வெளியிடப்பட்ட நேரம்: 16:26 (09/07/2018)

கடைசி தொடர்பு:16:26 (09/07/2018)

சிவனே சிவனாரை வழிபட்ட அருள்திருத்தலம் எது தெரியுமா?

தேவர்களும் சரி, விநாயகர், முருகர் போன்ற மற்ற தெய்வங்களும் சரி தங்களுக்குச் சாபத்தின் காரணமாகச் சோதனையும் துன்பங்களும் ஏற்பட்ட காலங்களில், மூலப் பரம்பொருளான சிவபெருமானை வழிபட்டே சாப விமோசனம் பெற்றிருக்கிறார்கள். தெய்வங்கள் வழிபட்ட சிவத் தலங்கள் எண்ணற்றவை இருந்தாலும், சில சிவத் தலங்களை இங்கே பார்ப்போம்...

சிவனே சிவனாரை வழிபட்ட அருள்திருத்தலம் எது தெரியுமா?

பிரபஞ்சத்தின் வடிவமாகவும், அணுவுக்குள் இயக்கமாகவும் இருப்பவர் பரம்பொருளான சிவபெருமான். அவர் அருவம், அருவுருவம், உருவம் என்று அனைத்து நிலைகளிலும் அருள்புரிந்து படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் எனும் ஐவகைத் தொழில்களையும் மேற்கொண்டு, உலக ஜீவராசிகளை மட்டுமல்லாமல், தேவர்களையும் மற்ற தெய்வங்களையும் காத்து அருள்புரிகிறார். தேவர்களும் சரி, விநாயகர், முருகர் போன்ற மற்ற தெய்வங்களும் சரி தங்களுக்குச் சாபத்தின் காரணமாகச் சோதனையும் துன்பங்களும் ஏற்பட்ட காலங்களில், மூலப் பரம்பொருளான சிவபெருமானை வழிபட்டே சாப விமோசனம் பெற்றிருக்கிறார்கள். தெய்வங்கள் வழிபட்ட சிவத்தலங்கள் எண்ணற்றவை இருந்தாலும், சில சிவத்தலங்களை இங்கே பார்ப்போம்...

சிவத்தலங்கள்

முருகன் வழிபட்ட தலம் - குமரக்கோட்டம், சேனாதிபதீஸ்வரர் 

குமரக்கோட்டம் திருத்தலம்

`படைப்புக் கடவுள் நான். அனைத்தையும் அறிந்தவன் நான் ஒருவன் மட்டுமே' என்று கர்வம் ஏற்பட்டது பிரம்மதேவருக்கு. அவருடைய கர்வத்தைப் போக்கத் திருவுள்ளம் கொண்ட முருகப் பெருமான், அவரிடம் பிரணவப் பொருளை விளக்கும்படி கேட்டார். கர்வத்தின் காரணமாகப் பிரணவப் பொருள் தெரியாமல் விழித்த பிரம்மதேவரை சிறையில் அடைத்து, தானே படைக்கும் தொழிலை மேற்கொண்டார். நடந்த நிகழ்ச்சியை அறிந்துகொண்ட சிவபெருமான், முருகனிடம் பிரணவப் பொருளின் விளக்கம் கேட்டார். சீடராக இருந்து கேட்டால் உபதேசிக்கப்படும் என்று முருகப்பெருமான் கூறவே, சிவபெருமானும் சீடனாக இருந்து உபதேசம் பெற்றார். 

குருவுக்கு நிகரான தன் தந்தை சிவபெருமானை மண்டியிடச் செய்த தோஷம் நீங்கவேண்டும் என்பதற்காக, நகரங்களில் சிறந்த காஞ்சி நகரை அடைந்து, ஒரு மாமரத்தினடியில் சிவலிங்கப் பிரதிஷ்டை செய்து வழிபட்டார். அவருடைய வழிபாட்டில் மகிழ்ந்த சிவபெருமான், அவருடைய மனக் குறையைப் போக்கி, அவருக்கு, `சேனாபதீஸ்வரர்' என்னும் திருப்பெயரும் வழங்கினார். அந்தத் தலம்தான் காஞ்சி குமரக்கோட்டம். அந்தக் கோயிலில் முருகக் கடவுள் மாமரத்தினடியில், `மாவடிக் கந்தன்' என்ற பெயரில் அருள்கிறார். இவரை வழிபட்டால், வாழ்க்கையில் நிம்மதியும் மகிழ்ச்சியும் ஏற்படுவதுடன், ஞானமும் ஸித்திக்கும்.

அம்பிகை வழிபட்ட தலம் - கபாலீஸ்வரர், மயிலாப்பூர்

கபாலீஸ்வரர் திருத்தலம்

கயிலையில் ஒருமுறை சிவபெருமான் பார்வதி தேவிக்கு உபதேசம் செய்துகொண்டிருந்தார். அப்போது அங்கு ஒரு மயில் தன் தோகைகளை விரித்து அசைந்தாடி வந்தது. உபதேசத்தைக் கேட்காமல் அதன் அழகில் மயங்கி விட்டாள் அம்பிகை. அம்பிகையின் மனநிலையை அறிந்துகொண்ட சிவபெருமான், `உபதேசத்தைக் கேட்காமல் மயிலின் அழகில் மயங்கிய நீ, பூமியில் மயிலாகப் பிறப்பாய்' என்று சபித்து விட்டார்.

