மகா மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்! - ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

அரியலூர், ஸ்ரீ மகா மாரியம்மன் கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான  பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

                                   கும்பாபிஷேகம்

அரியலூர் மாவட்டம், திருமானூர் அருகில் இலந்தைகூடம் கிராமத்தில் அமைந்துள்ளது ஸ்ரீ மகாமாரியம்மன் கோயில். இக்கோயிலில் விநாயகர், மகா காளியம்மன், பாலமுருகன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களின் சந்நிதிகள் உள்ளன. இக்கோயிலில் திருப்பணிகள் முடிந்து கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது.  

அதைத்தொடர்ந்து கடந்த ஜூன், 29-ம் தேதி அனுக்ஞை, விநாயகர் வழிபாடு பூர்ணாகுதி, தீபாராதனை நடைபெற்றது. இதையடுத்து 1-வது, 2-வது, 3-வது மற்றும் 4-ம் கால யாக சாலை பூஜைகள் நடைபெற்றன. காலை 9 மணிக்கு மகாமாரியம்மன் கோயில் மற்றும் விநாயகர் உள்ளிட்ட பரிவார தெய்வங்களின் சந்நிதிகளின் மூலஸ்தான விமான கலசத்துக்கு சிவாச்சாரியார்கள் வேத மந்திரம் முழங்க, புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர், பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது.

                                                     எம்.எல்.ஏ

கும்பாபிஷேகத்தில் அரசு தலைமைக் கொறடா தாமரை ராஜேந்திரன் எம்.எல்.ஏ, ராமஜெயலிங்கம் எம்.எல்.ஏ. ஆகியோர் கலந்துகொண்டனர். இலந்தைகூடம் சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதேபோல, பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையில் உள்ள பாவ நாராயண பெருமாள் கோயிலிலும்  கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதை முன்னிட்டு வாஸ்து பூஜை, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், சஹஸ்ரநாம பாராயணம், லஷ்மி ஹோமம் உள்ளிட்ட பல்வேறு யாகசாலை பூஜைகள் நடந்தன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!