தட்சிணாமூர்த்தியாக ஈசன் அமர்ந்த குரு பௌர்ணமி நாள் இன்று!

இன்று ஆடி பௌர்ணமி. இந்த நாளை வியாச பூர்ணிமா, குரு பௌர்ணமி என்றும் அழைப்பார்கள். வியாசபூஜை எனும் குருவழிபாடு இந்த நாளில் விசேஷம். கல்வி, கலைகள் கற்ற மாணவர்கள் ஆடி மாதம் வரும் பௌர்ணமியில் கல்வி மற்றும் ஞானம் அளித்த குருவினை வணங்கி வழிபடுவார்கள். அதுமட்டுமின்றி கலை, கல்வியின் தெய்வங்களான கீதை அருளிய ஸ்ரீகிருஷ்ணர், தட்சிணாமூர்த்தி, ஹயக்ரீவர், சரஸ்வதி, குருபகவான், புதன் போன்றவர்களை வணங்கி அருள்பெறுவார்கள். பாரதம் சொன்ன வியாசர், ராமாயணம் எழுதிய வால்மீகி,  உபநிடதங்களுக்கு விளக்கம் இயற்றிய ஆதிசங்கரர், மத்வர்,  ராமானுஜர் போன்ற ஞானியர்களையும் வணங்குவது வழக்கம். இந்த நாளில் ஞான வடிவாக புத்த பகவானை வணங்குவதும் பௌத்தர்களின் வழக்கம்.

குரு பௌர்ணமி

தட்சிணாயணத்தின் முதல் பௌர்ணமியான இன்றுதான் ஆலமர்ச்செல்வனான தட்சிணாமூர்த்தி கல்லால மரத்தடியே தெற்கு நோக்கி அமர்ந்து, சனகாதி முனிவர்களுக்கு மௌன நிலையில் முத்திரை காட்டி உபதேசித்தார். ஆதிசிவன் குருவாக இருந்து உபதேசித்த நாள் என்பதால் இந்த பௌர்ணமி குரு பௌர்ணமி என்று அழைக்கப்படுகிறது. குருவின் திருவருள் நிரம்பி வழியும் இந்த நாளில் நமக்கு கல்வியும் ஞானமும் வழங்கிய எல்லா குருமார்களையும் வணங்கி மானசீக வாழ்த்தைப் பெற்றுக்கொள்வோம். இந்த நாளில் மேற்கொள்ளப்படும் தியானமும் தவமும் சிறப்பானவை என ஆன்மிக நூல்கள் தெரிவிக்கின்றன. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!