ஶ்ரீரங்கத்தில் ஸ்ரீரங்கநாயகித் தாயாருக்கு வெம்மையைத் தணிவிக்க உள் கோடை விழா!

ஶ்ரீரங்கத்தில் ஸ்ரீரங்கநாயகித் தாயாருக்கு வெம்மையைத் தணிவிக்க உள் கோடை விழா!

வைணவர்களைப் பொறுத்தவரை அவர்களுக்கு, `கோயில்' என்றாலே அது திருவரங்கம் அருள்மிகு ரங்கநாதர் ஆலயம்தான். `நாள்தோறும் நான்கு உற்சவம்' என்று சிறப்பிக்கப்பெறும் திருவரங்கம் திருக்கோயிலில், விழாக்களும் உற்சவங்களும் நாள்தோறும் விமரிசையாக நடைபெறும். அந்த வகையில் வைகாசி மாதம் ஶ்ரீரங்கநாயகித் தாயாருக்குக் கோடை உற்சவம் நடைபெறும். `தாயார் கோடை உற்சவம்' என்ற பெயரில் நடைபெறும் கோடை விழா, கடந்த மே 30-ம் தேதி தொடங்கியது. வெளிக் கோடை ஐந்து நாள்கள், உள் கோடை ஐந்து நாள்கள் என்று பத்துத் தினங்கள் கோடை உற்சவம் கொண்டாடப்படும். கோடை விழாவின் சிறப்புகள் மற்றும் கொண்டாடப்படும் முறைகளை இங்கே பார்ப்போம்.

ரங்கநாயகி

கடுமையான கோடைக்காலம் சகல உயிரினங்களையும் வாட்டியெடுக்கும்; பலவிதமான பாதிப்புகளையும் ஏற்படுத்தும். கோடைக்காலம் தங்களை வாட்டுவதுபோலவே தாங்கள் வழிபடும் கடவுளர்களையும் வாட்டுமே என்று வருந்திய பக்தர்கள், அது தெய்வங்களை பாதிக்கக் கூடாது என்பதற்காகவே பல விழாக்களை ஏற்படுத்தியதுடன், தொடர்ந்து நடத்தவும் செய்கின்றனர். 

அம்மன் ஆலயங்களில் கூழ் வார்த்தல் விழாக்கள், சிவாலயங்களில் தாரா அபிஷேக ஏற்பாடுகள் யாவும் கோடையின் வெம்மையைத் தணிக்கவே கொண்டாடப்படுகின்றன. அவ்வாறே ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்தில் பெருமாள், தாயாரைக் குளிர்விக்க `பூச்சாற்றி விழா’ நடைபெறுகிறது. சித்திரை மாதத்தில் ஸ்ரீரங்கநாதருக்கும் அதன்பிறகு ரங்கநாயகித் தாயாருக்கும் இந்த உற்சவம் தலா பத்து நாள்கள் நடைபெறும். அதன்படி ரங்கநாதருக்குக் கோடை விழா முடிவடைந்து கடந்த 30-ம் தேதி நாச்சியாருக்கு விழா தொடங்கியது. 30-ம் தேதி தொடங்கி நேற்றுவரை `வெளிக் கோடை விழா’ நடைபெற்றது. இன்று (4-06-18) தொடங்கி வரும் 8-ம் தேதி வரை `உள் கோடை விழா’ எனும் பூச்சாற்றி விழா நடைபெறவுள்ளது. 

ஸ்ரீரங்கநாயகி

ஸ்ரீரங்கம் ரங்கநாயகி தாயாரின் கருவறையில், ஶ்ரீதேவி, பூதேவி உற்சவ மூர்த்தங்கள் பின்புறமாக வீற்றிருக்க, ஶ்ரீரங்கநாயகித் தாயார் உற்சவ மூர்த்தியாகச் சேவை சாதிக்கிறார். தாயாரின் கருவறையில் மூன்று உற்சவ மூர்த்தங்களும் அருள்பாலிப்பது மிகவும் விசேஷமான அருட்கோலம். நாச்சியாரின் அழகுக்கு அழகு சேர்க்கவும், கோடையின் கடுமை பாதிக்காமல் இருக்கவும், இந்த நாளில் வண்ண வண்ண மலர்களால் அலங்கரித்துப் பக்தர்கள் ஆனந்தம்கொள்வார்கள். ரங்கநாதரின் ஏழு நாச்சியார்களான ஸ்ரீதேவி, பூதேவி, துலுக்க நாச்சியார், சேரகுலவல்லி நாச்சியார், கமலவல்லி நாச்சியார், கோதை நாச்சியார், ரங்கநாச்சியார் ஆகியோரில் ரங்கநாச்சியாரே முதன்மையானவர்.

