வெளியிடப்பட்ட நேரம்: 08:09 (08/07/2018)

கடைசி தொடர்பு:08:09 (08/07/2018)

`கடவுளின் ராஜ்ஜியத்துக்குள் நுழைய சிறு பிள்ளைகளாக வேண்டும்!’ - பைபிள் கதைகள் #BibleStories

`கடவுளின் ராஜ்ஜியத்துக்குள் நுழைய சிறு பிள்ளைகளாக வேண்டும்!’ - பைபிள் கதைகள் #BibleStories

ருநாள், இயேசுவும் அவருடைய சீடர்களும் நீண்ட தூரம் பயணம் செய்துவிட்டு ஓரிடத்தில் ஓய்வெடுத்துக்கொண்டிருந்தார்கள். அப்போது இயேசு சீடர்களிடம் பேசிக்கொண்டிருந்தார். திடீரென அவர், `வழிப்பயணத்தின்போது உங்களில் சிலர் சண்டை போட்டீர்களே... எதற்காக அப்படிச் சண்டை போட்டீர்கள்?' என்று கேட்டார். இதைச் சற்றும் எதிர்பாராத அந்தச் சீடர்கள் பேரதிர்ச்சியடைந்தார்கள். சீடர்கள் தங்களுக்குள் நடந்த இந்தச் சண்டை பற்றி இயேசுவுக்குத் தெரியாது என்றே நினைத்திருந்தார்கள். ஆனால் இயேசுவுக்கோ, சீடர்களுக்குள் நடந்த அந்தச் சண்டையின் முழு விவரமும் தெரிந்திருந்தது. சீடர்கள் இதற்கு என்ன சொல்வார்கள், அவர்களிடமிருந்து என்ன எதிர்வினை வரும் என்பதைப் பார்க்கவே இப்படியொரு கேள்வியைக் கேட்டார். ஆனால், சீடர்களோ வாய் திறக்காமல் மௌனம் சாதித்தார்கள்.

பைபிள் கதைகள்

இயேசுவின் சீடர்களான தங்களுக்குள் யார் மிகப் பெரியவர் என்பது குறித்தே அவர்களுக்குள் அந்தச் சண்டை நடந்திருக்கிறது. அதாவது யார் பெரியவர் என்பதல்ல பிரச்னை; அத்தனைபேரில் யார் அதிக முக்கியத்துவம் வாய்ந்தவர்  என்பதே பிரச்னை. இதைப் புரிந்துகொண்ட இயேசு கிறிஸ்து, இப்படி எல்லோரையும்விட பெரியவனாக இருக்க ஆசைப்படுவது என்பது சரியானதல்ல என்பதை உணர்த்த விரும்பினார். அதை தன் சீடர்களிடம் எப்படி எடுத்துச் சொல்வது என்று யோசித்தார். சிறுவன் ஒருவனை அழைத்து, அவனைச் சீடர்களுக்கு முன்னால் நிறுத்தினார். பிறகு சீடர்களை நோக்கி, `இதை நீங்கள் கண்டிப்பாகத் தெரிந்துகொள்ள வேண்டும் என்று விரும்புகிறேன்' என்றார். சீடர்கள் இயேசுவை உற்றுநோக்கியபடி அவர் என்ன சொல்லப்போகிறார் என்பதை எதிர்பார்த்துக் காத்திருந்தார்கள்.

``நீங்கள் எல்லோரும் சிறுபிள்ளைகளைப்போல மாறினால் தவிர, கடவுளின் ராஜ்ஜியத்துக்குள் ஒருபோதும் நுழைய மாட்டீர்கள். இதோ... இந்தப் பிள்ளையைப்போல ஆகிறவனே கடவுளுடைய ராஜ்ஜியத்தில் பெரியவனாக இருப்பான்’' என்று சொன்னார். இயேசு இப்படிச் சொன்னது நமக்கு மட்டுமல்ல... அந்தச் சீடர்களுக்கும் சரியாகப் புரியவில்லை. நம்மைப்போலவே அவர்களுக்கும் ஒரே குழப்பம்.
சிறிது இடைவெளிவிட்டு மீண்டும் பேசினார் இயேசு... 

இயேசு கிறிஸ்து

``சிறு பிள்ளைகள் மற்றவர்களைவிட பெரியவர்களாக இருக்க வேண்டும் என்றோ, அதிக முக்கியமானவர்களாக இருக்க வேண்டும் என்றோ ஆசைப்பட மாட்டார்கள். எனவே, இந்தச் சிறுவனைப்போல இருக்க நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டும். தங்களைத் தாங்களே பெரியவர்களாக நினைத்துக்கொண்டு, முக்கியமானவர்களாக இருக்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டு உங்களுக்குள் நீங்களாகவே சண்டை போட்டுக்கொள்ளக் கூடாது’’ என்றார்.

சிறு குழந்தைகளின் மீது தமக்கு எவ்வளவு அக்கறை இருக்கிறது என்பதை இயேசு பல்வேறு சூழல்களில் எடுத்துரைத்திருக்கிறார். அது மட்டுமல்ல... `யார் பெரியவன்?’ என்ற மனப்பான்மையை வேரறுக்க வேண்டும் என்பதற்காக, சிறு குழந்தைகளை உதாரணமாகச் சொல்லி அவர்களைப்போல மாசுபடாதவர்களாக, பதவிக்காக ஆசைப்படாதவர்களாக இருக்க வேண்டுமென்பதற்காகவே இப்படி சொல்லியிருக்கிறார்.

இயேசுவும் அவருடைய சீடர்களும்

இந்த நிலையில், சில மாதங்களுக்குப் பிறகு இயேசுவைப் பார்ப்பதற்காக சிலர் தங்களது குழந்தைகளை அழைத்து வந்தார்கள். அப்போது, அவர்களை உள்ளேவிடாமல் தடுக்கும் முயற்சியில் அந்தச் சீடர்கள் செயல்பட்டார்கள். இதைக் கண்டதும் இயேசு சீடர்களை நோக்கி,``பிள்ளைகளை என்னிடம் வரவிடுங்கள். அவர்களைத் தடுக்க வேண்டாம். ஏனென்றால், கடவுளுடைய ராஜ்ஜியம் அவர்களைப்போன்ற ஆட்களுக்குத்தான் சொந்தம்’’ என்கிறார். அத்துடன் அந்தக் குழந்தைகளைத் தன் கையில் தூக்கி வைத்துக்கொண்டு, அவர்களை ஆசீர்வதித்தார். இயேசு கிறிஸ்து சிறு குழந்தைகள் மீது எந்த அளவுக்கு பாசம் வைத்திருக்கிறார், அவர்களை நேசிக்கிறார் என்பதற்கு இதைவிட வேறு உதாரணங்கள் வேண்டுமா?

இயேசுவின் இந்த நடவடிக்கைகள் சீடர்களைச் சிந்திக்கவைத்தது. 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்