வெளியிடப்பட்ட நேரம்: 19:20 (11/07/2018)

கடைசி தொடர்பு:12:20 (12/07/2018)

தென்னிந்திய வட இந்தியக் கலைகளின் சங்கமம்... பட்டடக்கல் தொகுப்புக் கோயில்கள்! #Pattadakal

படையெடுத்து வந்த சாளுக்கியன் சிற்பக்கலைக்கு மரியாதை தந்த வரலாறு! - பட்டடக்கல் கற்கோயில்கள்! #Pattadakal

தென்னிந்திய வட இந்தியக் கலைகளின் சங்கமம்... பட்டடக்கல் தொகுப்புக் கோயில்கள்! #Pattadakal

சில சிற்பங்களையும் கோயில்களையும் எவ்வளவு நேரம் நின்று ரசித்தாலும் அதைக் கடந்து செல்வதற்கு மனம் வராது. அதே இடத்தில் நின்று தன்னிலை மறந்து பார்த்துக்கொண்டிருப்போம். அது போன்ற சிற்பங்களை நாம் மாமல்லபுரம், தஞ்சை, தாராசுரம் போன்ற ஊர்களில் பார்த்திருப்போம். கோயில்களில் சில சிற்பங்கள் மட்டுமே நமது மனதைக் கவர்ந்து அதே இடத்தில் நிற்கவைக்கும். ஆனால், மலபிரபா நதியின் கரையில் அமைந்திருக்கும் பட்டடக்கல் தொகுப்புக் கோயில் சிற்பங்களில் ஒவ்வொன்றும், நம்மை நகரவிடாமல் ஒரே இடத்தில் நிற்க வைத்துவிடும். 'பட்டடக்கல்', சாளுக்கியர்களின் முற்காலத் தலைநகர்களில் ஒன்று. பட்டடக்கல் என்றால், 'மாணிக்கக் கற்களின் நகரம்' என்று பொருள். பெயருக்குப் பொருத்தமாகத் திகழ்வதுபோல், செம்பாறைகளில் செதுக்கப்பட்ட அற்புத உலகம்தான் பட்டடக்கல் தொகுப்புக் கோயில் சிற்பங்கள். 

பட்டடக்கல்

பட்டடக்கல் கற்கோயில்கள் மற்றும் சிற்பங்களின் புகைப்படங்களைக் காண்பதற்கு....

`தேர்ந்தெடுக்கப்பட்ட, பன்முகக் கலையின் உச்சம். தென்னிந்தியக் கலையும் வட இந்தியக் கலையும் ஒன்றிணைந்த இணக்கமான கலவை பட்டடக்கல் கற்கோயில்கள்' என்று பட்டடக்கல் சிற்பங்கள் மற்றும் கற்கோயில்கள் குறித்து யுனெஸ்கோ நிறுவனம் குறிப்பிடுகிறது.

பதாமி (வாதாபி), அய்ஹோல் போலவே பட்டடக்கல்லும் சாளுக்கியர்களின் கலைச் சின்னங்கள் நிறைந்த பொக்கிஷக்கூடம். 7-ம் மற்றும் 8-ம் நூற்றாண்டுகளில் எழுப்பப்பட்ட கற்கோயில்களின் தொகுப்பு. எங்கெங்கு நோக்கினும் அந்தத் திசையெங்கும் அழகான சிற்பங்களும் கோயில்களும் நம் மனதைக் கவரும் வண்ணம் அமைந்திருக்கின்றன.

