வெளியிடப்பட்ட நேரம்: 20:10 (04/06/2018)

கடைசி தொடர்பு:20:10 (04/06/2018)

`குழந்தைகளைச் சமமாக நடத்துவது உங்கள் கடமை!’ - ரம்ஜான் நோன்புக் கட்டுரை-2

நல்ல குழந்தைகளையும், நல்ல தலைமுறையையும் எதற்காக உருவாக்க வேண்டும் என விளக்கும் கட்டுரை.

`குழந்தைகளைச் சமமாக நடத்துவது உங்கள் கடமை!’ - ரம்ஜான் நோன்புக் கட்டுரை-2

``ன் மகனை மிகவும் செல்லமாக நான் வளர்த்தேன். அவன் கேட்பதையெல்லாம் வாங்கிக் கொடுத்தேன். இப்போது அவன் என் பேச்சைக் கேட்பதில்லை. தினமும் தாமதமாகத்தான் வீடு திரும்புகிறான். எப்போதும் டென்ஷனாகவே இருக்கிறான். என் குழந்தையை நேர்வழிப்படுத்துவது எப்படி?'' எனப் பெற்றோர்கள் பலரும் சொல்லக் கேட்கிறோம்.

ரம்ஜான் குழந்தைகள்


இது உங்கள் வீட்டில் மட்டும் நடக்கிற பிரச்னை இல்லை. பெரும்பாலானவர்களின் வீடுகளில் நடக்கும் பிரச்னையும்கூட. இதைப் `பதின்பருவ நெருக்கடி' (Adulation crisis) என்று சொல்வார்கள். பத்து வயது முதல் பத்தொன்பது வயதுக்குட்பட்ட சிறார்களிடம் இந்தப் பிரச்னை இருக்கும். சற்றேறக்குறைய 80  சதவிகிதம் பேர், வயது வந்ததும் தானே சரியாகிவிடுவார்கள். 20  சதவிகிதம் பேர்தான் தடம்புரண்டு தவறுசெய்யவும் தலைப்படுகிறார்கள். அவர்களிடம் நாம் நடந்துகொள்ளும் முறையால் அவர்களையும்கூட இதிலிருந்து காப்பாற்ற முடியும்.

பெற்றோர்கள் கவனக்குறைவாக இருந்தால், அவர்கள் வழிதவற நிறைய வாய்ப்பிருக்கிறது. அவர்களைச் சரிசெய்வதற்கு முன்னர் அவர்கள் ஏன் இப்படி நடந்துகொள்கிறார்கள் என்பதைப் பார்க்க வேண்டும்.

இதற்கு முதல் காரணி, அவர்கள் சுதந்திரமாக இருக்க விரும்புவதுதான். `சிறுபிள்ளையாக இருந்தபோது பெற்றோர் சொல்கேட்டு வளர்ந்தோம். இப்போது நாம் சற்றே பெரியவனாகிவிட்டோம். நம் இஷ்டப்படி நடந்தால் என்ன தவறு?’ என்று நினைக்கின்றார்கள். இந்தப் பருவத்தில் அவர்கள் என்னென்ன செயல்களையெல்லாம் செய்வார்கள் என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டிருக்கின்றன.

அதில் முதலாவது அம்சம்தான் குறிப்பிட்ட நேரத்தில் வீட்டுக்கு வராமலிருப்பது. வெளியில் அதிக நேரத்தைச் செலவிடுவார்கள்; பொய் சொல்வார்கள்; புகைபிடிப்பார்கள்; திமிராகப் பேசுவார்கள்; சொன்னதைச் செய்ய மறுப்பார்கள்; பள்ளிக்கு மட்டம் போடுவார்கள்; சத்தமாக இசை கேட்பார்கள்; துணிகளைச் சரிவர சலவை செய்ய மாட்டார்கள்; குளியலறையில் நீண்ட நேரம் இருப்பார்கள்; அறையைக் குப்பையாக வைத்திருப்பார்கள்; வீட்டுவேலைகளில் பங்கேற்க மாட்டார்கள்; அதிக நேரம் தொலைக்காட்சி பார்ப்பார்கள்; வன்முறை, ஆபாசக் காட்சிகளைப் பார்ப்பார்கள்; நீண்ட நேரம் அலைபேசியில் பேசுவார்கள்; பெரியவர்களை மதிக்க மாட்டார்கள்; சோம்பேறிகளாக இருப்பார்கள்; பெற்றோர்கள் விரும்புகிற உடைகளை அணிய மாட்டார்கள்; சிகை அலங்காரத்தை அலங்கோலமாக வைத்திருப்பார்கள்; தொழ மறுப்பார்கள்... இதுபோன்ற பழக்கங்கள் சில ஒவ்வொருவரிடமும் இருக்கும்.

