"எவ்வழிப் போனாலும் சேர்வது அவ்வழிதான்!’’ - அபிராமி ராமநாதன் #WhatSpiritualityMeansToMe

``எல்லா நிகழ்வுகளுமே என் அப்பன் ஈசனால் ஏற்கெனவே நிர்ணயிக்கப்பட்டவை!’’ - அபிராமி ராமநாதன்

பிராமி ராமநாதன், 'அபிராமி மெகா மால்’ உரிமையாளர் மட்டுமல்ல, தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத் தலைவராகவும் இருப்பவர். அவர் பி.ஈ., ஏ.எம்.ஐ.இ எலெக்ட்ரிக்கல் இன்ஜினீயரிங், சார்ட்டட் என்ஜினீயரிங்... எனப் பல படிப்புகள் படித்தவர். தேர்ந்த நிர்வாகி. 'எனது ஆன்மிகம்’ பகுதிக்காக அவர் பேசியதிலிருந்து... 

அபிராமி ராமநாதன்

"முதல்ல என் பேரு எப்படி 'அபிராமி ராமநாதன்’னு வந்ததுனு சொல்றேன். நான் பிறந்தவுடனே, என் அப்பா அம்மா எனக்கு வெச்ச பேர் அண்ணாமலை. கூடப் பிறந்தவங்க நாலு பேருமே ஆண் பிள்ளைகள்தான். நான்தான் கடைக்குட்டி. பெண் குழந்தைங்க கிடையாது. 
எங்க அப்பாகிட்ட யாரோ ஒருத்தர், 'ராமர் பேருவெச்சா அதுக்கப்புறம் ஆம்பளைப் பிள்ளை இருக்காது’னு சொல்லியிருக்கார். அதனால, 'அண்ணாமலை’ங்கிற என் பேரை 'ராமு'னு மாத்திவெச்சாங்க.

ஸ்கூல், உயர்நிலைப்பள்ளி, பி.இ-னு படிச்சு முடிச்சவரைக்கும் ராமுதான். யுனிவர்சிட்டி சர்டிஃபிகேட்லகூட 'எஸ்.ராமு’னுதான் இருக்கும். அதுக்குப் பிறகு, ஏ.எம்.ஐ.இ-ல எலெக்ட்ரிக்கல் படிச்சேன். சார்ட்டட் இன்ஜினீயரிங் எல்லாம் படிச்சு முடிச்சேன். ஆனா, இந்த `ராமு’ங்கிற பேர் மட்டும் ஏதோ சின்னப் பையனைக் கூப்பிடுற மாதிரியே இருந்துச்சு. அதனால `ராமநாதன்’னு என் பேரை மாத்திவெச்சுக்கிட்டேன். கவர்ன்மென்ட் கெஜட்லயும்  `ராமநாதன்’னுபேரை மாத்திட்டேன். பழையபடியும் `ராமேஸ்வரம் ராமநாத சுவாமி’ங்கிற மாதிரி சிவன் பெயராகவே ஆகிடுச்சு.

சினிமாத் தொழிலுக்கு வந்துட்டேன். 1987-ம் வருஷம் சினிமாத் தொழில்ல ஈடுபட்டிருந்த ராமநாதன்னு ஒருத்தர் ஏதோ தப்புப் பண்ணிட்டு தலைமறைவாகிட்டார். உடனே பேப்பர்ல 'திரையரங்க உரிமையாளர் ராமநாதன் தலைமறைவு’னு நியூஸ் போட்டுட்டாங்க. 
அன்னிக்கி முழுக்க யார் யாரோ எனக்கு போன் பண்ணி விசாரிக்க ஆரம்பிச்சிட்டாங்க. அப்போ பத்திரிகை நிருபர் ஒருத்தர், 'சரிங்க சார்... இன்னியிலேருந்து 'அபிராமி ராமநாதன்’னு உங்க பேரை போட்டுடுவோம்’னார். அதுலருந்து அதுவே என்னோட பேராகிடுச்சு. மற்றபடி எனக்கு ஜோதிடம், நியூமராலஜில்லாம் நம்பிக்கை கிடையாது. 

அபிராமி ராமநாதன்

என்னைப் பொறுத்தவரை இந்த உலகத்துல நடக்கிற எல்லா நிகழ்வுகளுமே என் அப்பன் ஈசனால் ஏற்கெனவே நிர்ணயிக்கப்பட்டவைதான். இன்னிக்கு நாம சந்திக்கிற இந்த நிமிஷம்கூட அப்படிப்பட்டதுதான். அப்படி இல்லைன்னா இந்தச் சந்திப்பே நிகழாமப் போயிருக்கும். எல்லாம் அவன் செயல். 

எங்க அப்பா காலத்திலிருந்து எங்க வீட்டுக் கல்யாணங்களுக்குக்கூட ஜாதகம் பார்க்கிறதே கிடையாது. `மனப்பொருத்தம் இருந்தா போதும்... மற்ற பொருத்தம் தேவையில்லை’னு நினைக்கிறவன் நான். என்னோட திருமணமும் அப்படி நடந்ததுதான். நட்சத்திரம்கூட பார்க்க மாட்டோம். நான் மூல நட்சத்திரம். என் மனைவியும் மூல நட்சத்திரம். மூல நட்சத்திரம் இருக்குற பெண்ணைத் திருமணம் செஞ்சா மாமனாருக்கு ஆகாதும்பாங்க. ஆனா, திருமணமாகி 35 ஆண்டுகளுக்குப் பிறகுதான் எங்க அப்பா மறைந்தார். அதனால யாருக்கு யார்ங்கிறதெல்லாம் அவன் நிர்ணயிக்கிறதுதான்.`மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்’னு கண்ணதாசன் எழுதினார்; கணவன் அமைவதெல்லாமும் இறைவன் கொடுத்த வரம்தான்.     