உலகப் பாரம்பர்யச் சின்னமாக அறிவிக்கப்பட்டிருக்கும் பட்டடக்கல், கர்நாடக மாநிலம் பாகல்கோட்டை மாவட்டத்தில், மலபிரபா நதியின் வடகரையில் அமைந்திருக்கிறது. சாளுக்கியர்களின் புகழ்பெற்ற சிற்பங்கள், கற்கோயில்கள் காணப்படும் பதாமி மற்றும் அய்ஹோலுக்கு அருகே காணப்படுகிறது பட்டடக்கல். வேசரபாணி கட்டடக்கலையின் தொடக்கமாகப் பட்டடக்கல் கோயில்களைக் கருதுகிறார்கள். அய்ஹோல், 'இந்தியக் கட்டடக்கலையின் தொட்டில்' என்றால், பட்டடக்கல், 'இந்தியக் கட்டடக்கலையின் பல்கலைக்கழகம்' என்று அறிஞர்களால் புகழப்படும் அளவுக்கு சிறப்பான சிற்பங்களையும் கோயில்களையும் கொண்டிருக்கிறது. 1,200 வருடங்களைக் கடந்து சிவப்பு மணல் பள்ளத்தாக்கில் பேரெழிலுடன் காணப்படுகின்றன பட்டடக்கல் கற்கோயில்கள்.

பட்டடக்கல்லில் பல கோயில்கள் இருந்தாலும் அவற்றில் முக்கியமான கோயில்களைப் பற்றியும் அதன் சிறப்புகளையும் காண்போம்...

* விருபாட்சர் கோயில் 
* மல்லிகார்ஜுனர் கோயில்
* காசி விஸ்வநாதர் கோயில் 
* சங்கமேஸ்வரர் கோயில் 
* காளகநாதர் கோயில் 
*  ஜம்புலிங்கேஸ்வரர் கோயில்
* காட சித்தேஸ்வரர் கோயில்

விருபாட்சர் கோயில்

விருபாட்சர் கோயில்

பட்டடக்கல்லில் காணப்படும் கற்கோயில்கள் அனைத்துக்கும் மகுடம் போன்றது இது. இதன் முழு அமைப்பும் காஞ்சி கயிலாச நாதர் கோயிலைப் போலிருக்கும். அதற்குக் காரணம் சாளுக்கியப் பேரரசர் இரண்டாம் விக்ரமாதித்யனின் காஞ்சிப் போர் வெற்றியாகும். கி.பி 642-ம் ஆண்டு வாக்கில் நரசிம்ம பல்லவன் சாளுக்கிய நாட்டின்மீது படையெடுத்து, அவர்களின் தலைநகர் வாதாபியை அழித்து தீக்கிரையாக்கிவிட்டுத் திரும்பினான். சுமார் 100 வருடப் பகையை மனதில் சுமந்த சாளுக்கியர்கள், இரண்டாம் விக்ரமாதித்யனின் காலத்தில் கி.பி 735-ம் ஆண்டில் பல்லவர்கள் மீது போர்தொடுத்து பெரும் வெற்றி பெற்றார்கள். காஞ்சியையே அழிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் புறப்பட்ட சாளுக்கியப் பேரரசர் இரண்டாம் விக்ரமாதித்யன், காஞ்சி கயிலாசநாதர் கோயிலையும் பல்லவர்களின் மற்ற சிற்பங்களையும் கண்டவுடன் மெய்மறந்து, தான் காஞ்சியில் கைப்பற்றிய செல்வங்கள் அனைத்தையும் கோயிலுக்கு நிவந்தமாகக் கொடுத்துவிட்டு, காஞ்சியில் ஒரு செங்கல்லைக்கூடச் சேதப்படுத்தாமல் திரும்பிச் சென்றுவிட்டார். காஞ்சியை இரண்டாம் விக்ரமாதித்யன் வெற்றி கொண்டதன் நினைவாக, பட்டடக்கல்லில் எழுப்பப்பட்டதுதான் விருபாட்சர் கோயில். இது, அவரின் ராணி லோகமகாதேவி அளித்த நிவந்தத்தின் மூலம் எழுப்பப்பட்டிருக்கிறது. 