தன் தவற்றுக்கு வருந்திய அம்பிகை, ஈசனிடம் மன்னிப்புக் கேட்டு, சாப விமோசனம் அருளும்படி பிரார்த்தித்தாள். இறைவனும் மனமிரங்கி, `பூமியில் மயிலாகப்பிறந்து எம்மை வழிபட்டு வா. உரிய காலத்தில் நாம் உனக்குத் தரிசனம் தந்து சாப விமோசனமும் வழங்குவோம்' என்று கூறினார். அதன்படி அம்பிகை மயில் வடிவம் கொண்டு, மயிலாப்பூர் என்னும் தலத்தை அடைந்தாள். அங்கே, புன்னை மரத்தடியில் லிங்கத்தை நிறுவி, வணங்கி சாப விமோசனம் பெற்றாள். அம்பிகை சாப விமோசனம் பெற்ற தலமே கபாலீஸ்வரர் கோயில். அம்பிகை மயில் வடிவம்கொண்டு இறைவனை வணங்கியதால், `திருமயிலை' என்றும் `மயிலாப்பூர்' என்றும் அழைக்கப்படுகிறது. மயில் வடிவம் எடுத்த அம்பிகை கற்பகவல்லித் தாயாக அருள்புரிகிறாள். `கயிலையே மயிலை; மயிலையே கயிலை' என்றுபோற்றப்படும் இங்குதான் கபாலீஸ்வரர் அருளால், பாம்பு தீண்டிய பூம்பாவையை திருஞானசம்பந்தர் உயிர் பிழைக்கச் செய்தார்.  இந்தத் தலத்தில் வழிபடுவோருக்கு மன நிம்மதி, தீராத நோய்கள் தீரும் என்பது ஐதீகம்.

திருமால் வழிபட்ட தலம் -  வீழிநாதேஸ்வரர், திருவீழிமிழலை

வீழிநாதேஸ்வரர் திருத்தலம்

சிவனாரின் நெற்றியிலிருந்து வழிந்த வியர்வைத் துளியிலிருந்து ஜலந்தரன் என்னும் அசுரன் தோன்றினான். தேவர்களையும், பிரம்மா, விஷ்ணு போன்ற தெய்வங்களையும் வெற்றி கொண்ட ஜலந்தரன், சிவபெருமானையும் எதிர்த்துப் போரிடச் சென்றான். சிவனார், தரையில் ஒரு சக்கரத்தை வரைந்து, `அதைப் பெயர்த்து எடுத்த பிறகு தன்னுடன் போருக்கு வரலாம்' என்று கூறினார். ஜலந்தரன் அந்தச் சக்கரத்தைப் பெயர்த்தெடுத்ததுடன், அதைத் தன் தலையிலும் வைத்துக் கொண்டான். அதன் விளைவாக அவன் தன் அழிவை தானே தேடிக்கொண்டான். அனைத்து உலகங்களையும் அழிக்கவல்ல அந்த சுதர்சன சக்கரத்தைப் பெற விரும்பிய திருமால், சிவபெருமானைக் குறித்துத் தவமியற்றினார். 

ஆயிரத்தெட்டு தாமரை மலர்களைப் பறித்து வந்த திருமால் ஆதிசிவனாரை பூஜித்தார். அவரை சோதிக்கத் திருவுள்ளம் கொண்ட சிவபெருமான், ஒரு தாமரை மலரை மறைத்துவிட்டார். மனம் தளராத திருமால், தன் கண்களில் ஒரு கண்ணையே பிடுங்கி சிவபெருமானுக்கு அர்ச்சிக்கத் துணிந்தார். அவருடைய  உறுதியான பக்திக்கு இரங்கிய சிவபெருமான், திருமாலுக்கு தரிசனம் தந்ததுடன், சுதர்சன சக்கரத்தையும் வழங்கி அருள்புரிந்தார்.

திருமால் 1008 மலர்கள் மூலம் சிவபெருமானை வணங்கி சக்கராயுதத்தைப் பெற்ற தலம் திருவீழிமிழலை. திருமாலுக்குச் சக்கரத்தை வழங்கிய சிவபெருமான் வீழிநாதேஸ்வரராக அருள்புரிகிறார். இவரை வணங்கினால் கல்யாண வரம் அருள்வார் என்பது நம்பிக்கை. 

