வெளியிடப்பட்ட நேரம்: 06:39 (05/07/2018)

கடைசி தொடர்பு:14:52 (07/07/2018)

வார்த்தைகளை மீறிய பக்தருக்கு ஏற்பட்ட சங்கடம்! - பாபாவின் அருளாடல்கள் #SaiBaba

சாய் பாபாவின் மகிமையை உணர்த்தும் கதை

வார்த்தைகளை மீறிய பக்தருக்கு ஏற்பட்ட சங்கடம்! - பாபாவின் அருளாடல்கள் #SaiBaba

ஷீரடி கிராமத்தில் பாபாவை முதன்முதலில் பார்த்தவர்  மகல்சாபதி என்பவர். தான் பார்த்த மனிதர் ஒரு பெரும் மகான் என்பதையோ, அவரால் ஷீரடி கிராமமே புனிதமடையப்போகிறது என்பதையோ அப்போது அவர் அறிந்திருக்கவில்லை. பாபாவை தரிசித்த நாளிலிருந்து தன் வாழ்க்கையின் பெரும்பகுதி பாபாவுடனேயே இருக்கும் பேற்றைப் பெற்ற பாக்கியசாலி அவர். அவருடைய வாழ்க்கையில் பாபா பல அற்புதங்களை நிகழ்த்தியிருக்கிறார். அவற்றுள் இரண்டு அனுபவங்களை இங்கே பார்ப்போம்...

பாபா

மகல்சாபதி புராணச் சொற்பொழிவு நிகழ்த்துவதில் பிரசித்தி பெற்றவராக இருந்தார். பல ஊர்களுக்கும் சென்று புராணச் சொற்பொழிவுகளை நிகழ்த்துவார்.

ஷீரடிக்கு அருகிலேயே அஸ்தினாபுரி என்ற கிராமம் இருந்தது. அந்த ஊரில் ராம்பால் ஹர்தே என்பவர் வசித்துவந்தார். பாபாவின் தீவிரமான பக்தர். மகல்சாபதி புராணச் சொற்பொழிவு செய்வதில்  புகழ்பெற்றவர் என்பது ஹார்தேக்குத் தெரியும். ஒருமுறை ஷீரடிக்குச் சென்ற ஹார்தே,  தன்னுடைய வீட்டுக்கு வந்து புராணச் சொற்பொழிவு நடத்த வேண்டும் என்றும், சொற்பொழிவு முடிந்ததும் நடைபெறும் விருந்திலும் கலந்துகொள்ள வேண்டும் என்றும் மகல்சாபதியைக் கேட்டுக்கொண்டார்.

மகல்சாபதி எங்கு சென்றாலும், பாபாவின் அனுமதியைக் கேட்காமல் செல்ல மாட்டார். பாபாவின் உத்தரவு கிடைத்தால்தான் செல்வார். எனவே, பாபாவின் அனுமதியைப் பெறச் சென்றார். 

எப்போதும் மகல்சாபதி கேட்டதுமே அனுமதி தரும் பாபா, அன்றைக்குப் பார்த்து, ''நீ அங்கே போக வேண்டாம். அங்கே சண்டை நடக்கப்போகிறது'' என்றார்.

ஆனால், புராணச் சொற்பொழிவு செய்வதில்  மிகவும் ஆர்வம்கொண்டிருந்த காரணத்தால், பாபா சொன்ன வார்த்தைகளைப் பெரிதாக எடுத்துக்கொள்ளாத மகல்சாபதி, புராணச் சொற்பொழிவு நிகழ்த்துவதற்காக அஸ்தினாபுரம் சென்றார். ஹார்தே அவரை மிகவும் அன்புடன் கோலாகலமாக வரவேற்றார். அவருடைய அன்பான உபசரிப்பைப் பார்த்து மகல்சாபதி மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். அவருடைய பிள்ளைகளும் அன்பாக நடந்துகொண்டனர். 'இவ்வளவு அன்பாக நடந்துகொள்ளும் இவர்களின் வீட்டில் எப்படி சண்டை ஏற்படும்?' என்று தனக்குள் கேட்டுக்கொண்டபடி புராணம் வாசிக்கத் தொடங்கினார்.

பாபா

மகல்சாபதி மிகவும் உருக்கமாக புராணம் வாசித்துக்கொண்டிருந்தார். புராணம் கேட்க வந்தவர்களும் மிகவும் ஆர்வத்துடன் கேட்டுக்கொண்டிருந்தனர். 

சிறிது நேரம் சென்றிருக்கும். ஹார்தேயின் பிள்ளைகளுக்கு பசி வந்துவிட்டது. தந்தையிடம் சென்று தங்களுக்குப் பசிப்பதாகவும், சாப்பிட வேண்டும் என்றும் கூறினார்கள். ஆனால், ஹார்தேயின் தந்தை, `புராணம் வாசித்து முடித்ததும் சாப்பிடலாம்’ என்று கூறிவிட்டார்.

ஹார்தேயின் பிள்ளைகள் மிகவும் கோபக்காரர்கள். எடுத்ததற்கெல்லாம் சண்டை போடுவார்கள். தந்தை சொன்னதை அவர்கள் கேட்கவில்லை. `புராணம் படிப்பதை நாங்கள் கேட்கவேண்டிய அவசியமில்லை. நாங்கள் உடனே சாப்பிட வேண்டும்’ என்று கோபமாகச் சொல்லியபடியே சாப்பிடச் சென்றனர். 

