வெளியிடப்பட்ட நேரம்: 18:42 (17/06/2018)

கடைசி தொடர்பு:16:33 (21/06/2018)

சக்தி யாத்திரை - குமரக்கோட்டம்!

அற்புதத் தலங்கள், விசேஷ வழிபாடுகள், ஆன்மிகப் பெரியோர்களுடன் சிலிர்ப்பூட்டும் பயணம்!

சக்தி யாத்திரை - குமரக்கோட்டம்!

ஒவ்வொரு திருத்தலமாக யாத்திரை மேற்கொண்டு இறைவனை வழிபடுவதில் நமக்குக் கிடைக்கும் ஆத்ம திருப்தியே தனிதான். அதனால் நமக்கு ஏற்படும் பரவச உணர்வை அனுபவத்தில்தான் உணரமுடியும். அந்தப் பரவச அனுபவத்தை, 'சக்தி விகடன்' வாசகர்களும் பெறும் வகையில், வாசகர்களுடனும் ஆன்மிகப் பெரியோர்களுடனும் புண்ணியத் தலங்களை தரிசிக்கும் வகையில் தொடங்கவுள்ளது 'சக்தி யாத்திரை!'.

பிணிகள் தீர்க்கும் வேல்மாறல் பாராயணம்,  நினைத்ததை நிறைவேற்றும் திருப்புகழ் மகாமந்திர பூஜை மற்றும் ஆன்மிகப் பெரியோர்களின் வழிகாட்டுதலுடன் அமையப்போகிறது இந்த அற்புத யாத்திரை.
முதல் யாத்திரையில் - ஆறுமுகன் அருள்பாலிக்கும் ஆறு திருத்தலங்கள் இடம்பெறுகின்றன. தலங்களை தரிசிப்பது மட்டுமின்றி, ஆன்மிக உரையாடல்கள், சிறப்பு சங்கல்பம், விசேஷ வழிபாடுகள் என களைகட்டப் போகிறது சக்தி யாத்திரை. யாத்திரையில் நாம் தரிசிக்கவிருக்கும் தலங்களைப் பற்றிய கட்டுரைத் தொகுப்பு இது.

டைப்பில் ஏற்பட்ட சிக்கலைத் தீர்க்க நினைத்த பிரம்மதேவர், சிவபெருமானை தரிசித்து ஆலோசனை  கேட்பதற்காக கயிலைக்கு வந்தார். அவசரமான காரியம் என்பதால், விரைந்து சென்ற அவர், முருகப்பெருமான் இருந்ததைக்  கவனிக்காமல் கடந்து சென்றார். லீலைகள் செய்வதில் விருப்பம்கொண்ட பாலமுருகன் நான்முகனை வழிமறித்தார். விரைந்து செல்லும் காரணம் கேட்டார். அப்படியே பேச்சு நீள, பிரணவத்தைக்கொண்டே தாம் படைப்புத் தொழிலைச் செய்வதாக பிரம்மன் கூறினார். பிரணவத்தின் பொருளை முருகன் கேட்க, நான்முகன் விழித்தார். பொருள் தெரியாமல் தலைகுனிந்தார். சுட்டிக் குழந்தையான முருகன், படைக்கும் கடவுளான பிரம்மன் தலையில் குட்டி, அவரைச் சிறையில் அடைத்தார். அதுமட்டுமா? தானே படைக்கும் தொழிலையும் மேற்கொண்டார். 

முருகப்பெருமான்

நான்முகனின் இந்த நிலையை தேவர்களின் வழியே அறிந்துகொண்ட சிவபெருமான் முருகனைக் கண்டித்து, நான்முகனை சிறையிலிருந்து மீட்டார். பிரணவத்தின் பொருளை மண்டியிட்டு முருகப்பெருமானிடமிருந்து ஈசனும் கேட்டுக்கொண்டார். என்னதான் திருவிளையாடல் என்றாலும், குருவின் அம்சமான ஈசனையே சீடனாகக்கொண்டது தோஷம் என்று அன்னை சக்தியின் மூலம் அறிந்தார் முருகப்பெருமான். தனக்கேற்பட்ட தோஷம் நீங்குவதற்காக, நகரங்களில் சிறந்ததும் புண்ணியம் மிகுந்ததுமான காஞ்சி நகருக்கு வந்தார். அங்கே ஒரு மாமரத்தடியில் சிவலிங்கத்தைப்  பிரதிஷ்டை செய்து வழிபட்டார். முருகர் வழிபட்ட ஈசன் 'சேனாபதீஸ்வரர்' என்று போற்றப்பட்டார். அந்தத் தலமும் 'சேனாபதீஸ்வரம்' என்று உருவானது. மாமரத்தடியில் வழிபட்ட குமரக்கோட்டம் முருகன் 'மாவடி கந்தன்' எனப் பெயர் பெற்றார்.