பிரம்மன் வழிபட்ட  தலம் -  பிடவூர், பிரம்மபுரீஸ்வரர் 

பிடவூர் திருத்தலம்

இந்த உலகத்தைப் படைத்த பிரம்மனுக்கும் சிவனாரைப் போன்றே ஐந்து தலைகள் இருந்ததால் தன்னையும், சிவனையும் ஒன்றாகக் கருதி ஆணவம் கொண்டார். பிரம்மாவுக்குப் பாடம் புகட்ட விரும்பிய சிவன், பிரம்மாவின் ஐந்து தலைகளில் ஒன்றைக் கொய்து, படைப்புத் தொழிலையும் பறித்துவிட்டார். தனது தவற்றை காலம் கடந்தே உணர்ந்த நான்முகன், சிவபெருமானிடம்  சாப விமோசனம் அருளும்படிக் கேட்டார். பூலோகத்தில் ஆங்காங்கே சிவலிங்கத்தை நிறுவித் தொடர்ந்து வழிபட்டு வந்தால், உரிய நேரத்தில் விமோசனம் தருவதாக சிவபெருமான் தெரிவித்தார். அதன்படி பூமியில் பல இடங்களில் சிவலிங்க பிரதிஷ்டை செய்து வழிபட்ட பிரம்மதேவர், பிடவூர் என்னும் தலத்தில் சிவபெருமானை வழிபட்டபோது, சிவபெருமான் அவருக்கு தரிசனம் தந்து பிரம்மதேவரின் சாபத்தை நீக்கியதுடன், படைப்புத் தொழில் மேற்கொள்வதற்கான ஆற்றலையும் வழங்கினார். பிடவூர் தலம்தான் பிரசித்தி பெற்ற திருப்பட்டூர் தலம் என்பது குறிப்பிடத் தக்கது. பிரம்மதேவர் வழிபட்டதால் இந்தத் தலத்து இறைவன் பிரம்மபுரீஸ்வரர் என்னும் திருப்பெயர் கொண்டு அருள்கிறார். இவரை வழிபட்டால் நம்முடைய தலைவிதியை மாற்றி நல்வாழ்க்கை அருள்புரிவார் என்பது ஐதீகம்.

கணபதி வழிபட்ட தலம் - கணபதீஸ்வரர்,  திருச்செங்காட்டங்குடி

கணபதி

மகத நாட்டை ஆண்ட மாகத மன்னன் - விபுதை தம்பதிக்கு யானைத் தலையும், மனித உடலும் கொண்ட மகன் பிறந்தான். அவனுக்குக் கஜமுகாசுரன் என்று பெயரிட்டு வளர்த்தனர். சிறந்த சிவ பக்தனான இவன், சிவனாரை நோக்கித் தவமிருந்து அரிய வரங்களைப்  பெற்றான். எவராலும் அழிக்கமுடியாத ஆற்றலும், தேவர்களே குற்றேவல் செய்யும் பாக்கியமும் பெற்ற கஜமுகன், விசித்ரகாந்தி என்பவளை மணந்து, மதங்கபுரத்தைத் தலைநகராகக் கொண்டு ஆளத் தொடங்கினான். 

தேவர்கள் சிவபெருமானிடம் சென்று முறையிட்டனர். சிவபெருமானின் அருளால் தோன்றிய ஆனைமுகக் கடவுள், தன் வலது தந்தத்தை உடைத்து அதையே ஆயுதமாக்கி, கஜமுகாசுரன் மீது ஏவி, அவனைக் கொன்றார். சிவ பக்தனான கஜமுகனைக் கொன்றதால் ஏற்பட்ட தோஷத்தைப் போக்கிக்கொண்ட தலம்தான் கணபதீச்சுரம் என்னும் பெயருடைய திருச்செங்காட்டங்குடி. கணபதிக்கு அருள்புரிந்த சிவபெருமான், `கணபதீஸ்வரர்' என்னும் திருப்பெயருடன் அருள்கிறார். இவரை வழிபடும் பக்தர்களின் அனைத்து தோஷங்களும் நீங்குவதாக பக்தர்கள் நம்பிக்கையுடன் சொல்கிறார்கள்.

சிவனார் சிவனை வழிபடும் தலம் - திருவண்ணாமலை.

திருவண்ணாமலை திருத்தலம்

நம்முடைய துன்பம் தீருவதற்காக நாம் இறைவனை வழிபடுவது இயல்புதான். ஆனால், நம் பொருட்டு, நம் துன்பங்கள் எல்லாம் நீங்கி மகிழ்ச்சியாக வாழவேண்டும் என்பதற்காக, இறைவன் தன்னைத் தானே வழிபடும் அற்புத அருளாடலும் இந்தப் புண்ணிய பூமியில் நடைபெறவே செய்கிறது. ஈசனின் அற்புத அருளாடல் நிகழும் அந்தத் தலம்தான் திருவண்ணாமலை திருத்தலம். திருவண்ணாமலையில் கிரிவலத்தின்போது சிவபெருமானே அருணாசலேஸ்வரரை வழிபடுவதாக ஐதீகம். கிரிவலம் வருவதன் மூலம் அனைத்துப் பாவங்களிலிருந்தும் விடுபடலாம் என்பது ஐதீகம்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்