இயற்கையின் சீற்றங்களிலிருந்து பாதுகாக்கும் கோவர்த்தன விரதம் இன்று!

தன்னை வணங்காத கோபத்தால் கிருஷ்ணரின் மீது கோபம் கொண்டு பெருமழை பெய்து கோகுலத்தை மூழ்கச் செய்யத் தொடங்கினார் இந்திரன். கோகுலத்து மக்களும், ஆநிரைகளும் வெள்ளத்தால் தவித்தனர். தீனதயாளனான ஸ்ரீகிருஷ்ணன் தனது படைப்புகளைப் பாதுகாக்க கோவர்த்தன மலையைத் தூக்கி அதன் கீழே அனைவரையும்  பாதுகாத்து அருள்புரிந்தார். இதனால் ‘கோவர்த்தனன்’ என்ற திருநாமத்தையும் அந்தக் கோவிந்தன் பெற்றார். கோவர்த்தன மலையின் கீழே கிருஷ்ணபகவான் ஏழு நாள்கள் வைத்திருந்துப் பாதுகாத்தார் என்று புராணங்கள் கூறுகின்றன. ஒற்றை விரலால் மலையைத் தூக்கி அற்புதம் செய்த கண்ணனைப் போற்ற மலையைத் தூக்கிய நாளில் ஆண்டுதோறும் 'கோவர்த்தன விரதம்' அனுஷ்டிக்கப்படுகிறது. இந்த பெருமைமிகு விரதம் இன்று (23-07-18) கொண்டாடப்படுகிறது.

கோவர்த்தன விரதம்


இயற்கையின் சீற்றங்களிலிருந்து சகல ஜீவராசிகளையும் பாதுகாக்கும் இந்த விரதத்தை, `கோபத்ம விரதம்’ என்றும் போற்றுவர். 'கோ' என்றால் பசு 'வர்த்தனா' என்றால் மகிழ்ச்சி என்று ஆன்மிக நூல்கள் கூறுகின்றன. அஃறிணை பசுக்களும், கிருஷ்ணரை நாடித் துதிக்கும் நம்மை போன்ற மானிடப் பசுக்களும் கொண்டாடும் விரதம் இது. வடநாட்டில் இந்த விரதம் விசேஷமானது. கண்ணனுக்குப் பிடித்த நைவேத்தியங்களை செய்து மலைபோல குவித்து வணங்குவார்கள். நைவேத்திய மலை 'அன்னக்கூட்' என்று அழைப்பார்கள். தீபாவளிக்கு அடுத்த நாள் இந்த விரதம் வடநாட்டில் கொண்டாடப்படுகிறது. கோவர்த்தன விரதத்தை மேற்கொண்டு கிருஷ்ணரை வணங்கினால் சரியான மழைவளம், மிதமான காற்று, மண்வளம் யாவும் அமையும். இயற்கை சீற்றம் எதுவுமில்லாது உலகம் மகிழ்ச்சியாக விளங்கும் என்று ஆன்மிகப் பெரியவர்கள் கூறுகின்றனர். குன்றினைச் சுமந்து குவலயம் காத்த கோவிந்தனை இன்று வணங்கி வளம் பெறுவோம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!