நுண்சிற்பங்கள், காசி விஸ்வேஸ்வரர் கோயில்... கர்நாடகாவின் கலைப்பொக்கிஷம் லக்குண்டி!

மேலைச் சாளுக்கியர்களின் கலைத்திறனுக்கு பதாமி, பட்டடக்கல் ஆகிய இடங்களில் இருக்கும் சிற்பங்கள் சாட்சியாக இருப்பதைப்போல், கல்யாணி சாளுக்கியர்களின் கலைத் திறனைப் பறைசாற்றுகின்றன லக்குண்டி கோயில்கள்...

நுண்சிற்பங்கள், காசி விஸ்வேஸ்வரர் கோயில்... கர்நாடகாவின் கலைப்பொக்கிஷம் லக்குண்டி!

ந்தக் காலத்தில் ஆட்சி செய்த மன்னர்கள் தெய்வ பக்தியிலும் கலைகளைப் போற்றுவதிலும் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தனர். அவர்களின் வீர சாகசங்களை வரலாற்றுப் பக்கங்களில் காணும் நாம், அவர்களின் தெய்வ பக்தியையும் கலைகளில் கொண்டிருந்த ஈடுபாட்டையும் அவர்கள் எழுப்பிய கோயில்களில் கண்டுணரலாம். அவ்விதம், கல்யாணி சாளுக்கியர்களின் கலையார்வத்துக்குச் சான்றாக விளங்கிக்கொண்டிருக்கிறது, கர்நாடக மாநிலம், கடாக் நகரிலிருந்து 12 கி.மீ தொலைவிலிருக்கும் லக்குண்டி கிராமம்.

லக்குண்டி கோயில்கள் 

இன்று சிறிய கிராமமாகச் சுருங்கிவிட்ட லக்குண்டி, ஒருகாலத்தில் மிகவும் பிரசித்திபெற்ற நகராக விளங்கியிருக்கிறது. அங்கே அமைந்திருக்கும் அற்புதமான ஆலயங்களே அதற்குச் சான்று. சிதிலமடைந்த 50-க்கும் மேற்பட்ட கோயில்கள், நூற்றுக்கும் மேற்பட்ட படிக்கட்டுகளுடன்கூடிய கிணறுகள் நிறைந்திருக்கின்றன இந்தக் கிராமத்தில்.  

மேலைச் சாளுக்கியர்களின் கலைத்திறனுக்கு பதாமி, பட்டடக்கல் ஆகிய இடங்களில் இருக்கும் சிற்பங்கள் சாட்சியாக இருப்பதைப்போல், கல்யாணி சாளுக்கியர்களின் கலைத் திறனைப் பறைசாற்றுகின்றன லக்குண்டி கோயில்கள். கோயில்களின் சொர்க்கபுரியாகத் திகழும் லக்குண்டி, ஹொய்சாளப் பேரரசர் இரண்டாம் வீர பல்லாலன் காலத்தில் முக்கியமான படைவீடாகவும் விளங்கியது.

லக்குண்டி

அந்தக் காலத்தில் 'லோக்கிகுண்டி' என்பதுதான் இந்தப் பகுதியின் பெயர். மருவி லக்குண்டி ஆகிவிட்டது. அந்தக் காலத்தில் அரிய கலைநகரமாக வடிவமைக்கப்பட்ட இந்தக் கிராமம், இன்று வீடுகளுக்கு மத்தியில் புதைந்துவிட்டதுடன், பல கோயில்கள் சிதிலமடைந்தும் விட்டன. எங்கு பார்த்தாலும் புழுதி மயம்தான். 

கருங்கற்களில் செதுக்கப்பட்ட அழகிய நுண் சிற்பங்களும் கருங்கற்களை வழவழப்பாக்கி உருவாக்கப்பட்ட வட்ட வடிவத் தூண்களும் வியப்பூட்டுகின்றன. ஆளுயரச் சிற்பங்களைச் செதுக்குவதில் செலுத்திய கவனத்தைவிட, குறுஞ்சிற்பங்களைச் செதுக்குவதில் கூடுதல் அக்கறை எடுத்துக்கொண்டிருக்கிறார்கள் சாளுக்கியச் சிற்பிகள். முக்கியமாக, காசி விஸ்வேஸ்வரர் கோயில் மற்றும் பிரம்மா ஜினாலயத்தில் உள்ள சிற்பங்கள் சிற்பக்கலையின் உச்சம். மல்லிகார்ஜுனர் கோயில், வீரபத்திரர் கோயில், மாணிகேஸ்வரர் கோயில், லட்சுமி நாராயணர் கோயில், சோமேஸ்வரர் கோயில், நிகந்தேஸ்வரர் கோயில் என்று பல கோயில்கள் இங்கு உள்ளன. அனைத்துமே கலைப் பொக்கிஷங்கள்!

