவருக்கொருவர் ஏமாற்றி வாழ்வது, கொலை செய்வது எல்லாம் கொடிய செயல். இவர்களுக்கு உருவானதே `அநித்தாமிஸ்ரம்.’ இங்கு கொடிய இருளில் சிக்கி பயந்தே கிடப்பார்கள். 

நம்பியவர்களை ஏமாற்றுபவர்கள், செய்நன்றி மறப்பவர்கள், பிறர் மனைவியைக் கவர்பவர்கள் எல்லோருக்கும் `தாமிஸிரம்’ என்ற நரகம் கிட்டும். இங்கு கிங்கரர்கள் முள்ளாலான கட்டைகளால் அடித்துத் தண்டிப்பார்கள் என்கிறது கருட புராணம்.

இப்படிப் பாவங்களுக்கேற்றவாறு அமையும் நரகத்தில் வீழாமல் இருக்க, பெரியோர்கள் வகுத்த பாதையின்படி, தர்ம வாழ்க்கையை வாழ்ந்து இறைவனுக்குப் பிரியமானவராக இருப்போம். நலமே பெறுவோம்!
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!