கொற்றவை

கோயில் முழுக்க மகாபாரதம், ராமாயணக் காட்சிகள் நிறைந்து காணப்படுகின்றன. இருந்தாலும், அனைத்து சிற்பங்களிலும் தலையாயது கொற்றவையின் சிற்பம். மகிஷனின் தலைமீது ஒரு காலை வைத்து, அவன் கழுத்தில் தன் ஒரு கை சூலத்தைப் பாய்ச்சி, மற்றொரு கரத்தில் இருக்கும் வாளை அவன் மார்பில் செலுத்தும் காட்சி பிரமிக்கவைப்பது. வேறு எங்கும் காண முடியாத அற்புதக் காட்சி இது. சுவர் முழுவதும் ஆடவர் மற்றும் கன்னியர்கள் வெவ்வேறு வடிவங்களில் தோன்றும் காட்சிகள் இடம்பெற்றிருக்கின்றன. சிற்பங்கள் பிற்காலப் படையெடுப்புகளால் சேதப்படுத்தப்பட்டிருந்தாலும் சுமார் 1,200 ஆண்டுகளைக் கடந்தும் அவை இன்றும் ரசிக்கும்படி, பேரழகுடன் காட்சியளிக்கின்றன.

வெற்றித்தூண்

பட்டடக்கல் கற்கோயில்கள் மற்றும் சிற்பங்களின் புகைப்படங்களைக் காண்பதற்கு....

இந்தக் கோயிலில் காணப்படும் வெற்றித்தூண் கல்வெட்டு மிக முக்கியமானது. இரண்டாம் விக்ரமாதித்யன் இளவரசனாக இருந்தபோது... பேரரசனாக முடிசூடிய பிறகு... அவனது இறுதிக்காலத்தில்... எனப் பல்லவர்களுடன் பெற்ற மூன்று வெற்றிச் செய்திகளைச் சுமந்துகொண்டு சுமார் 1,200 ஆண்டுகளைக் கடந்தும் நின்றுகொண்டிருக்கிறது. எதிரி நாடாக இருந்தாலும், எதிரி எழுப்பிய கோயிலுக்கு, தான் கைப்பற்றிய செல்வத்தை நிவந்தமாகக் கொடுத்துவிட்டு வந்த பேரரசனின் கொடைத் தன்மையையும் வீரத்தையும் பறைசாற்றியபடி நின்றுகொண்டிருக்கிறது இந்த வெற்றித் தூண். 

மல்லிகார்ஜுனர் கோயில்

பட்டடக்கல் கோயில்

விருபாட்சர் கோயிலுக்கு முன்பாகக் காணப்படுகிறது இந்தக் கோயில். சாளுக்கியப் பேரரசி திரைலோக்ய மகாதேவி அளித்த நிவந்தத்தின் மூலம் இந்தக் கோயில் 8-ம் நூற்றாண்டில் எழுப்பப்பட்டது. கல்வெட்டுகளில் இந்தக் கோயில் அரசியின் பெயரில் 'திரைலோகேஸ்வர மகா சைலம்' என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.  

சிற்பக்காட்சி

தென்னாட்டு திராவிட பாணியில் அமைக்கப்பட்டிருக்கும் இந்தக் கோயிலின் ஒவ்வொரு தூணும் குறுஞ்சிற்பங்களால் நிறைந்திருக்கிறது. கோயில் சுவரில் பாற்கடல் கடையும் காட்சி, மகாபாரதக் காட்சி, பஞ்ச தந்திரக் கதைகள், புராணக் கதைகள் என்று அழகிய குறுஞ்சிற்பங்கள் பல நிறைந்திருக்கின்றன. 

காசி விஸ்வநாதர் கோயில் 

காசி விஸ்வநாதர் கோயில்

மல்லிகார்ஜுனர் கோயிலுக்கு முன்பாகக் காணப்படும் பழைமையான கோயில் இது. ஏழாம் நூற்றாண்டு காலத்தைச் சேர்ந்தது. விருபாட்சர் கோயிலைப் போலவே இது காணப்பட்டாலும் அளவில் மிகச் சிறியது. கோயில் சுவர்களின் உபபீடத்தில் அனைத்து திசைகளிலும் குதிரை, சிங்கம், மயில் ஆகியவற்றின் சிற்பங்கள் அழகாகச் செதுக்கப்பட்டிருக்கின்றன. இதன் சுவர்களிலும் அர்த்தநாரீஸ்வரர் சிற்பம், ராவணன் கயிலாய மலையைத் தூக்குவதற்கு முயற்சி செய்யும் காட்சி, கண்ணனின் சிற்பங்கள் ஆகியவை காணப்படுகின்றன. மண்டபத்தின் கூரையில் எண்திசைக் காவலர்கள் காவலிருக்க, சிவபெருமான் பார்வதி, கார்த்திகேயன், நந்தி ஆகியோருடன் காட்சியளிக்கும் அற்புதக் காட்சியும் சிற்பமாக்கப்பட்டிருக்கிறது.