பிரம்மா ஜினாலயம்

பிரம்மா ஜினாலயம்:

கி.பி. 11-ம் நூற்றாண்டின் மத்தியில் கல்யாணி சாளுக்கியர்களால் எழுப்பப்பட்டது இந்தக் கோயில். ஒரு காலத்தில் அந்தப் பகுதியில் சமணம் தழைத்து வளர்ந்திருந்தது என்பதற்குச் சாட்சியாக இந்தக் கோயில் மட்டுமே காணப்படுகிறது. 

லக்குண்டி பிரம்மா

கல்யாணி சாளுக்கியர்களின் கலைப் படைப்புகளுக்குச் சிகரம் வைத்ததுபோல் அமைந்திருக்கும் இந்தக் கோயிலில் மணற் கற்களால் ஆன விமானம், சிற்பங்களால் நிறைந்து காணப்படுகிறது. அர்த்த மண்டபம் மற்றும் பலகைக் கற்களால் ஆன முகப்பு மண்டபத்துடன் வேசர கட்டடக் கலைப் பாணியில் கோயில் அமைந்திருக்கிறது. கோயிலுக்குள் சுமார் நான்கடி உயரத்தில் மகாவீரர் காட்சி தருகிறார். மகாவீரருக்கான கோயிலாக இருந்தாலும், அவரைப் போலவே நான்கடி உயரத்தில் பிரம்ம தேவரின் சிலையும், கஜலட்சுமியின் குறுஞ்சிற்பமும் காணப்படுகிறது. பிரம்ம தேவரின் சிலை இங்கே இருப்பதன் காரணமாகவே இந்தக் கோயில் 'பிரம்மா ஜினாலயம்' என்று அழைக்கப்படுகிறது போலும்!

நான்கு தலைகளுடனும் ஒற்றைக் கல்லாலான மகுடத்துடனும் காட்சிதரும் பிரம்ம தேவரின் ஆடை நேர்த்தி, காதுகளை அலங்கரிக்கும் குண்டலம் மற்றும் ஆபரணங்களின் நுட்பமான சிற்ப வேலைப்பாடுகள், பிரம்ம தேவரின் இதழ்களில் நெளியும் குறுநகை ஆகியவற்றின் எழிலை ரசிப்பதற்காகவேணும் ஒருமுறை லக்குண்டி சென்று வரலாம். வேறெங்கும் காண முடியாதபடி மிகவும் கவனத்துடன் பார்த்துப் பார்த்துச் செதுக்கப்பட்ட பிரம்ம தேவரின் சிலை அற்புதம்! கோயிலில் பல குறுஞ்சிற்பங்கள் காணப்பட்டாலும்கூட பல சமணச் சிற்பங்கள் சிதிலமடைந்து காணப்படுகின்றன. கற்களை எந்த அளவுக்கு நுணுக்கமாகச் செதுக்க முடியும் என்பதைத் தெரிந்துகொள்ள நாம் செல்ல வேண்டிய இடம் லக்குண்டி பிரம்மா ஜினாலயம்தான்.

சிற்பம்

காசி விஸ்வேஸ்வரர் கோயில்:

லக்குண்டியில் காண வேண்டிய மற்றொரு சிறப்பு மிக்க கலைப்படைப்பு காசி விஸ்வேஸ்வரா கோயில். சிவபெருமானுக்கும் சூரிய தேவனுக்கும் சேர்த்துக் கட்டப்பட்ட இரட்டைக் கோயில் இது. கதம்பா மற்றும் கல்யாணி கட்டடக் கலையின் சிறப்பு அம்சங்களுடன் மண்டபம் மற்றும் வட்டத் தூண்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்தக் கோயிலைச் சுற்றிலும் சுவர்களில் செதுக்கப்பட்டிருக்கும் சிற்ப வேலைப்பாடுகள் வேறு எங்குமே காணக் கிடைக்காதவை. மலர்க் கொடியில் பின்னிப் பிணைந்த கின்னரர்கள், யட்சிகள், சாலபஞ்சிகைகள், கட்டை விரல் அளவேயுள்ள நுட்பமான மோகினி என நுட்பமான பல சிற்பங்கள் இங்கே காணக்கிடைக்கின்றன. 

குறுஞ்சிற்பம்

சாளுக்கியர்களின் கலைப் பொக்கிஷங்களான பதாமி, பட்டடக்கல், அய்ஹோல் ஆகிய இடங்களில் சாளுக்கியர்களின் கல் சிற்பங்களையும் கோயில்களையும் காண முடியும். ஆனால், கற்களின் மூலம் நுண் சிற்பங்களை எந்த அளவுக்கு அழகாக வடிக்க முடியும், எந்த அளவுக்கு ஒரு தூணை மிக நேர்த்தியாகச் செய்ய முடியும் என்பதை நிதர்சனமாகப் புரிந்துகொள்ள வேண்டுமானால், லக்குண்டிதான் செல்ல வேண்டும்!

கோயிலின்  படங்களின் தொகுப்பை பார்க்க... இங்கே க்ளிக் செய்யவும்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!