இவருக்குச் செய்யப்படும் எல்லா பூஜைகளும் மற்ற தேவியரைச் சென்றடையும் என்பது ஐதீகம். 

ஸ்ரீரங்கம் ரங்கநாயகி

இந்தப் பூச்சாற்றி விழாவில் இன்று மாலை 6 மணிக்கு ரங்கநாச்சியார் கருவறையிலிருந்து புறப்பட்டு மாலை 6:30 மணிக்கு வெளிக்கோடை மண்டபத்தை அடைவார். அங்கு இரவு 7:30 மணிவரை மலர் அலங்காரத்தில் சேவை சாதித்த பின்னர்,  இரவு 7:45 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு உள்கோடை ஆஸ்தான மண்டபத்துக்கு வருவார். அங்கு சுமார் ஒரு மணி நேரம் பக்தர்களுக்குச் சேவை சாதிப்பார். பின்னர் 8:45 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு, வீணையின் மங்கள நாதத்தைக் கேட்டபடியே சுமார் 9:45 மணிக்குக் கருவறையை அடைவார். உள்கோடை விழாவின்போது தினமும் மாலை 4:30 முதல் 6 மணி வரை தாயார் கருவறையில் மூலவர் தரிசனம் கிடையாது.

கோடைக்கான உற்சவம் என்பதால், இது தினமும் ஆறு மணிக்கு மேல் கொண்டாடப்படுகிறது. கோடையின் வெப்பத்தைத் தணிக்கும் ஆற்றல் மலர்களுக்கு உண்டென்பதை உணர்ந்த பக்தர்கள் கடந்த 500 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த விழாவைக் கொண்டாடி வருகிறார்கள். எந்தப் பேதமும் இல்லாமல் எல்லா பக்தர்களிடமிருந்தும் பெறப்படும் மலர்கள் நாச்சியாருக்குச் சாத்தப்படும். கோயில் அர்ச்சகர்கள் மாலை ஐந்து மணியிலிருந்து பக்தர்களிடம் மலர்களை பெறத் தொடங்குவார்கள். மேலும், திருக்கோயில் அரையர்கள் கொண்டுவரும் மலர்ப் போர்வையும் நாச்சியாருக்குச் சாத்தப்படும். இந்த மலர்க்குவியலில் அதிகமாக மல்லிகை மலர்களே காணப்படும். கடுமையான வெப்பத்தைத் தணிக்கும் ஆற்றல் கொண்டவை மல்லிகை மலர்கள். அதுமட்டுமன்றி உஷ்ணத்தால் உண்டாகும் பல நோய்களைத் தீர்க்கும் ஆற்றலும் இதற்கு உண்டு என மருத்துவ நூல்கள் தெரிவிக்கின்றன. மலர்களால் குளிர குளிரக் காட்சிதரும் நாச்சியாரை இந்த நாள்களில் தரிசித்தால் எண்ணியவை யாவும் கிடைக்கும் என்கிறார்கள். நாச்சியார் சூடிய மலர்கள் அன்றிரவே பக்தர்களுக்கு விநியோகிக்கப்படும். நாச்சியார் சூடிய மலர்கள் வெம்மை நோய்கள், கண் நோய்களைத் தீர்ப்பதாக பக்தர்கள் நம்பி பெற்றுச் செல்கிறார்கள். 

அரங்கன் எளியவன்..! அன்புக்கு அடிபணிபவன்..! ரங்கநாச்சியோ அவனிலும் எளிமையான இரக்க குணம் வாய்ந்தவர். வாழ்வின் எல்லா வெம்மையையும் தணிக்கும் தேவியைத் தரிசித்து, தேவியின் கடைக்கண் பார்வையின் மூலமே சகல ஐஸ்வர்யங்களையும் அடைவோம். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!