மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணநலன்கள், ஜோதிடப் பலன்கள்! #Astrology

மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தாங்கள் இருக்கும் இடத்தில் தலைமைப் பொறுப்பில் இருப்பார்கள் என்பதை பெரும்பாலும் நடைமுறையில் பார்க்க முடிகிறது.

மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணநலன்கள், ஜோதிடப் பலன்கள்! #Astrology

`கத்தில் பிறந்தவர்கள் ஜகத்தை ஆள்வார்கள்' என்பது ஜோதிடப் பழமொழி. மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எல்லோரும் உலகத்தை ஆளமுடியாது என்பது யதார்த்தம். ஆனால், மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தாங்கள் இருக்கும் இடத்தில் தலைமைப் பொறுப்பில் இருப்பார்கள் என்பது பெரும்பாலும் நடைமுறையில் பார்க்க முடிகிறது. 

மகம்

மகம் நட்சத்திரத்தின் அதிபதி ஞானகாரகனான கேது பகவான். இந்த நட்சத்திரத்தில் பிறந்த நீங்கள் கவி பாடுவதில் வல்லவராக இருப்பீர்கள். அனைத்து விதமான செல்வங்களையும் பெற்றிருப்பீர்கள். நினைத்ததை முடிக்கும் வல்லமை பெற்றவர்களாக இருப்பீர்கள். அடிக்கடி கற்பனை உலகில் சஞ்சரிப்பீர்கள். விவாதங்களில் மற்றவர்களால் வெல்ல முடியாதவர்களாக இருப்பீர்கள். ஆழ்ந்த தெய்வ பக்தி கொண்டிருப்பீர்கள். வாழ்க்கையில் சாதிக்கவேண்டும் என்று நினைப்பீர்கள். சாஸ்திரங்கள் கூறும் வழிமுறையில் வாழ விரும்புவீர்கள். பல துறைகளிலும் ஞானம் பெற்றிருப்பீர்கள். படிப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டிருப்பீர்கள். கோபம் கொண்டாலும் உடனே மறந்துவிடுவீர்கள். எல்லோரிடமும் அன்பு பாராட்டுவீர்கள். எப்போதும் சுறுசுறுப்பாகக் காணப்படுவீர்கள். இளமையிலேயே சுக்கிர தசை வருவதால் அனைத்துச் சுகங்களையும் அனுபவிப்பீர்கள். 

விநாயகர்

மற்றவர்களிடம் கை கட்டி வேலை பார்ப்பதை விட மற்றவர்களுக்கு வேலை கொடுக்கும் அளவுக்குச் சுயதொழிலில் ஈடுபடுவதையே விரும்புவீர்கள். எதிலும் வெளிப்படையாக இருப்பீர்கள். உள்ளதை உள்ளபடியே பேசுவீர்கள். மற்றவர்கள் உங்கள் விஷயத்தில் தலையிடுவதை விரும்ப மாட்டீர்கள். கலைகளைக் கற்பதிலும் ஆராய்ச்சி செய்வதிலும் நாட்டம் கொண்டிருப்பீர்கள். தன்னம்பிக்கை மிக்கவர்களாக இருப்பீர்கள். திருமணத்தைப் பொறுத்தவரை காதல் திருமணத்துக்கே முன்னுரிமை தருவீர்கள். விதவிதமான வாகனங்களை வாங்குவதில் விருப்பம் கொண்டிருப்பீர்கள். குறிப்பிட்ட வயதுக்குப் பிறகு ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். அதனால், குடும்பத்தில் அவ்வளவாக அக்கறை கொள்ளமாட்டீர்கள். புராண, இதிகாசங்களிலும், சாஸ்திரங்களிலும் தேர்ச்சி பெற்றிருப்பீர்கள். 
இனி பாதவாரியான பலன்களைப் பார்ப்போம்

மகம் 1-ம் பாதம்:

நட்சத்திர அதிபதி - கேது; ராசி அதிபதி - சூரியன்; நவாம்ச அதிபதி - செவ்வாய்

குடும்பத்தின் மீது மிகுந்த பாசம் கொண்டிருப்பீர்கள். வாழ்க்கைத் துணை மற்றும் பிள்ளைகள் தவறு செய்தால் அன்பாகச் சுட்டிக்காட்டித் திருத்துவீர்கள். ராஜதந்திரம் மிக்கவராக இருப்பீர்கள். தேசத்தின் மீது அதீதப் பற்றுள்ளவராக இருப்பீர்கள். சமயம் பார்த்து எதிரிகளை வீழ்த்துவதில் வல்லவராக இருப்பீர்கள். சகோதரர்களின் ஆதரவைப் பெற்றிருப்பீர்கள். வழக்குகளில் வெற்றியே பெறுவீர்கள். ஆட்சிப் பொறுப்பில் இருப்பவர்களின் அறிமுகமும் அவர்களால் வாழ்க்கையில் உயர்வும் பெறுவீர்கள். அரசியலில் செல்வாக்குடன் திகழ்வீர்கள். ஆன்மிகத்தில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டிருப்பீர்கள். காரிய சாதனைக்காக அடிக்கடி விரதமிருந்து வழிபடுவீர்கள். அடிக்கடி முன்கோபம் கொண்டாலும் உடனே மறந்துவிடுவீர்கள். வசதியான வீடு, வாகனம் போன்ற வசதிகளைக் குறைவின்றி பெற்றிருப்பீர்கள். அதிகமாக ஆசைப்பட்டு, அது கிடைக்காதபோது உங்களையே வருத்திக்கொள்வீர்கள். தங்கள் இனத்தின் முன்னேற்றத்துக்காக அயராமல் உழைப்பீர்கள். 