காஞ்சிபுரம் குமரக்கோட்டம்

ஈசனை, தவ வேடத்தில் முருகப்பெருமான் வழிபட்டதால் இங்கு வள்ளி, தெய்வயானை சந்நிதிகள் தனியே உள்ளன. முருகப்பெருமானும் நான்கு கரங்களுடன்  ஜபமாலை, கமண்டலம் ஏந்தி தவக்கோல மூர்த்தியாகக் காட்சிதருகிறார். குமரக்கோட்ட முருகப்பெருமான் முக்திதரும் மூர்த்தியாக இங்கு அருள்பாலிக்கிறார். இங்குள்ள `அனந்த சுப்ரமண்யர்’ என்ற உலா மூர்த்தி வடிவம் மிகச் சிறப்பானது. இவருக்கு ஐந்து தலை நாகம் ஒன்று குடை பிடித்தபடி இருக்கிறது. இந்த மூர்த்தியை தரிசித்து வழிபட்டால் நாக தோஷங்கள் விலகும் என்கிறார்கள். அதுபோலவே வள்ளி, தெய்வயானை உலா மூர்த்தத் திருமேனிகளிலும் மூன்று தலை நாகம் குடை பிடித்தபடி உள்ளன. 

குமரக்கோட்டம்

தேவசேனாபதீஸ்வரர், சந்தான கணபதி, தண்டபாணி, ஸ்ரீதேவி, பூதேவி சமேத உள்ளம் உருகும் பெருமாள் சந்நிதி, மார்க்கண்டேய முனிவர், சோமாஸ்கந்தர், நவவீரர்கள், முத்துக்குமாரசாமி, கஜவள்ளி, தெய்வானைதேவி, தட்சிணாமூர்த்தி, நாகதேவதை, நவ வீரர்கள், நவகிரகங்கள், கச்சியப்ப முனிவர், அருணகிரிநாதர், வள்ளலார் சந்நிதிகளையும் இந்த ஆலயத்தில் தரிசிக்கலாம். நவகிரகங்கள் எதிரெதிரே இருப்பதும், சூரிய பகவான் தனது தேவியோடு காட்சி தருவதும் சிறப்பானது. 

வைகாசி விசாகமும், ஐப்பசி கந்தசஷ்டித் திருவிழாவும் இங்கே சிறப்பாக நடைபெறுகின்றன. தீபாவளி நாளைத் தவிர இங்கு எல்லா நாள்களிலும் முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் செய்விக்கப்படுகிறது. அதில் தேன் அபிஷேகம் விசேஷமானது. இந்தக் கோயிலின் சிறப்பான அம்சம் இங்குதான் கந்தபுராணம் அரங்கேறியது என்பதுதான். காஞ்சியில்  வாழ்ந்த கச்சியப்ப சிவாசார்யார் கனவில் தோன்றிய முருகப்பெருமான், தன்னைப் பற்றிப் பாடுமாறு பணித்தார். 'திகட சக்கரச் செம்முகம்' என்று முதலடி எடுத்துக் கொடுத்து, தமிழின் அழகான காவியமான கந்தபுராணத்தை அரங்கேற்றச் செய்தார் ஆறுமுகப்பெருமான். கந்தபுராணம் அரங்கேறிய மண்டபம் இங்குள்ளது. அதுமட்டுமா? சிறுவனின் வடிவில் வந்து பாம்பன் ஸ்வாமிகளுக்கு வழிகாட்டி ஆட்கொண்ட தலமும் இதுதான். 

குமரக்கோட்டக் கோயில்

காஞ்சிபுரத்தின் நடுநாயகத் தலமாக விளங்கும் குமரக்கோட்டம் அருணகிரிநாதர், வள்ளலார் என்று  பல ஞானியர்கள் தொழுது, பாடிப் பணிந்த புண்ணியத் தலம். முருகப்பெருமானே இங்கு ஞானியின் வடிவில் அமர்ந்துள்ளதால், வாழ்வில் நிம்மதி, ஞானம், தெளிவு பெற வேண்டுவோர் இங்கு வந்து அமர்ந்து சற்று நேரம் தியானித்தால் போதும். தெள்ளிய ஞானம் பெற்று, தெவிட்டாத இன்பம் பெறுவார்கள் என்கிறது தல வரலாறு. சிவசக்தி மகிழ்ந்து கொண்டாடிய ஞானமூர்த்தியான முருகப்பெருமானின் தவ வடிவை காஞ்சிபுரத்தின் ராஜவீதியில் அமைந்திருக்கும் குமரக்கோட்டத்தில் கண்டு தரிசிக்கலாம். 


அறிவால் அறிந்து உன்னிரு தாள் இறைஞ்சும் அடியார் இடைஞ்சல் களைவோனே! ஆறுமுகனே உன் தாள் சரணம்! 

அற்புதமான இந்த யாத்திரையில் 

நீங்களும் கலந்துகொள்ள வேண்டுமா?

இங்கே க்ளிக் செய்யவும்...

 


டிரெண்டிங் @ விகடன்