ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணநலன்கள், ஜோதிடப் பலன்கள்! #Astrology

ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணநலன்கள், வணங்கவேண்டிய தெய்வம் மற்றும் வழிபடவேண்டிய தலம் பற்றிய விவரங்கள்

ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணநலன்கள், ஜோதிடப் பலன்கள்! #Astrology

ட்சத்திர வரிசையில் ஒன்பதாவது நட்சத்திரம் ஆயில்யம். ஶ்ரீராமபிரான் வனவாசம் புறப்பட்டபோது, உடன் சென்று பணிவிடை செய்வதையே கடமையாகக்கொண்ட லட்சுமணன் பிறந்த நட்சத்திரம் இது. 

ஆயில்யம்

இந்த நட்சத்திரத்தில் பிறந்த நீங்கள், மென்மையான மனமுடையவர்களாக இருப்பீர்கள். கல்வி கற்பதில் ஆர்வம்கொண்டிருப்பீர்கள். மேலும் மேலும் படிக்க வேண்டும் என்று விரும்புவீர்கள். பொலிவான தோற்றம்கொண்டிருப்பீர்கள். சமயோசிதமாக நடந்துகொண்டு காரியம் சாதிப்பீர்கள். இனிமையாகப் பேசி, மற்றவர்களுடைய மனதைக் கவர்ந்துவிடுவீர்கள். நகைச்சுவை உணர்வுடன் பேசுவதால், எப்போதும் ஒரு கூட்டம் உங்களைச் சுற்றி இருக்கும். உடல் வலிமையும் மனோதிடமும்கொண்டிருப்பீர்கள். எதிர்காலத்தைக் கணிக்கும் திறமை பெற்றிருப்பீர்கள். மற்றவர்கள் கூறும் விஷயங்களை அப்படியே ஏற்றுக்கொள்ள மாட்டீர்கள். அடிக்கடி சலனப்படுவீர்கள். இயற்கை எழில் மிகுந்த இடங்களுக்கு அடிக்கடி பயணம் செய்வீர்கள். அடிக்கொருதரம் எதையாவது சாப்பிட்டபடி இருப்பீர்கள். இளம் பருவத்திலேயே சுக்கிரதசை ஏற்படுவதால், உரிய நேரத்தில் திருமணம், குடும்ப வாழ்க்கை ஏற்படும். 

உடல் ஆரோக்கியத்தில் அதிக அக்கறைகொண்டிருப்பீர்கள். பெற்றோரிடம் அன்பும் மரியாதையும் வைத்திருப்பீர்கள். மனைவியை அதிகம் நேசிப்பீர்கள். பிள்ளைகளிடம் அதிகப் பாசம் கொண்டிருப்பீர்கள். அவர்களுடைய வளர்ச்சிக்குத் தேவையான அத்தனை விஷயங்களையும் செய்து தருவீர்கள். எந்த விஷயத்தையும் எடுத்தேன் கவிழ்த்தேன் என்றில்லாமல், திட்டமிட்டுச் செயல்படுவீர்கள். சகல வசதிகளுடன் ஆடம்பரமாக வாழ விரும்புவீர்கள். எந்தச் சூழ்நிலையிலும் தவறான பாதைக்குச் செல்ல மாட்டீர்கள். தவறு செய்தவர்களைத் தட்டிக் கேட்கத் தயங்க மாட்டீர்கள். இலக்கியம், விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொண்டு பரிசும் பதக்கமும் பெறுவீர்கள். மிமிக்ரி செய்யும் கலையைக் கைவரப் பெற்றிருப்பீர்கள். மற்றவர்களை அதிகாரம் செய்யும் அளவுக்கு உயர்ந்த பதவியில் இருப்பீர்கள். வேலை செய்யும் இடத்துக்கு விசுவாசமாக நடந்துகொள்வீர்கள். 