ரம்ஜான்


சுதந்திரமாக அவர்கள் இருக்க விரும்புவதால் இதுபோன்ற பழக்கங்கள் அவர்களை வெகு எளிதில் தொற்றிக்கொள்கின்றன. ஆனால், பெற்றோர்கள் இந்த மனைநிலையைப் புரிந்துகொள்ளாமல் `இவ்வளவு நாளும் என் பேச்சைக் கேட்டான். இப்போது கேட்பதில்லை’ எனப் புலம்புகிறார்கள். 

பெற்றோர்கள் இதைப் புரிந்துகொள்ள வேண்டும். பெற்றோர்கள் பேச்சை பிள்ளைகள் கேட்டு நடந்தால், அவர்களின் நண்பர்கள் கேலி பேசுவார்கள். இந்த விஷயத்திலே அவர்கள் பெற்றோர்களைத் திருப்திப்படுத்துவதைவிட நண்பர்களைத் திருப்திப்படுத்துவதற்குத்தான் முக்கியத்துவம் கொடுப்பார்கள்.

அடுத்த காரணம், அவர்கள் பொருளாதாரச் சுதந்திரம் பெற விரும்புவது. `பெற்றோர்களிடமிருந்து பணம் தேவைப்படுவதால்தானே அவர்களைச் சார்ந்து இருக்க நேரிடுகிறது. நம்மிடம் பணம் இருந்தால், அதற்கு அவசியம் இருக்காதே...’ என்று நினைக்கிறார்கள். அதனால் பொருளீட்டுவதற்கும் அவர்கள் விரும்புகிறார்கள். இவர்கள் நியாயமான முறையில் பொருளீட்டினால்கூட பரவாயில்லை. சில இளைஞர்கள் பணத் தேவையை நிறைவுசெய்ய குறுக்குவழிகளைக் கையாண்டு குற்றவாளிகளாகக்கூட மாறிவிடுகிறார்கள்.

அடுத்தபடியாக தங்களுடைய கருத்துகள் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என விரும்புகிறார்கள். `நீ சிறுபிள்ளை... உனக்கு ஒன்றும் தெரியாது’ எனப் பெற்றோர்கள் சொல்வதை அவர்களால் ஏற்றுக்கொள்ள இயலவில்லை. `நம் கருத்துகள் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும்’ என்ற அவர்களின் சிந்தனைப்போக்கையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

ரம்ஜான்

அதுபோல தலைமுறை இடைவெளியும் முக்கியமான காரணம். பெற்றோர்கள் வாழ்ந்த காலம் வேறு; இப்போது அவர்கள் வாழ்கின்ற காலம் வேறு. பெற்றோர்கள் காலத்தின் உடை, வசதிகள் வேறு. இப்போது வேறு. `எங்கள் காலத்தில் நாங்களெல்லாம் எப்படி இருந்தோம் தெரியுமா?’ என்று பெற்றோர்கள் எண்ணுவதையும் பேசுவதையும் அவர்கள் விரும்புவதில்லை.

மேற்கூறிய விஷயங்கள் யாவும் இந்த மோதலுக்குக் காரணமாக அமைகின்றன. இதற்கான முதல் தீர்வாக நாம் முன்வைப்பது, அவர்களுடைய இத்தகைய மனப்பாங்கை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். `இந்த வயதில் இப்படியெல்லாம்தான் இருப்பார்கள்’ என்ற யதார்த்தத்தை நாம் உணர்ந்துகொள்ள வேண்டும். அதற்கேற்ப நீங்கள் உங்களை மாற்றிக்கொள்ள வேண்டும். அவர்களைத் தண்டிப்பதாலோ, கண்டிப்பதாலோ அவர்களிடம் எந்த மாற்றமும் ஏற்படப் போவதில்லை.

அவர்களுடைய கருத்துகளையும் நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். அது மட்டுமன்றி அவர்களோடு நீங்கள் கருத்துப் பரிமாற்றம் செய்ய வேண்டும். ஆலோசனைகள், அறிவுரைகளை அள்ளி வழங்காமல் அவர்களிடம் நீங்கள் மனம்திறந்து பேசவேண்டும். `தோள்வரை வளர்ந்துவிட்டால் தோழன்' என்று சொல்லுவார்கள். அதுபோல அவர்களை நட்புடன் அமரவைத்துப் பேச வேண்டும். இவ்வாறு நீங்கள் மனம்விட்டுப் பேசவில்லையெனில், நாளை மன அழுத்தத்துக்கும் அவர்கள் ஆளாகி மன நோயாளியாவதற்கும் வாய்ப்பிருக்கிறது.

