பிட்சை பெறுவதன் மூலம் பிறரின் பாவங்களைப் பெற்றுக்கொண்ட பாபா! #SaiBaba

குருவின் திருவடியை வழிபடுவதே சிறந்த வழிபாடு! - பாபாவின் அருளாடல்கள்...

பிட்சை பெறுவதன் மூலம் பிறரின் பாவங்களைப் பெற்றுக்கொண்ட பாபா! #SaiBaba

ஷீரடி கிராமத்து மக்களுக்கு ஒருநாள் காலையில் ஓர் அற்புத தரிசனம் கிடைத்தது. அன்று காலை ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருந்த ஒரு வேப்பமரத்தடியில் பதினாறு வயதே நிரம்பிய ஓர் இளைஞர் தியானத்தில் அமர்ந்தநிலையில் காட்சி தந்துகொண்டிருந்தார்.

அவர் எந்த நேரத்திலும் அமைதியை இழக்கவில்லை. அவரின் முகம் சாந்தம் நிறைந்ததாக இருந்தது. இரவு, பகல் எல்லா நேரமும் அவர் தியானத்திலேயே இருந்தார். புயலோ, மழையோ எதையும் அவர் பொருட்படுத்தவில்லை. ஷீரடி மண்ணும், அதில் வளர்ந்த புல், செடி, கொடிகளும் மிகவும் அதிர்ஷ்டம் பெற்றவை. எவ்வித முயற்சியும் இல்லாமலேயே அவற்றுக்கு பாபாவின் ஸ்பரிசம் மிக எளிதாகக் கிடைத்தது. 

SaiBaba - பாபா

பலரும் பாபா என்ற அந்த இளைஞரைக் கண்டாலும், அவர்களில் ஒரு சிலர் மட்டுமே அந்த இளைஞர் தெய்வாம்சம் பொருந்திய மகான் என்பதைத் தெரிந்துகொண்டனர். மற்றவர்களையும் அந்த இளைஞரின் அழகும் தேஜஸும் நிரம்பிய தோற்றம் கவரவே செய்தது. அவர்களுள் பாயாஜா பாய் என்ற பெண்மணியும் ஒருவர். பாபாவைப் பார்த்த மாத்திரத்தில், பாயாஜா பாயின் மனதுக்குள் தாய்மை அன்பு சுரந்தது. 

ஷீரடிக்கு பாபா வந்து சேர்ந்த ஆரம்ப நாள்களில் ஓர் இஸ்லாமியப் பெண்மணி அவருக்கு உணவளித்து வந்தாள். பின்னர் பாபா உணவை பிட்சையெடுக்கத் தொடங்கினார். அப்படி பிட்சையெடுத்து வந்த உணவை, தான் மட்டும் உண்ணவில்லை. நாய், பூனை போன்ற ஜீவன்களும் பாபா உண்ணும்போது அவருடைய பாத்திரத்திலிருந்தே உணவை எடுத்து உண்டன. பாபாவும் அந்த ஜீவன்களைத் தடுக்கவில்லை. அனைத்து ஜீவராசிகளிலும் இறைவனையே கண்ட ஒப்பற்ற மகான் அவர். அனைத்து ஜீவன்களையும் தம்மைப்போலவே நேசித்த பாபாவின் நடைமுறைகள் மற்றவர்களால் புரிந்துகொள்ள முடியாத புதிராகவே இருந்தன.  

அவர் பிட்சை எடுக்கும் முறைகளும் அப்படியே இருந்தன. பாபா, சில நாள்களில் சில வீடுகளில் மட்டும் பிட்சை எடுத்தார். சில நாள்களில் மதியம் வரை எடுத்தார். அதுமட்டுமல்லாமல் அவர் எல்லோர் வீடுகளிலும் பிட்சை கேட்பதில்லை. யாராவது தாமாக முன் வந்து அளிக்க நினைத்தாலும் அவர் அதை பெற்றுக்கொள்வதில்லை.
அவர் உணவை பிட்சையாக எடுத்ததன் மூலம் அவர்களின் பாவங்களை வாங்கிக் கொண்டார். அவருக்கு உணவளித்தவர்கள் மிகவும் பாக்கியம் பெற்றவர்கள். அவர்கள் தங்கள் இல்லத்திலிருந்தபடியே, இல்லறக் கடமைகளைச் செய்தபடியே தங்கள் பாவங்களிலிருந்து விடுதலை பெற்றனர். 

ஷீரடியில் திருமதி பாயாஜா பாய் என்ற பெண்மணி ஒருவர் இருந்தார். இவர் பாபாவைத் தன் மகனாகவே கருதினார். தினமும் மத்தியான நேரத்தில் பாபாவுக்கு கொடுப்பதற்காக, ஒரு கூடையில் பழங்கள், ரொட்டி, காய்கறிகள் போன்றவற்றைத் தன் தலையில் சுமந்துகொண்டு செல்வார். பாபா ஓரிடத்தில் நிற்காமல் திரிந்துகொண்டே இருப்பதால், பாயாஜா பாய் பாபாவைத் தேடி காடுகளில் அலைவார். 