இனி பாதவாரியான பலன்களைப் பார்ப்போம்

ஆயில்யம் 1-ம் பாதம்:

நட்சத்திர அதிபதி - புதன்; ராசி அதிபதி - சந்திரன்; நவாம்ச அதிபதி - குரு

ஆயில்யம் முதல் பாதத்தில் பிறந்த நீங்கள் செயல் திறமை மிக்கவர்களாக இருப்பீர்கள். எப்போதும் எதையாவது செய்துகொண்டே இருப்பீர்கள். நிறையப் பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதில் தீவிரமாக இருப்பீர்கள். அதே நேரம் தவறான வழியில் பணம் சம்பாதிக்க நினைக்க மாட்டீர்கள். மற்றவர்களின் நலனுக்காகச் சிந்திப்பீர்கள்; செயல்படுவீர்கள். மென்மையாகப் பேசுவீர்கள். எப்போதும் மகிழ்ச்சியாகக் காணப்படுவீர்கள். மற்றவர்களின் மகிழ்ச்சிக்காகப் பாடுபடுவீர்கள். எடுத்த காரியத்தை வெற்றிகரமாக முடிப்பீர்கள். அறிவுகூர்மை மிக்கவர்களாக இருப்பீர்கள். ஒரு தொழில்தான் என்றில்லாமல், பல தொழில்களிலும் சிறப்பான அனுபவம் கொண்டிருப்பீர்கள். தொழிலதிபராக இருந்தாலும், வேலை செய்யும் பணியாளர்களையும் உங்கள் குடும்பத்தில் ஒருவராகவே நினைத்து அன்புடன் நடத்துவீர்கள். பிள்ளைகளை நல்ல முறையில் வளர்க்க வேண்டும் என்பதில் கவனமாக இருப்பீர்கள். எந்தச் சூழ்நிலையிலும் மற்றவர்களிடம் உதவி கேட்டுச் செல்ல மாட்டீர்கள். வாழ்க்கையின் மத்தியப் பகுதியில் அனைத்து சுகபோகங்களும் பெற்று மகிழ்ச்சியாக வாழ்வீர்கள்.

சனி

ஆயில்யம் 2-ம் பாதம்:

நட்சத்திர அதிபதி - புதன்; ராசி அதிபதி - சந்திரன்; நவாம்ச அதிபதி - சனி

உயர்ந்த எண்ணம்கொண்டவர்களாக இருப்பீர்கள். பூர்வீகச் சொத்துகளைப் பராமரிப்பதில் அதிக அக்கறை காட்டுவீர்கள். நெறிமுறையுடன் வாழ வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பீர்கள். பெற்றோர்களிடம் மிகுந்த அன்புகொண்டிருப்பீர்கள். அவர்களுடைய முதுமைப் பருவத்திலும் எந்தக் கஷ்டமும் இல்லாமல் பார்த்துக்கொள்வீர்கள். உங்களில் சிலர் காதலில் தோல்வி அடைந்திருப்பீர்கள். எப்போதும் எதையேனும் சிந்தித்தபடி இருப்பீர்கள். எடுத்த காரியத்தை எப்படியும் முடித்தே தீர வேண்டும்  என்பதில் உறுதியாக இருந்து, சாதித்தும் காட்டுவீர்கள். சில நேரங்களில், `மற்றவர்களின் திறமை தனக்கு இல்லையே..!’ என்று ஆதங்கப்படுவீர்கள். இளம் வயதிலேயே குடும்பப் பொறுப்பை ஏற்றுக்கொள்வீர்கள். வறுமையிலும் செம்மையாக வாழ நினைப்பீர்கள். கஷ்டங்களை மற்றவர்களிடம் பகிர்ந்துகொள்ளாமல், மனதுக்குள் போட்டுப் புழுங்குவீர்கள். மனைவி, பிள்ளைகளிடம் அன்பும் அக்கறையும் கொண்டிருப்பீர்கள். அவர்கள் விருப்பப்படிச் செயல்பட அனுமதிப்பீர்கள். அவர்களைக் கட்டுப்படுத்துவதை விரும்ப மாட்டீர்கள். உங்களையும் அவர்கள் கட்டுப்படுத்த அனுமதிக்க மாட்டீர்கள். 