சில விஷயங்களைச் சுதந்திரமாக முடிவெடுப்பதற்கும் செயல்படுவதற்கும் நீங்கள் அனுமதிக்க வேண்டும். ஒரு மனிதன் சுதந்திரமாக முடிவெடுக்கிறான் என்றால், அவன் வளர்ந்து வருகின்றான் என்று பொருள். 

நீங்கள் அவன் வளர வேண்டும் என்றும் ஆசைப்படுகிறீர்கள். அவன் சுதந்திரமாக இருக்கக் கூடாதென்றும் ஆசைப்படுகிறீர்கள். இது ஒன்றுக்கொன்று முரண்பாடாக அல்லவா இருக்கிறது. குழந்தை விழுந்துதான், எழுந்து நடக்கப் பழகும். அதுபோல சில தவறுகள் செய்தாலும் அதைத் திருத்திக்கொண்டு அவர்கள் வளர்வார்கள்.

அவர்கள் நல்ல முடிவை எடுக்கும்போது பாராட்டுங்கள். அதுபோல அவர்கள் நல்ல முடிவை எடுக்கவில்லை; ஆனால், அதனால் பெரிய பாதிப்பில்லை என்றால் அதைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிடுங்கள். அவர்கள் எடுக்கிற முடிவு ஒழுக்கத்துக்கு மாறாக இருக்கும்போதோ, மார்க்கத்துக்கு முரணானதாக இருக்கும்போதோ நீங்கள் தலையிட்டு அதில் வழிகாட்டுதலை வழங்குங்கள். 

அப்போதும்கூட நீங்கள் கட்டளையிடாமல், நல்லவிதமாக உரையாடலின் மூலம்தான் உணர்த்த வேண்டும். ஆனால், பல பெற்றோர்கள் `நான் வளர்த்த பிள்ளை. அவனோடு உட்கார்ந்து என்ன பேசவேண்டிக்கிடக்கிறது..? நாங்கள் சொல்வதை அவன் கேட்கவேண்டியதுதானே’ என்று நினைக்கின்றார்கள். இந்த மனோபாவம் பிள்ளைகளுக்குப் பிடிப்பதில்லை. அவர்களை மதித்து அவர்களுடன் அமர்ந்து பேசுவதால்தான் மாற்றத்தைக் கொண்டுவர முடியும்.

ரம்ஜான்


தங்கையின் திருமணம், வீட்டுப் பிரச்னை போன்றவற்றிலும்கூட அவர்களை அழைத்துப் பேசி அவர்களின் கருத்துகளைக் கேட்க வேண்டும். 

சில நல்ல ஆலோசனைகளைக்கூட அவர்கள் தருவார்கள். அவர்களை மதிப்பதாக அவர்கள் உணர்வார்கள். அதே வேளையில் அவர்கள் தங்களின் நண்பர்களின் கருத்துகளையும் சொல்வார்கள். அதிலுள்ள தவறுகளையும் அவர்களுக்குப் புரியவைக்க வேண்டும். நண்பர்களிடம் இது முடியாது என்று எப்படிச் சொல்ல வேண்டும் என்பதையும் கற்றுக்கொடுக்க வேண்டும். இந்த வயதில் நண்பர்களின் தாக்கம் அவர்களிடம் அதிகமாக இருக்கும். எளிதில் நண்பர்களிடமிருந்து அவர்கள் விடுபட மாட்டார்கள்.

ஒருபுறம் உங்கள் தாக்குதல், மறுபுறம் நண்பர்கள் தாக்குதல் என்றால் அவன் எங்கே செல்வான்? எனவே, நாம்தான் அரவணைத்துச் சூழலை உணர்த்திப் புரியவைக்க வேண்டும். ஏசுவது, அடிப்பது எந்தப் பலனையும் தரப்போவதில்லை.

அடுத்ததாக இத்தகைய நிலை ஆரம்பத்திலேயே வராமல் தடுப்பதற்கும் நாம் முயற்சி செய்ய வேண்டும். `வருமுன் காப்போம்' என்ற அடிப்படையில் இளம் பிராயத்திலேயே அவர்களுக்கு மார்க்கத்தை நாம் சொல்லித்தர வேண்டும். பத்து வயதுக்குள் சொல்லிக்கொடுத்துவிட வேண்டும். அதைத் தாண்டினால் சிரமம் என்று உளவியல் நிபுணர்கள் சொல்கிறார்கள். 