மகம் 2-ம் பாதம்:

நட்சத்திர அதிபதி - கேது; ராசி அதிபதி - சூரியன்; நவாம்ச அதிபதி - சுக்கிரன்

நவாம்ச அதிபதி சுக்கிரன் என்பதால் மற்றவர்களை வசீகரிக்கும் வகையில் அழகான தோற்றத்துடன் காணப்படுவீர்கள். பெற்றோர் மற்றும் மனைவி, குழந்தைகளை நேசிப்பீர்கள். துரோகம் செய்தவர்களையும் எதிரிகளையும் மன்னித்து அன்பு செலுத்துவீர்கள். உதவி கேட்டு வருபவர்களுக்கு உங்களால் முடிந்த உதவியைச் செய்வீர்கள். புதிய ஆடை, ஆபரணங்களை விரும்புவதிலும், தேர்வு செய்வதிலும் நிபுணராக இருப்பீர்கள். உங்கள் தேர்வு மற்றவர்களால் பாராட்டப்படும். இசை, நடனம் போன்ற கலைகளில் ஆர்வத்துடன் காணப்படுவீர்கள். வாகனங்களை அடிக்கடி மாற்றிக்கொண்டே இருப்பீர்கள். பயணத்தில் ஆர்வம் கொண்டவர்களாக இருப்பீர்கள். ஒரு பெரிய கூட்டமே உங்களைச் சுற்றிக்கொண்டிருக்கும். தெய்வப் பணிகளில் ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள். உடன் பிறந்தவர்களுக்காக விருப்பத்துடன் விட்டுக்கொடுப்பீர்கள். மற்ற மொழிகளைக் கற்பதில் ஆர்வம் கொண்டிருப்பீர்கள். 

சூரியன்

மகம் 3-ம் பாதம்:

நட்சத்திர அதிபதி - கேது; ராசி அதிபதி - சூரியன்; நவாம்ச அதிபதி - புதன்

சத்தியத்துக்கும் நேர்மைக்கும் முக்கியத்துவம் கொடுப்பீர்கள். பக்கத்தில் இடியே விழுந்தாலும் அஞ்சமாட்டீர்கள். எப்போதும் ஏதேனும் ஒன்றைப் பற்றி சிந்தித்துக் கொண்டே இருப்பீர்கள். குடும்பத்தில் தன் மனைவி, பிள்ளைகளிடம் காட்டும் பிரியத்தை விட சகோதரர்களின் நலனில் பிரியமும் அக்கறையும் கொண்டிருப்பீர்கள். உதவி செய்யும் நண்பர்களைப் பெற்றிருப்பீர்கள். பலதரப்பட்ட புத்தகங்களைப் படிப்பதில் ஆர்வம் கொண்டவர்களாக இருப்பீர்கள். விவாதங்களில் மற்றவர்களைத் திணறச் செய்வதில் வல்லவராக இருப்பீர்கள். மற்றவர்களால் புரிந்துகொள்ள முடியாதவர்களாக இருப்பீர்கள். மற்றவர்களை சுலபத்தில் நம்பிவிட மாட்டீர்கள். பலருடைய வாழ்க்கை முன்னேற்றத்துக்குப் பாடுபடுவீர்கள். வெளிப்படையாகப் பேச மாட்டீர்கள். கதை, கவிதை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்களாக இருப்பீர்கள். ஆன்மிகச் சொற்பொழிவுகள் நிகழ்த்தி பணம் சம்பாதிப்பீர்கள். 

மகம் 4-ம் பாதம்

நட்சத்திர அதிபதி - கேது; ராசி அதிபதி - சூரியன்; நவாம்ச அதிபதி - சந்திரன்

தற்பெருமை கொண்டவர்களாக இருப்பீர்கள். கலை இலக்கியங்களில் ஆர்வம் கொண்டிருப்பீர்கள். நடப்பதை விட்டுவிட்டு பறப்பதற்கு ஆசைப்படுவீர்கள். அடிக்கடி கடந்த கால சம்பவங்களை நினைத்து வருத்தப்படுவீர்கள். மனதில் எண்ணங்கள் மாறி மாறித் தோன்றி அலைக்கழித்தபடி இருக்கும். பள்ளி, கல்லூரிக்குச் சென்று படிப்பதை அவ்வளவாக விரும்பமாட்டீர்கள். மற்றவர்கள் என்ன தனக்கு அறிவுரை சொல்வது என்று அலட்சியமாக நடந்துகொள்வீர்கள். நீங்கள் நினைப்பதைப் போல்தான் நடந்துகொள்வீர்கள். மனைவி, குழந்தைகளிடம் அன்பு காட்டுவதுடன் கண்டிப்பாகவும் நடந்துகொள்வீர்கள். வாழ்க்கையில் முன்னேற முடியவில்லையே என்று அடிக்கடி ஆதங்கப்பட்டுக்கொள்வீர்கள். வாழ்க்கையில் ஏற்றங்களையும் இறக்கங்களையும் சந்திப்பீர்கள். அடிக்கடி உங்களை நீங்களே தாழ்த்திக்கொள்வீர்கள். திறமைகள் இருந்தும் முன்னேற முடியவில்லையே என்று ஆதங்கப்படுவீர்கள்.

வழிபடவேண்டிய தெய்வம்: விநாயகர், சூரிய பகவான்

அணியவேண்டிய நவரத்தினம்: புஷ்பராகம்

வழிபடவேண்டிய தலங்கள்: பிள்ளையார்பட்டி, சூரியனார்கோவில்
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!