வெளியிடப்பட்ட நேரம்: 19:16 (16/07/2018)

கடைசி தொடர்பு:19:16 (16/07/2018)

திருப்பதி சம்ப்ரோஷணம்... 9 நாள்களுக்கு தரிசனம் ரத்து! ஆன்லைனில் புக் செய்தவர்களுக்குப் பணம் ரிட்டர்ன்! #Tirupati

திருப்பதி கோயிலில் ஆகஸ்ட் 9-ம் தேதி முதல் 16-ம் தேதி முடிய சுவாமி தரிசனம் ரத்து செய்யப்பட்டிருக்கிறது.

திருப்பதி சம்ப்ரோஷணம்... 9 நாள்களுக்கு தரிசனம் ரத்து! ஆன்லைனில் புக் செய்தவர்களுக்குப் பணம் ரிட்டர்ன்! #Tirupati

லியுகத்தின் கண்கண்ட தெய்வமாக அருள்பாலிக்கும் திருப்பதி வெங்கடேசப் பெருமாளை தரிசனம் செய்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமிருக்கிறது. கோடை விடுமுறை முடிந்து பள்ளிக்கூடங்கள் திறந்திருக்கும் நிலையிலும் திருப்பதிக்கு வந்து சுவாமி தரிசனம் செய்பவர்களின் எண்ணிக்கை விடுமுறை நாள்களில் இருந்ததுபோலவே இப்போதும் அதிக எண்ணிக்கையிலான பக்தர்கள் வந்த வண்ணம் இருக்கிறார்கள்.

திருப்பதி

திருமலை திருப்பதிக்கு ஒரு நாளைக்கு 60,000 முதல் 80,000 பக்தர்களுக்கு மேல் வருகிறார்கள். சனி, ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாள்களில் இந்த எண்ணிக்கை 80 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரை அதிகரிக்கிறது. குறிப்பாக, ஆதார் கார்டு வைத்திருப்பவர்கள் நேர ஒதுக்கீட்டு சர்வ தரிசன முறையில் சுவாமி தரிசனம் செய்யும் முறை இருப்பது பக்தர்களுக்கு மிகவும் சௌகரியமாக இருக்கிறது. 

இந்த நிலையில் திருப்பதி வெங்கடேசப் பெருமாள் கோயில் சம்ப்ரோக்ஷணம் தொடர்பான பூஜைகள் ஆகஸ்ட் மாதம் 11-ம் தேதி முதல் 16-ம் தேதி வரை நடைபெறுகிறது. பன்னிரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இந்த கும்பாபிஷேகம் நடைபெறுவதால், இதில் இரண்டிலிருந்து மூன்று லட்சம் பக்தர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

கருடாழ்வார்

இதையொட்டி திருப்பதி கோயிலில் ஆகஸ்ட் 9-ம் தேதி முதல் 16-ம் தேதி முடிய சுவாமி தரிசனம் ரத்து செய்யப்பட்டிருக்கிறது. அந்த 9 நாள்களும் ஆர்ஜித சேவை, சிறப்பு தரிசனம் ஆகியவையும் ரத்து செய்யப்படுகின்றன. ஏற்கெனவே ஆன்லைன் மூலமாக முன்பதிவு செய்தவர்களுக்கு அவர்கள் செலுத்திய முன்பதிவுக் கட்டணம், திருப்பித் தரப்படும்.

11–ம் தேதி அங்குரார்ப்பணம், வைதிகச் சடங்குகள், சாந்தி ஹோமம் ஆகியவை நடைபெறுகின்றன. அதை முன்னிட்டு திருமலையில் உள்ள  வழக்கமாக சர்வதரிசனம் செல்வோர் காத்திருக்கும் வைகுண்டம் க்யூ காம்ப்ளக்ஸ் மூடப்படுகிறது. திருப்பதி கோயிலில் மூலவர் இருக்கும் ஆனந்த நிலையம், கருடாழ்வார் சந்நிதி, வரதராஜர் சந்நிதி, யோக நரசிம்மர், ஆஞ்சநேயர் சந்நிதிகளிலும் மகா சம்ப்ரோக்ஷணம் நடைபெறுகிறது.

ஆகஸ்ட் 11-ம் தேதி இரவு 9 மணிக்கு அங்குரார்ப்பணம்  நிகழ்ச்சி நடைபெறுகிறது. 12-ம் தேதி பாலாலயம் நடைபெற்று, தொடர்ந்து முதல் கால யாகசாலை பூஜை தொடங்குகிறது. யாகசாலை பூஜையின்போது, பெருமாளின் கருவறையில் இருக்கும் உற்சவ மூர்த்திகள் யாகசாலைக்கு எழுந்தருளுவார்கள். 

13-ம் தேதி காலை 6 மணி முதல் 12 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் 10 மணி வரையிலும் யாகசாலையில் பல்வேறு பூஜைகள் நடக்கின்றன.

திருப்பதி

14-ம் தேதி யாகசாலையில் சிறப்பு பூஜைகளும், 15-ம் தேதி அதிகாலை 5 மணிக்கு மூலவருக்கு `மகா சாந்தி திருமஞ்சன'மும் நடக்கிறது.
அன்று இரவு யாகசாலையில் `மகா பூரணாஹூதி' நடக்கிறது. 16-ம் தேதி காலையில் மகா சம்ப்ரோக்ஷணம் நடைபெறும்.
மகா சம்ப்ரோக்ஷணம் முடிந்ததும், 17–ம் தேதி காலை முதல் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.

எம்பெருமானின் சேவையில் இந்த 6 நாள்களும் மிகவும் முக்கியமானவை என்பதால், பக்தர்கள் திருமலை – திருப்பதி தேவஸ்தானத்துக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். பக்தர்கள் இதற்கேற்ப தங்களின் திருமலை பயணத்தைத் திட்டமிட்டுக்கொள்ள வேண்டும். இவ்வாறு திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் அறங்காவலர் குழுத்தலைவர் புட்டா சுதாகர் தெரிவித்திருக்கிறார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்