சங்கமேஸ்வரர் கோயில் 

சங்கமேஸ்வரர் கோயில்

பட்டடக்கல்லில் காணப்படும் மிகப் பெரிய கோயில்களில் இதுவும் ஒன்று. இதற்கு `விஜயேஸ்வரர் கோயில்’ என்றும் பெயர் உண்டு. இங்கே காணப்படும் கல்வெட்டுகள் 8-ம் நூற்றாண்டைச் சேர்ந்தவை. சாளுக்கிய மன்னன் விஜயாதித்யன் காலத்தில் கட்டத் தொடங்கப்பட்ட இந்தக் கோயில் அவன் இறப்பால் முழுமையடையாமல் நின்றுவிட்டதாக ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். கல்யாணச் சாளுக்கியர்களின் வேலைப்பாடும் இங்கே காணப்படுகிறது. சைவம், வைணவம், சக்தி வழிபாடு என அனைத்தையும் உள்ளடக்கிய சிற்பங்கள் நிறைந்திருக்கின்றன. 

காளகநாதர் கோயில் 

காளகநாதர் கோயில்

7-ம் நூற்றாண்டின் இறுதியில் கட்டப்பட்டது இது. அளவில் மிகச் சிறியது. இங்கே காணப்படும் சிற்பங்கள் அனைத்தும் சிதைந்து போயிருக்கின்றன. இதன் விமானக் கட்டுமானம் திராவிடக் கட்டுமானத்திலிருந்து மாறுபட்டு, 'நகரி' கட்டட  பாணியில் அமைந்திருக்கிறது. இதன் மண்டபத்தின் நுழைவாயிலில் கங்கை, யமுனையின் அழகிய சிற்பங்கள் காணப்படுகின்றன. இந்தக் கோயில் சிதைவடையும் நிலையில் இருப்பதுதான் நமக்கு வருத்தமளிக்கிறது.

ஜம்புலிங்கேஸ்வரர் கோயில் 

ஜம்புபிங்கேஸ்வரர் கோயில்

பட்டடக்கல் கற்கோயில்கள் மற்றும் சிற்பங்களின் புகைப்படங்களைக் காண்பதற்கு....

பட்டடக்கல்லில் காணப்படும் மிகச் சிறிய கோயில்களில் இதுவும் ஒன்று. 7-ம் அல்லது 8-ம் நூற்றாண்டு காலத்தில் கட்டப்பட்டிருக்கலாம். இதிலும் சிற்பங்கள் சேதமடைந்து தெளிவில்லாமல் இருக்கின்றன.

கி.பி 4 மற்றும் கி.பி 5-ம் நூற்றாண்டில் சாளுக்கியர்கள் சிற்பக்கலையைப் பழகுவதற்குரிய பயிற்சிக்கூடமாக அய்ஹோலைப் பயன்படுத்தினார்கள். அதன் பிறகு, பதாமியில் குடைவரைக் கோயில்களையும் கற்கோயில்களையும் நிறுவினார்கள். 7-ம் நூற்றாண்டு காலத்தில் சிற்பக் கோயில்களை எழுப்புவதற்கு பட்டடக்கல்லுக்கு இடம்பெயர்ந்தவர்கள் உலகே வியக்கும் அளவுக்குச் சிற்பங்களையும் கற்கோயில்களையும் செதுக்கியிருக்கிறார்கள். சுமார் 1,200 ஆண்டுகளைக் கடந்தும் கம்பீரமாகவும், அதே எழிலுடனும் விளங்கும் பட்டடக்கல் வாழ்வில் ஒருமுறையாவது பார்க்க வேண்டிய சிற்பக்கலைக் கருவூலம்.

பட்டடக்கல் கற்கோயில்கள் மற்றும் சிற்பங்களின் புகைப்படங்களைக் காண்பதற்கு....

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்