அவர்கள் சாப்பிடச் சென்றதைக் கண்டு புராணம் கேட்க வந்தவர்களில் சிலரும் சாப்பிடச் சென்றார்கள். அப்போது ஹார்தேயின் பிள்ளைகளில் ஒருவன், `புராணம் படித்து முடிப்பதற்கு முன்பு ஏன் சாப்பிட வந்தீர்கள்?’ என்று கோபத்துடன் கேட்டான். மற்றவர்களும் அவர்களை விரட்டினர். 

புராணம் கேட்க வந்தவர்கள், ஹார்தே தங்களை அழைத்து அவமானப்படுத்திவிட்டதாக நினைத்து கோபம்கொண்டனர். `உங்கள் தந்தை அழைத்துத்தான் வந்தோம். உங்கள் வீட்டில் விருந்து சாப்பிட வேண்டும் என்ற அவசியம் எங்களுக்கு இல்லை’ என்று கோபத்துடன் கூறினார்கள். இதனால் மேலும் கோபம் கொண்ட ஹார்தேயின் பிள்ளைகள் புராணம் கேட்க வந்தவர்களை அடிக்க முற்பட்டனர். இவர்களும் ஹார்தேயின் பிள்ளைகளை அடிக்கத் தொடங்கினர். 

அதைப் பார்த்த மற்றவர்கள், புராணம் கேட்பதை விட்டுவிட்டு, 'நமக்கு எதற்கு வம்பு?'என்று நினைத்தவர்களாக இடத்தை காலிச் செய்யத் தொடங்கினர். ஹார்தே என்ன செய்வதென்று தெரியாமல் கவலைப்பட்டுக்கொண்டிருந்தார். தனித்துவிடப்பட்ட மகல்சாபதி, மேற்கொண்டு என்ன செய்வதென்று புரியாமல் அங்கிருந்து புறப்பட்டு ஷீரடிக்கு வந்து சேர்ந்தார். மனம் நொந்துபோய் வந்த மகல்சாபதியை கனிவுடன் பார்த்த பாபா, அவரை உணவருந்தும்படி கூறினார்.

பாபாவின் வார்த்தைகளை மீறிச் சென்றதால் தனக்கு ஏற்பட்ட அனுபவத்திலிருந்து பாடம் கற்றுக்கொண்ட மகல்சாபதி, அதன் பிறகு பாபாவின் வார்த்தைகளை மீறி எதையும் செய்வதில்லை என்ற முடிவுக்கு வந்துவிட்டார்.

பாபா

'அனைத்து உயிர்களிலும் நான் இருக்கிறேன்' என்பது பாபாவின் வாக்கு. அதை நிரூபிக்கும் வகையில் மகல்சாபதி தொடர்புடைய மற்றொரு நிகழ்ச்சியைப் பார்ப்போம்...

மகல்சாபதி என்னதான் பாபாவின் அருகிலேயே இருக்கும் பாக்கியம் பெற்றிருந்தாலும், சில நேரங்களில் தம்மை மீறி சில தவறுகளைச் செய்துவிடுவார்.

துவாரகாமாயிக்கு அருகில் வயதான நாய் ஒன்று இருந்தது. தினமும் அந்த நாய்க்கு உணவு தருவது மகல்சாபதியின் கடமையாக இருந்தது. ஒருநாள் ஏதோ நினைவில் மூழ்கியிருந்த மகல்சாபதியிடம் அந்த நாய் நெருங்கி வந்தது. மகல்சாபதி அந்த நாயை விரட்டினார். அது போக மறுத்து அவரையே சுற்றிச் சுற்றி வந்தது. கோபத்தில் ஒரு கம்பை எடுத்து நாயை அடித்துவிட்டார். கதறிக்கொண்டே நாய் ஓடிவிட்டது.

அன்றிரவு பாபா துவாரகாமாயில் படுத்துக்கொண்டிருந்தார். மகல்சாபதி உட்பட சில பக்தர்களும் அங்கே இருந்தனர். அப்போது பாபா அவர்களிடம், `எல்லா உயிர்களிடமும் அன்பு செலுத்த வேண்டும் என்பதுதான் என் உபதேசம். ஆனால், என்னிடம் அன்பு செலுத்துபவர்கள், அதை மட்டும் அடித்து விரட்டுகிறார்கள். வாயில்லா ஜீவனை துன்புறுத்தலாமா, அது பாவமில்லையா?’ என்று கூறினார். மற்றவர்களுக்கு பாபா சொன்னதன் அர்த்தம் விளங்கவில்லை. ஆனால், மகல்சாபதி பாபா சொல்ல வந்த விஷயத்தைப் புரிந்துகொண்டார். அது தம்மைக் குறித்தே சொல்லப்பட்டது என்ற தெளிவும் பெற்றார். 

மறுநாள் முதல் மகல்சாபதி அந்த நாய்க்கு வழக்கம்போல் உணவு கொடுத்ததுடன், வழக்கத்துக்கு மேலாக அந்த நாயை நேசிக்கவும் தொடங்கினார். 

 

பாபா பற்றி மேலும் தெரிந்துக்கொள்ள இங்கே க்ளிக் செய்யவும்...

 


டிரெண்டிங் @ விகடன்