ஆடி அமாவாசையை முன்னிட்டு திருச்செந்தூர் கடற்கரையில் குவிந்த பக்தர்கள்! | Special prayers mark Adi Amavasai in Thiruchendur

வெளியிடப்பட்ட நேரம்: 17:45 (11/08/2018)

கடைசி தொடர்பு:17:45 (11/08/2018)

ஆடி அமாவாசையை முன்னிட்டு திருச்செந்தூர் கடற்கரையில் குவிந்த பக்தர்கள்!

ஆடி அமாவாசையை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கடற்கரையில் சுவாமி அஸ்திரதேவர் தீர்த்தவாரி வைபவம் நடைபெற்றது. தொடர்ந்து, கடற்கரையில் பக்தர்கள் புனித நீராடி, முன்னோர்களுக்குத் தர்ப்பணம் செய்தனர்.

முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படைவீடும் கடற்கரை ஓரத் தலமுமானது திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில். கடற்கரை ஓரத் தலம் ஆனதால், ஆடி அமாவாசை மற்றும் தை அமாவாசை ஆகிய சிறப்பு அமாவாசை தினங்களில் சுவாமி சுப்பிரமணியருக்கு தீர்த்தவாரி நடைபெறுவது வழக்கம். அத்துடன், பக்தர்களும் கடலில் புனித நீராடி சுவாமியை வழிபடுவார்கள்.

ஆடி அமாவாசையை முன்னிட்டு இன்று (11.08.2018) அதிகாலை 3 மணிக்கு திருக்கோயில் நடை திறக்கப்பட்டது. 3.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம் மற்றும் தீபாராதனை, 4 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் மற்றும் தீபாராதனையும் நடைபெற்றது. தொடர்ந்து நடைபெற்ற காலசந்தி பூஜைக்குப் பின்னர், சுவாமி அஸ்திரதேவர் சண்முகவிலாச மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து, சுவாமி கடலில் புனித நீராடும் தீர்த்தவாரி வைபவம் நடைபெற்றது. தொடர்ந்து சுவாமி சண்முகருக்கு சிறப்பு அபிஷேகமும் அலங்கார தீபாராதனையும் மற்ற கால பூஜைகளும் நடைபெற்றது.  

 

அஸ்திர தேவர் தீர்த்தவாரிக்குப் பிறகு, பக்தர்கள் கடலில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர். தென் மாவட்டங்களில் ராமேஸ்வரத்துக்கு அடுத்தபடியாக, திருச்செந்தூர் கடற்கரையில்தான் தர்ப்பணம் செய்வதற்காகப் பக்தர்கள் அதிக அளவில்  குவிவார்கள். ஆடி அமாவாசையை முன்னிட்டு நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் இருந்து திருச்செந்தூருக்கு சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்பட்டுள்ளன.

பக்தர்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களின் கூட்ட நெரிசல் காரணமாகக் கோயில் வளாகம், கடற்கரை, பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.     

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close