ஞானத்தின் வடிவான ஹயக்ரீவ மூர்த்தி அவதார தினம் இன்று!

ஸ்ரீஹயக்ரீவர், ஞானத்தின் வடிவாகத் தோன்றியவர். ஆடி மாத பௌர்ணமி தினமான இன்றுதான் ஹயக்ரீவ மூர்த்தி தோன்றினார் என புராணங்கள் கூறுகின்றன. சைவ சமயத்தில் தட்சிணாமூர்த்தியை வணங்குவதைப்போல வைணவர்கள் ஹயக்ரீவரை வணங்குகிறார்கள். குதிரை முகமும், மனித உடலும் கொண்ட இந்த நாராயண மூர்த்தியின் வடிவம் அஞ்ஞானத்தை அழிக்கக் கூடியது.  அசுரர்களிடமிருந்து வேதங்களை மீட்டுவந்த பரிமுகரை இந்த நன்னாளில் வழிபட்டால், சகல கலைகளும் ஸித்திக்கும்; ஞானம் கைகூடும்.

மது, கைடபன் பிரம்மாவிடமிருந்த வேதங்களைக் கவர்ந்து சென்றார்கள். அதனால் சிருஷ்டி நின்றுபோனது. தேவர்கள் திருமாலை தஞ்சமடைய, அசுரர்களை அழித்து வேதங்களை மீட்க அவரும் குதிரை முக அவதாரம் எடுத்து அசுர சகோதரர்களுடன் போர் புரிந்தார். வேதங்களை மீட்டு சிருஷ்டியை மீண்டும் தொடங்கச் செய்தார். அதுமட்டுமின்றி தேவர்களுக்கு ஞானமளிக்கும் சூத்திரங்களை கற்றுத் தந்தார்.

ஹயக்ரீவ மூர்த்தி

ஸ்படிகம் போன்ற தூய்மை கொண்டவரும் ஞான இன்பத்துக்கு  ஆதாரமானவருமாகிய ஹயக்ரீவ பெருமான் லட்சுமியை மடியில் இருத்தி வைத்திருப்பார். ஞானமும் செல்வமும் கூடிய இந்த ரூபத்தை வணங்கினால் இரண்டு செல்வங்களும் தடையின்றி கிடைக்கும் என்கிறது ஆன்மிக நூல்கள். பள்ளி மற்றும் கல்லூரியில் படிக்கும் மாணவ, மாணவியர்கள் நாள்தோறும் ஹயக்ரீவ மந்திரத்தைச் சொல்லி வணங்கினால் கல்வியில் சிறந்து விளங்குவர். குறிப்பாக ஹயக்ரீவர் தோன்றிய ஆடி பௌர்ணமி நாளான இன்று அவரை வணங்கி கல்வி, கலைகளில் மேம்படலாம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!