உலக உயிர்களின் பசி தீர்க்கும் அன்னை அன்னபூரணியின் வரலாறு! | Glory of Goddess Annapoorani

வெளியிடப்பட்ட நேரம்: 17:47 (25/07/2018)

கடைசி தொடர்பு:17:47 (25/07/2018)

உலக உயிர்களின் பசி தீர்க்கும் அன்னை அன்னபூரணியின் வரலாறு!

`ஆணவத்தைவிட ஆபத்தானது பசி!’ - உண்மை உணர்த்த அவதரித்த அன்னை அன்னபூரணி...

உலக உயிர்களின் பசி தீர்க்கும் அன்னை அன்னபூரணியின் வரலாறு!

`எண் சாண் உடலுக்கு சிரசே பிரதானம்’ என்பார்கள். அந்த உடலில் உயிர் தரித்திருக்க உணவு அவசியம். உணவில்லாமல் யாரும் வாழமுடியாது. உணவு என்னும் இரையைத் தேடுதலின் பொருட்டே உயிர்கள் இடம்பெயரத் தொடங்கின. உயிர்களின் அடிப்படையாக இருக்கும் உணவுக்கு ஆதார சக்தியாக விளங்குபவள் அன்னபூரணி தேவி. அங்கமெல்லாம் தங்க நகைகளால் ஜொலிக்க, நவரத்தின ஆசனத்தில் அமர்ந்து, ஒரு திருக்கரத்தில் அட்சயப் பாத்திரமும், மறு திருக்கரத்தில் தங்கக் கரண்டியும் ஏந்திக் காட்சியளிக்கும் இந்த தேவி, உலக உயிர்களின் பசியைத் தீர்க்கும் தயாபரி. உயிர்களின் பசியைத் தீர்க்கும் அன்னபூரணி தேவிதான், மண்ணின் உரமாக, மண்வளம் சிறக்கச் செய்யும் மழையாக, மண்ணில் விதைக்கும் விதையாக, விதை முளைத்து வரும் பயிராக, பயிரின் தானியமாக, மலராக, காயாக, கனியாக என்று அனைத்துக்கும் ஆதார சக்தியாக இருக்கிறாள். அனைத்து உயிர்களையும் அன்புடன் பரிபாலிப்பவள் அன்னபூரணி.

அன்னபூரணியின் அவதாரம்

ஒருமுறை பிரம்மதேவருக்கு கர்வம் ஏற்பட்டது. சிவபெருமானைப்போலவே தனக்கும் ஐந்து தலைகள் இருப்பதால் ஏற்பட்ட கர்வம் அது. பிரம்மதேவரின் கர்வம் சிவனாருக்குத் தெரியாமல் இருக்குமா என்ன? அதை அடக்கத் திருவுள்ளம் கொண்டார். சிவபெருமானின் திருவுள்ளக் குறிப்பை உணர்ந்துகொண்ட அன்னை பார்வதி, அதற்கேற்ப தானும் ஓர் அருளாடலை நிகழ்த்தத் திருவுள்ளம் கொண்டாள். அதன்படி கர்வத்துடன் கயிலைக்கு வந்த பிரம்மதேவரை, சிவபெருமான் என்று எண்ணி வணங்கினாள். அதைக் கண்டு பிரம்மதேவர் சிரித்துவிட்டார். அனைத்தும் தெரிந்த அம்பிகை தன்னை சிவனாராக நினைத்து வணங்கியது அவளுடைய லீலைகளில் ஒன்றுதான் என்பது கர்வம் கொண்டிருந்த பிரம்மதேவருக்குப் புரியவில்லை.

அடுத்து சிவனாரின் லீலை தொடங்கியது. கர்வத்துடன் கயிலைக்கு வந்த பிரம்மதேவரின் ஒரு தலையைக் கொய்துவிட்டார் சிவபெருமான். பிரம்மதேவரின் தலையைக் கொய்த சிவபெருமானுக்கு தோஷம் ஏற்பட்டுவிட்டது. தோஷத்தின் விளைவாக பிரம்மதேவரின் கபாலம் சிவனாரின் கரத்துடன் ஒட்டிக்கொண்டது. தனக்கு ஏற்பட்ட தோஷம் நீங்கவேண்டி, பல இடங்களில் பலரிடமும் பிட்சை பெற்று வந்தும்கூட, அவர் கையில் ஒட்டிக்கொண்ட கபாலம் நீங்கவில்லை.

அன்னபூரணி

இந்தத் தருணத்தில், பிரம்மதேவரை சிவபெருமான் என்று நினைத்து வணங்கிய அன்னை பார்வதி, தனக்குத் தானே தண்டனை விதித்துக்கொண்டு, பூவுலகில் காசி நகரத்தில் அன்னபூரணியாக அவதரித்தாள். பல இடங்களில் பிட்சை ஏற்று வந்த சிவனார் இறுதியாக காசி நகரத்தை அடைந்தார். மாதா அன்னபூரணியிடம் பிட்சை ஏற்றார். அன்னபூரணி பிட்சை இட்டதுதான் தாமதம் சிவனாரின் திருக்கரத்தில் இருந்த பிரம்ம கபாலம் அவர்கையை விட்டு நீங்கியது.