`ஏழு வயதில் அவர்களைத் தொழச் சொல்லுங்கள். பத்துவயதில் அவர்களை லேசாக அடித்துத் தொழச் சொல்லுங்கள்’ என்று நபி(ஸல்) அவர்கள் கூறியிருக்கிறார்கள். 

இளமையாக இருக்கும்போதே அவர்களை உங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிட வேண்டும். சிலர் அந்த வயதைத் தவற விட்டுவிட்டு பின்னர் வருத்தப்படுகிறார்கள்.

நபி(ஸல்) அவர்கள் கூறியதுபோல பெற்றோர்கள் வழங்கும் அன்பளிப்புகளில் மிகச் சிறந்தவை நல்ல கல்வியும், நல்லொழுக்கப் பயிற்சியும்தான். 

நம் இல்லம் மார்க்கப் பயிற்சிக்கான களமாக இருக்க வேண்டும். ஒழுக்க மாண்புகள், மனித உறவுகள், பெற்றோருடன் எப்படி நடந்துகொள்ள வேண்டும், மற்றவர்களுடன் எப்படி நடந்துகொள்ள வேண்டும், ஆசிரியருடன் எப்படி நடந்துகொள்ள வேண்டும். அண்டை அயலாருடன் எப்படி நடந்துகொள்ள வேண்டும், வேலைக்காரர்களுடன் எப்படி நடந்துகொள்வது, நேர்மையாக, உண்மையாக, தூய்மையாக வாழ்வது எப்படி... இவற்றையெல்லாம் கற்றுத்தர வேண்டும்.

குழந்தைகள்

பெற்றோர்களாகிய நாமே முன்மாதிரிகளாக இருக்க வேண்டும். குழந்தைகளுக்கு அன்பும் அரவணைப்பும் முக்கியம். அவர்களின் தேவைகளையறிந்து அவர்களுக்கு உதவ வேண்டும். அவர்களின் பிரச்னைகளை அறிந்து அவர்களுக்கு உதவ வேண்டும். அவர்களுடன் உங்கள் தொடர்பு தொடர்ந்து இருக்க வேண்டும். இறுதியாக அவர்களுக்காக நாம் பிரார்த்திக்க வேண்டும்.

திருக்குர் ஆனில் வணக்க வழிபாடு!

* எங்கள் இறைவனே..! எங்கள் மனைவிமார்களையும்,எங்கள் குழந்தைகளையும், எங்கள் கண்களுக்குக் குளிர்ச்சி அளிக்கக்கூடியவர்களாக விளங்கச் செய்வாயாக! மேலும் எங்களை இறையச்சமுடையோருக்குத் தலைவர்களாக திகழச் செய்வாயாக! (திருக்குர்ஆன் அத்தியாயம் 25 வசனம் 64 )

* தன்னைத்தானே சுய சோதனை செய்து மரணத்துக்குப் பின் உள்ள வாழ்க்கைக்காகச் செயல்படுபவன் அறிவாளி. தன் மன இச்சைகளின்படி நடந்துவிட்டு பின்னர் இறைவனிடம் எதிர்ப்பார்க்கிறவன் அறிவிலி (நூல்: திர்மிதீ)

* அறிந்துகொள்ளுங்கள்! நிச்சயமாக உடலில் ஒரு சதைப்பகுதி உண்டு. அது சரியாகிவிட்டால் உடல் முழுவதும் சரியாகிவிடும். அது கெட்டுவிட்டால் உடல் முழுவதும் கெட்டுவிடும். அதுதான் இதயம்.

(நூல்: புகாரி 52)

* மறுமை நாளில் செல்வமும் பிள்ளைகளும் எவ்விதப் பயனும் அளித்திட மாட்டா. ஆனால், எந்த மனிதர் தூய்மையான உள்ளத்தோடு அல்லாஹ்வின் திருமுன் வருகை தருகிறாரோ அவரைத்தவிர. (திருக்குர் ஆன் 26: 88, 89)

உங்களிடம் கண்ணியத்துடன் நடந்துகொள்வது உங்கள் குழந்தைகளின் கடமை. உங்கள் குழந்தைகளைச் சமமாக நடத்துவது உங்களின் கடமை!

( நூல்: அபூதாவூத்)

இறைஞ்சுவோம், முயலுவோம்... நல்ல குழந்தைகளை உருவாக்குவதுடன் நல்ல தலைமுறையை வார்த்தெடுப்போம். 

 

 

 

 

 


டிரெண்டிங் @ விகடன்