SaiBaba

வெயிலையும் மழையையும் பொருட்படுத்தாமல், பாபாவைத் தேடிக் கண்டுபிடித்து அவருக்கு உணவு வழங்குவார். அதற்குப் பிறகே தான் சாப்பிடுவது என்ற வழக்கத்தைக் கொண்டிருந்தார். தம்மிடம் அந்தப் பெண்மணி கொண்டிருக்கும் அன்பின் மிகுதியால், பாபா அவரைத் தன் தாயாகவே ஏற்றுக்கொண்டார். ஒரு கட்டத்தில் அவரை மேலும் அலையவிட விரும்பாத பாபா, துவாரகாமாயியிலேயே தங்கத் தொடங்கிவிட்டார். பாயாஜா பாய், பாபாவைத் தேடி காடுகளில் அலையும் நிலையும் மாறியது. 
பாயாஜா பாய் தம்மிடம் கொண்டிருந்த அளவற்ற அன்பின் காரணமாக அவரைத் தன் தாயாக ஏற்றுக்கொண்டதுடன், அவருடைய மகன் தாத்யாவுக்கு பல வகைகளிலும் அருள் புரிந்திருக்கிறார்.

குருவின் திருவுருவ தரிசனத்தைவிட, திருவடி தரிசனமே அளவற்ற மகத்துவம் கொண்டது. பாபா ஓர் அருளாடல் மூலம் இந்தப் பேருண்மையை நமக்கெல்லாம் உணர்த்தியிருக்கிறார்.

அந்த அருளாடல்...

பாபாவை தரிசிக்க ரேகே என்பவர் ஷீரடிக்கு வந்திருந்தார். பாபாவை தரிசித்த பிறகு அவர் ராதாகிருஷ்ண மாயி வீட்டில் தங்கினார். ராதாகிருஷ்ண மாயி எப்போதும் சாயி நாமத்தை ஜபித்தபடி இருந்தார். அதைக் கண்ட ரேகேவும் சாயி நாமத்தை ஜபிக்கத் தொடங்கினார். 
ஒரு நாள் காலை பாபா ரேகேவைப் பார்த்து, ``நீ என்ன செய்துகொண்டிருக்கிறாய்?'' என்று கேட்டார். தனது தெய்வத்தின் பெயரை ஜபித்துக்கொண்டிருப்பதாக அவரிடமிருந்து

பதில் வந்தது. ``எந்த தெய்வத்தின் பெயர்?’’ என்று பாபா மீண்டும் கேட்டார். அதற்கு ரேகே, ``தாங்கள் அறியாதது ஒன்றுமில்லை'' என்று பதிலளித்தார். இதைக் கேட்டதும் பாபா ஒரு புன்முறுவல் புரிந்துவிட்டு, நகர்ந்து சென்றார். பாபா தன்னுடைய பக்தியை ஏற்றுக்கொண்டுவிட்டார் என்பதை அறிந்த ரேகே மிகுந்த மகிழ்ச்சியடைந்தார்.

சாய்பாபா

சில மாதங்கள் கழித்து ரேகே பாபாவின் தரிசனத்தைப் பெறுவதற்காக மீண்டும் ஷீரடிக்கு வந்தார். அவர்  பாபாவைப் புகைப்படம் எடுத்து, தினமும் தான் வழிபடவேண்டுமென்று விரும்பினார். அதற்காக ஒரு கேமராவை எடுத்து வந்திருந்தார்.

துவாரகாமாயிக்கு வந்து பாபாவை வழிபட்டு, அவரை வெவ்வேறு கோணங்களில் மொத்தம் பன்னிரண்டு புகைப்படங்கள் எடுத்துவிட்டு திருப்தியடைந்தார். அதுவரை எதையும் கவனிக்காததுபோல் இருந்த பாபா, ரேகே படங்கள் எடுத்து முடித்ததும் தம் அருகில் வரும்படி அழைத்தார். 

``இந்தச் சின்னப் பெட்டிக்குள் என்னை அவ்வளவு எளிதாக அடைத்துவிடமுடியுமா? உன் வழிபாட்டுக்காக என்னை நீ பெட்டிக்குள் அடைக்க நினைக்கிறாய். ஆனால், உன்னுடைய மனதுக்குள் நீ என்னைக் காண்பதே உண்மையான பக்திக்கு வழிவகுக்கும். எப்போதும் என்னை உன் மனதில் இருத்தி வழிபடு'' என்றார்.
ரேகே தாம் எடுத்த புகைபடங்களைப் பார்ப்பதற்கு மிகுந்த ஆவல் கொண்டு படச்சுருளைக் கழுவிப் பார்த்தபோது, அதிசயத்தின் உச்சமாக அதில் எந்தப் படத்திலும் பாபா

தெரியவில்லை. அவரைச் சுற்றி இருந்தவர்கள் படத்தில் இருந்தபோதும் பாபாவின் இடம் மட்டும் வெள்ளையாக இருந்தது.

ஆனால், கடைசி புகைப்படத்தில் மட்டும் பாபாவின் பாதங்கள் தெரிந்தன. இதைக் கண்ட ரேகே பாபாவின் திருவடிகளை வழிபடுவதே மிகச் சிறந்தது என்று உணர்ந்து அந்தப் படத்தைத் தன் இல்லத்தில் வைத்து வழிபட ஆரம்பித்தார்.

இந்த நிகழ்ச்சி, குருவின் திருவடி வழிபாடே சிறந்தது என்பதை நமக்கு உணர்த்துவதாக அமைந்திருக்கிறது. 

சாயி பற்றி மேலும் அறிந்துகொள்ள, இங்கே க்ளிக் செய்யவும்...

 

 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!