அன்னபூரணி சிவனாரின் பசி தீர்ப்பதற்காக மட்டுமா அவதரித்தாள்? ஆணவம் ஆபத்தானது. ஆனால், அதே நேரத்தில் ஆணவத்தைவிட ஆபத்தானது பசி என்பதை உணர்த்தவும், அம்பிகை அன்னபூரணியாக அவதரித்தாள். மேலும், பசிப் பிணியால் எந்த உயிரும் துன்புறக் கூடாது என்பதை உணர்த்தவும் காசி மாநகரில் அருளாட்சிபுரிகிறாள்.

காசி மாநகருக்கு அன்னபூரணி தேவி வந்த காரணம் என்று காசி தல புராணம் வேறொரு கதையும் கூறுகிறது. 
ஒருமுறை ஈசனும் சக்தியும் சொக்கட்டான் ஆடிக்கொண்டிருந்தார்கள். ஆட்டத்தின் இறுதியில் ஈசன் வெற்றி பெற்றார். சக்தியோ, ஈசன் தவறாக ஆடி வெற்றி பெற்றார் என்று எண்ணி வாதம் புரிந்தாள். ஈசனோ `சகலமும் மாயை, அதில் இந்த ஆட்டமும் ஒரு சிறிய மாயை’ என்றும், `அதனால் வெற்றி தோல்வியைப் பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம்' என்றும் கூறினார். 

அன்னபூரணி

ஆனால், சக்தியோ `சகலமும் மாயை என்றால் உயிர்களின் இயக்கமும் மாயைதானா?' என்று வினவினார். ஈசனும், `ஆம். அப்படித்தான்’ என்று கூற, அதை மறுத்து காசி நகருக்குச் சென்று தவமியற்றத் தொடங்கினாள். அகிலத்துக்கும் படியளக்கும் பராசக்தி தனது கடமையைவிட்டு நீங்கியதால், உலக உயிர்கள் பசியால் வாடின. உலக உயிர்களின் துயரம் போக்கத் திருவுள்ளம் கொண்டு சிவபெருமான், தாமே பிட்சாடனராக காசிக்குச் சென்று தேவியிடம் பிட்சை ஏற்றுப் பசியாறினார். அப்போது, `உலகம் மாயை என்றாலும், அதில் உயிர்கள் வாழ உணவு எனும் சக்தியும் அவசியம். அந்த உணவை அருள்பவளும் சக்தியே' என்று ஒப்புக்கொண்டார். இதனால் மகிழ்ந்த அன்னபூரணி காசி நகரின் பிரதான தேவியாக அமர்ந்தாள். அங்கு அன்னக்கூடம் அமைத்து சகல உயிர்களின் பசியையும் நீக்கினாள் என்கிறது காசி புராணம். 

அன்னபூரணியை வணங்குபவர்களுக்கு, `அன்னதோஷம்’ என்னும் வறுமை அணுகவே அணுகாது. வடநாட்டில் காசியிலும், தென்னாட்டில் மேல்மலையனூரிலும் அன்னபூரணியின் அருளாட்சி நடைபெறுகிறது. தீபாவளி அன்று இந்த தேவிக்கு விசேஷ விழாவும், வைபோகமும் நாடெங்கும் நடைபெறும். அன்னபூரணி சகஸ்ரநாமம், அன்னபூரணி அஷ்டோத்திர சத நாம ஸ்தோத்திரம், ஸ்ரீ அன்னபூரணி அஷ்டகம்... போன்ற துதிப்பாடல்களைப் பாராயணம் செய்பவர்களின் இல்லங்களில் அன்னத்துக்குக் குறைவே இருக்காது என்று ஞான நூல்கள் குறிப்பிடுகின்றன. சகலருக்கும் பசியை நீக்கிய பிறகே இந்த அன்னை தனது பசியாறுவாள் என்றும் கூறப்படுகிறது. 

வயிற்றுப் பசியை மட்டுமல்ல ஞானப் பசியையும் போக்க வல்லவள் மாதா அன்னபூரணி. அள்ள அள்ளக் குறையாத அட்சயப் பாத்திரத்தில் பால் அன்னம் கொண்டு உலக உயிர்களின் பசிப் பிணி போக்கும் அன்னை அன்னபூரணியின் பிரியமும் அருளும் நமக்கு நாளும் கிடைக்கவேண்டுமெனில், அன்னதானம் செய்வது ஒன்றே சிறந்த வழி.  ஆம், `உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோர்' என்று சங்க இலக்கியம் சொல்வதைப்போல, உணவளித்தவர் அந்த உயிரைக் காத்தவர் என்றே போற்றப்படுவார். எனவே, சக உயிர்களை நேசித்து உணவளிப்பவர்கள் வெகு நிச்சயமாக அன்னபூரணியின் அருளைப் பெறுவார்கள் என்று ஞான நூல்கள் குறிப்பிடுகின்றன. 


டிரெண்டிங் @ விகடன்