`இறைவனுக்கு உகந்ததை விரும்புபவர்களே இயேசுவின் சீடர்கள்!’ - பைபிள் கதைகள் #BibleStories

`இறைவனுக்கு உகந்ததை விரும்புபவர்களே இயேசுவின் சீடர்கள்!’ - பைபிள் கதைகள் #BibleStories

டற்கரையோரம் இருந்த ஓர் ஆசிரமத்தில் துறவிகள் பலர் தங்கியிருந்தனர். அவர்களில் இரண்டுபேர் மட்டும் மாலை நேரத்தில் கடற்கரையோரமாக நடைப்பயணம் மேற்கொள்வதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். அவர்களில் ஒரு துறவி மட்டும், ஓர் இடம் வந்ததும் அந்த இடத்தில் மட்டும் முகத்தைத் திருப்பிக்கொண்டு நடப்பார். துறவியின் இந்த நடவடிக்கை உடன் செல்லும் இன்னொரு துறவிக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. ஆனாலும், அவர் அது குறித்து அவரிடம் எதுவும் கேட்கவில்லை.

இயேசு

சில நாள்களுக்குப் பின்னர் குறிப்பிட்ட அந்த இடம் வந்ததும், அந்தத் துறவி முகத்தைத் திருப்பாமல் அந்த இடம் வந்ததும் கீழே குனிந்து மண்ணைப்போட்டு மூடிவிட்டுச் சென்றுவிட்டார். இதைக் கண்டதும் அவருடன் சென்ற இன்னொரு துறவி, `ஏன் மண்ணைப்போட்டு மூடினீர்கள். இத்தனை நாள்களாக அந்த இடம் வந்ததும், முகத்தைத் திருப்பிக்கொண்டு போனீர்கள். இப்போது மண்ணைப்போட்டு மூடி எதையோ மறைப்பதுபோலத் தெரிகிறதே...’ என்று கேட்டார். உடனே அவர், `இந்த இடத்தில் ஒரு தங்கப் புதையல் இருக்கிறது. அதைப் பார்க்கும்போதெல்லாம் என் மனம் சஞ்சலமடையும். அதனால் என் முகத்தைத் திருப்பிக்கொள்வேன். நாளை முதல் முகத்தைத் திருப்பிகொண்டு நடக்க வேண்டாம் என்று மண்ணைப்போட்டு மூடினேன். இனிமேல் சஞ்சலப்படாமல் என் வழியில் நடப்பேன்' என்றார். இதைக் கேட்ட இன்னொரு துறவியோ, `இது தங்கம், விலை உயர்ந்தது என்ற எண்ணம் உனக்குத் தோன்றுகிறதா? அப்படியானால், நீ துறவியே இல்லை. இன்னும் துறவறத்துக்குள் அடியெடுத்து வைக்கவில்லை...' என்று சொல்லிவிட்டு அவரைவிட்டு அங்கிருந்து விலகிச் சென்றுவிட்டார்.

துறவற வாழ்க்கையில் ஈடுபடுவோருக்கு மண்ணாசையும் பொன்னாசையும் இருக்கக் கூடாது. அவற்றையெல்லாம் முற்றிலும் வெறுத்து, ஒதுக்கி வாழ வேண்டும் என்ற உண்மையை எடுத்துச் சொல்கிறது இந்தக் கதை.

இயேசு

இப்படித்தான் இயேசு தன்னுடைய சீடர்களை அனுப்பும்போது அவர்களுக்கு நிறைய அறிவுரைகளைக் கூறி அனுப்புகிறார். மிக முக்கியமாக, `பொன், வெள்ளி, செப்புக்காசு என எதையும் உங்கள் இடைக்கச்சைகளில் வைத்துகொள்ள வேண்டாம்...’ என்ற அவரது அறிவுரை குறித்து சிந்திக்க வேண்டும். இயேசு கிறிஸ்து தன்னுடைய சீடர்களிடம் இத்தகையதொரு அறிவுரையைக் கூற பல காரணங்கள் இருக்கின்றன. அவற்றில் முதலாவது காரணம், சீடர்கள் பத்திரமாக நற்செய்திப் பணியாற்ற வேண்டும் என்பதே.
ஜெருசலேமில் இருந்து எரிக்கோ நோக்கிச் சென்ற ஒருவர், திருடர்கள் கையில் அகப்பட்டு, அடிபட்டுக் கிடந்தார் என்று இயேசுவின் நல்ல சமாரியன் உவமை நமக்கு எடுத்துச் சொல்கிறது. சீடர்கள் பொன்னோடும் வெள்ளியோடும் சென்றால் அவர்கள் திருடர்களின் கையில் அகப்பட்டு அடிபடக்கூடும். அதனால் நற்செய்திப் பணியை சரியாகச் செய்ய முடியாமல் போகும் என்பதால் இயேசு அப்படி சொல்லியிருக்கக்கூடும். பொன்னோ, வெள்ளியோ, செப்புக்காசுகளையோ எடுத்துக்கொண்டு போக வேண்டாம் என்று சொல்வதற்கான இரண்டாவது காரணம், தன்னுடைய சீடர்கள் பணத்தையோ, பொருளையோ... அல்ல இறைவனை நம்பியே பணி செய்ய வேண்டும் என்பதேயாகும். நற்செய்திப்பணி என்பது இறைவனுக்காக, இறைவனை மட்டுமே நம்பிச் செய்ய வேண்டிய பணி. அப்படிப்பட்ட பணியை கையிலுள்ள பணத்தையோ, பொருளையோ நம்பிச் செய்தால் அது சரியாக இருக்காது என்பதாலேயே இயேசு அப்படிச் சொல்லியிருக்கின்றார்.

இயேசு

மேலும் இயேசுவின் சீடர்களாக இருப்பவர்கள், இறைவனுக்கு உகந்ததை விரும்புபவர்களாக இருக்க வேண்டும். அப்படிப்பட்டவர்கள்தான் இயேசுவின் சீடர்களாக இருக்க முடியும். இதற்கு மாறாக பொன்னையோ, வெள்ளியையோ வைத்திருக்கும்போது அவை அவர்களை இந்த உலகத்தின் போக்கிலான வாழ்க்கையை வாழத் தூண்டிவிடும் என்பதுடன், அது இறைவனுக்கு எதிரான வாழ்க்கையாகவும் அமைந்துவிடும். நற்செய்தியில்கூட இயேசு கிறிஸ்து சொல்லும்போது, `உங்கள் செல்வம் எங்கே உள்ளதோ, அங்கே உங்கள் இதயம் இருக்கும். நீங்கள் கடவுளுக்கும் செல்வத்துக்கும் பணிவிடை செய்ய முடியாது' என்று கூறுகிறார். காசும் கடவுளும் இருவேறு துருவங்கள். காசைப் பற்றிப் பிடித்துக்கொண்டிருக்கும் ஒருவரால் கடவுளுக்குப் பணி செய்ய முடியாது என்பதே உண்மை. ஆகவே, இறைப்பணி, நற்செய்திப் பணி செய்ய அழைக்கப்பட்டிருக்கும் நாம் உலகச் செல்வங்களின்மீது பற்று வைக்காமல் உண்மையான செல்வமாகிய இயேசுவின்மீது பற்று வைத்து இறைப்பணி செய்யவேண்டியது அவசியம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!