அபிராமி ராமநாதன்

தெய்வங்கள்ல நான் விரும்பிக் கும்பிடுவது ஈஸ்வரனைத்தான். மற்றபடி நான் சர்ச்சுக்குப் போவேன். மசூதிக்குப் போவேன். தர்க்காவுக்கும் போவேன். நம்ம இந்து மதத்தில் மட்டும் ஆயிரம்விதமான கடவுள்கள் இருக்காங்க. நமக்குப் பிடிச்ச மாதிரி, பிள்ளையாரா, ஆஞ்சநேயரா, சிவனா, காளியா... யாரை வேண்டுமானாலும் தேர்வு செய்துகொள்ளலாம். ஆனா, அவங்க எல்லாருக்கும் மேலேயிருக்குற கடவுளை `ஆதி சிவன்’, `ஆதிசக்தி’னு சொல்றோம். நாம கும்பிடுற சிவன் கிடையாது. அதுக்கு உருவம் கிடையாது. 
நெருப்புதான் அதன் உருவம்.

கிறிஸ்துவத்துலயும், யூதர்கள்லயும், பார்ஸியிலயும் அவங்க கும்பிடுவது நெருப்பைத்தான். எவ்வழிப் போனாலும் சேர்வது அவ்வழிதான். அதற்குக் காரணம் ஆரம்பத்துல மனிதனுக்கு உணவு சமைக்க, இரவில் பயமின்றி வாழ, மிருகங்களின் பயமின்றி வாழ, வேட்டையாட, ஒளி பெற, வெப்பம் தர உதவியாக இருப்பது நெருப்புதான்.

கடவுள் இல்லைனு சொல்றாங்க. அவங்களுக்கு உதாரணம் ஒண்ணு சொல்றேன். இந்த மொபைல்போன் இப்போ இங்கே இருக்கு. இதை எடுத்து வேற இடத்துலவெச்சிட்ட பிறகு, இந்த மொபைல் இங்கே இல்லைனு சொல்லலாம். ஒரு பொருள் இருந்தால்தான் அதை இல்லைனு சொல்ல முடியும். அப்படித்தான் கடவுள் இல்லைனு சொல்றதும். இல்லாததை எதுக்கு இல்லைனு சொல்லணும்? கடவுள் இருக்கார்னு அவங்களுக்குத் தெரியும். அவரை இவங்களால ஒப்புக்கொள்ள முடியலை... அவ்வளவுதான். 

அபிராமி ராமநாதன்

இந்து மதத்துல ஆயிரம் கடவுள் இருக்காங்கன்னா அவங்க எல்லாருமே சத்ய யுகத்துல வாழ்ந்தவங்க. என்னோட தனிப்பட்ட கருத்து அவங்க எல்லாருமே தமிழர்கள். சிவனும் கறுப்பு, கிருஷ்ணரும் கறுப்பு... இவங்கதான் பெரிய கடவுள்கள். இவங்க ரெண்டு பேருமே கறுப்பு. சிவபெருமானைப் பாடி அருள் பெற்ற 63 நாயன்மார்களும் தமிழர்கள்; பெருமாளைப் பாடிய 12 ஆழ்வார்களும் தமிழர்கள். 
இந்தியா முழுக்க வாழ்ந்தவங்க எல்லோருமே தமிழர்கள்தான். அதனாலதான் சிந்து சமவெளி நாகரிக ஓவியங்கள், நாணயங்கள்ல ஜல்லிக்கட்டு படம் இருக்கு. தமிழன்தான் அங்கே இருந்தது.

ஒரு காலத்துல லெமூரியா கண்டம்னு இப்போ இருக்கிற ஆஸ்திரேலியா வரைக்கும் ஆட்சிசெஞ்சவன் தமிழன்தான். அந்தக் கண்டத்தை ஆட்சி செஞ்சது பாண்டிய மன்னன். அப்போ ஐரோப்பாவெல்லாம் பனியால மூடிக்கிடந்துச்சு. காலப்போக்குல பனி உருகி கடல்கொண்டதால் ஆஸ்திரேலியா எல்லாம் தனியாகப் போயிடுச்சு.

சிவன், ராமர், கிருஷ்ணர் எல்லாம் தங்கள் யோக பலத்தால் அற்புதங்கள் நிகழ்த்தி அந்தக் காலகட்டத்துல வாழ்ந்தவர்கள். அவர்கள் வாழ்ந்த அடையாளங்கள்தான் நாடு முழுக்க இருக்கிறது. அவங்க தங்களின் யோக சக்தியின் மூலம் எங்கும் நீக்கமற நிறைஞ்சிருக்காங்க. அவங்களை நாம் வணங்கும்போது நம்முடைய வேண்டுதல்களை நிறைவேற்றுகிறார்கள். இதுதான் நான் நம்பும், நான் வணங்கும் ஆன்மிகம்’’ அழுத்தமாகச் சொல்கிறார் அபிராமி ராமநாதன். 

***

Do you like the story?

Please Appreciate the Author by clapping!