ஆயில்யம் 3-ம் பாதம்:

நட்சத்திர அதிபதி - புதன்; ராசி அதிபதி - சந்திரன்; நவாம்ச அதிபதி - சனி

மன தைரியம் மிக்கவர்களாக இருப்பீர்கள். தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும், தட்டிக் கேட்கத் தயங்க மாட்டீர்கள். சில நேரங்களில் அவசரப்பட்டு எதையாவது செய்துவிடுவீர்கள். பிறகு அதை நினைத்து வருத்தப்படவும் செய்வீர்கள். எதையும் வெளிப்படையாகவும் யதார்த்தமாகவும் பேசுவீர்கள். குடும்பத்தில் அனைவரையும் நேசிப்பீர்கள். ஆனாலும், அதை வெளிக்காட்டிக்கொள்ள மாட்டீர்கள். மற்றவர்கள் புரிந்துகொள்ள முடியாத புதிராக இருப்பீர்கள். ஒரு கட்டத்துக்கு மேல் குடும்பப் பொறுப்புகளை மனைவி, பிள்ளைகளிடம் ஒப்படைத்துவிட்டு, பட்டும் படாமல் ஒதுங்கியிருப்பீர்கள். பூஜை, புனஸ்காரங்களில் ஈடுபாடு காட்ட மாட்டீர்கள். அதே நேரம் கடவுள் நம்பிக்கையும் கொண்டிருப்பீர்கள். மற்றவர்களுக்குக் கொடுக்கும் உறுதிமொழிகளை காற்றில் பறக்கவிட்டு விடுவீர்கள். இளமையில் சில பல ஏமாற்றங்களைச் சந்தித்திருப்பீர்கள். கஷ்டப்பட்டு முன்னேறுவீர்கள். அதனால், ஏழை எளியவர்களின் கஷ்ட நஷ்டங்களைப் புரிந்துகொண்டு உதவி செய்வீர்கள். சில நேரங்களில் அசட்டையின் காரணமாக நல்ல வாய்ப்புகளைத் தவறவிடுவீர்கள். ஆனாலும், வாழ்க்கையில் பல சாதனைகளைச் செய்வீர்கள்.

ஆயில்யம்  4-ம் பாதம்:

நட்சத்திர அதிபதி - புதன்; ராசி அதிபதி - சந்திரன்; நவாம்ச அதிபதி - குரு

எப்போதும் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் இருக்க வேண்டும் என்று நினைப்பீர்கள். தூய்மைக்கு முக்கியத்துவம் கொடுப்பீர்கள். பழைமையை விட்டுக்கொடுக்க மாட்டீர்கள். அதே நேரம் புதுமையையும் ஏற்றுக்கொள்வீர்கள். மற்றவர்களுக்காக ஆடம்பரமாகச் செலவு செய்வீர்கள். நமக்கு மற்றவர்கள் என்ன அறிவுரை சொல்வது என்று நினைப்பீர்கள். அதன் காரணமாக குடும்பப் பெரியவர்களின் அதிருப்தியைச் சம்பாதித்துக்கொள்வீர்கள். கோபத்தில் என்ன பேசுகிறோம் என்பது தெரியாமல் பேசுவீர்கள். வெளுத்ததெல்லாம் பால் என்று நினைத்து பலமுறை ஏமாற்றத்துக்கு ஆளாவீர்கள். படிப்பு காரணமாகப் பெற்றோர்களைப் பிரிந்திருக்க நேரிடும். செலவுக்கு அஞ்ச மாட்டீர்கள் என்பதால், சேமிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்க மாட்டீர்கள். தெய்வப் பணிகளில் ஈடுபாடுகொண்டிருப்பீர்கள். நண்பர்கள் விஷயத்தில் எச்சரிக்கையாக இருப்பீர்கள். தீயவர்களின் சகவாசத்தைத் தவிர்க்க விரும்புவீர்கள்.

திருவெண்காடு

வழிபடவேண்டிய தெய்வம்: ஆதிசேஷன், நாகராஜன்

அணியவேண்டிய ரத்தினம்: மரகதப் பச்சை

வழிபடவேண்டிய தலம்: திருவெண்காடு, நாகர்கோவில் நாகராஜர் 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!