கபாலி கோயில் புன்னை வனநாதர் சிலை என்னவானது பக்தர்கள் கவலை!

ஈசனால் சபிக்கப்பட்ட சக்தி, மயில் உருவில் புன்னைவனக் காடாக இருந்த மயிலாப்பூரில் வந்து புன்னை மரத்தடியில் சிவலிங்கத்தை வழிபட்டார். ஈசனை மணந்தார். இதனால் மயிலாப்பூர் கபாலீஸ்வரருக்குப் புன்னை வனநாதர் என்றும் பெயருண்டு. கபாலீஸ்வரர் சந்நிதியை விட அதன் பின்புறம் புன்னைமரத்தடியே இருக்கும் புன்னை வனநாதர் சந்நிதி பழைமையானது என்பார்கள். அங்குதான் அன்னை ஈசனை வழிபட்டார் என்றும் கூறுவார்கள். அத்தகைய பெருமையும் பழைமையும் கொண்ட புன்னை வனநாதரின் சந்நிதியில் மயில் வடிவில் அம்பாள் ஈசனை வணங்கும் சிலை காணாமல் போயிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 

கபாலீஸ்வரர் கோயில்

சந்நிதியில் தற்போது இருக்கும் சிலை புதியது என்றும் பழைமையான சிலை தற்போது எங்கிருக்கிறது என்று தெரியவில்லை என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. 2004-ம் ஆண்டு கபாலீஸ்வரர் கோயிலுக்கு கும்பாபிஷேகம் செய்வதற்கு முன்னரே பின்னமாகி இருந்த இந்தச் சிலை அப்போது அகற்றப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

புன்னை வனநாதர்

ஆனால், பின்னமான மூலவர் சிலைகள், கருவறையிலேயே புதைக்கப்படுவது வழக்கம் என்றும், அந்தச் சிலை அவ்வாறு செய்யப்பட்டதா என்றும் தெரியவில்லை எனக் கூறப்படுகிறது. புராணப் புகழ் கொண்ட ஒரு சிலை மாயமாகி இருப்பது பக்தர்களிடையே பெரும் கவலையை எழுப்பியுள்ளது. இது குறித்து சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் விசாரிப்பார்கள் என இந்து அறநிலையத்துறை தரப்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!