'இருப்பதெல்லாம் இறைவனே!' - சுவாமி தயானந்தர் பிறந்ததினப் பதிவு #SwamiDayanandaSaraswati

இருப்பதெல்லாம் இறைவனே என்ற உண்மையை உலகெங்கும் ஒலிக்கச்செய்த ஞானி-  சுவாமி தயானந்தர் பிறந்ததினப் பதிவு...

'இருப்பதெல்லாம் இறைவனே!'   - சுவாமி தயானந்தர் பிறந்ததினப் பதிவு #SwamiDayanandaSaraswati

சுவாமி தயானந்தர் காவிரிக் கரையில் பிறந்து இமாலயத்தின் கங்கைக் கரையில் தவமியற்றிவர். பாரத பண்பாடு மற்றும் கலாசாரத்தை உலகம் முழுதும் பரவச் செய்தவர். அவருடைய பிறந்தநாளே இந்திய நாட்டின் விடுதலை நாளாகவும் அமைந்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்க விஷயம். 

கும்பகோணத்துக்கு அருகிலுள்ள மஞ்சக்குடி கிராமத்தில் கோபாலய்யர்-வாலாம்பாள் தம்பதிக்கு மூத்த மகனாக 15.8.1930 ல் பிறந்தார். பெற்றோர் அவருக்குச் சூட்டிய பெயர் நடராஜன். தன் எட்டாவது வயதில்  தந்தையை இழந்தார். விவசாய வருமானத்தில் தன் நான்கு மகன்களையும் வளர்த்தார் இவரது தாய். தினமும் காயத்ரி ஜபமும், வெள்ளிக்கிழமைகளில் சரஸ்வதி பூஜையும் தவறாது செய்து வந்தார். எஸ்.எஸ்.எல் .சி வரை படித்தார்.

தயானந்தர்

சென்னை வந்து தட்டெழுத்தும் சுருக்கெழுதும் பயின்றார். பின் 'தார்மிக ஹிந்து' பத்திரிகையில் பணியைத் தொடங்கினார். இந்திய விமானப் படையில் சில காலம் பணிபுரிந்தார். லண்டனை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்ட 'லென்ஸ்' (Lens) செய்தி நிறுவனத்தில் பணிபுரிந்தபோது பத்திரிகைத் துறையின் நுணுக்கங்களைக் கற்றார். பின்னர் 'வோகர்ட் பிரதர்ஸ்' என்ற நிறுவனத்தில் தட்டச்சர் பணியில் சேர்ந்து பணியாற்றினார்.

1953-ம் ஆண்டு உபநிடத உண்மைகளால் ஈர்க்கப்பட்டு சின்மயானந்தரின் புத்தகப் பதிப்புப் பணிகளைத் திறம்பட செய்தார். வேதம்  மற்றும் சம்ஸ்கிருதம் இரண்டையும் பண்டிதர்களிடம் முறைப்படி பயின்றார். 'சின்மயா மிஷன்' தோன்றியபின்,  அதன் பணிகளில் முழு மூச்சுடன் ஈடுபட்டார். இதனால் சின்மயா மிஷனில் காரியதரிசி பதவி இவரைத் தேடி வந்தது.

1957-ம் ஆண்டு 'தியாகி' (Thiyagi) என்ற ஆங்கிலப் பத்திரிகையின் ஆசிரியராகப் பொறுப்பேற்றார். ஆன்மிகக் கட்டுரைகளை எழுதும்போது ஆத்ம ஞானம் குறித்த பல விஷயங்களை அறிந்துகொண்டார். பகவத் கீதை புத்தகத்தை நான்கு தொகுதிகளில் பதிப்பிக்கும் பணியை திறம்பட முடித்தார். ஆந்திர மாநிலம் குடிவாடாவில் வசித்த ஸ்வாமி ப்ரணவானந்தரிடம் வேதாந்த ரகசியங்களை விரிவாகக் கற்றார். 1962-ம்  ஆண்டு சிவராத்திரி தினத்தில் முறைப்படி சந்நியாசம் ஏற்றுக்கொண்டார். சந்நியாச ஆசிரமத்தில் அவருக்கு வழங்கப்பட்ட பெயர்  'ஸ்வாமி தயானந்த சரஸ்வதி'. 1632 - ம் ஆண்டு 'தபோவன் பிரசாத்' பத்திரிகையின் ஆசிரியராக பொறுப்பேற்றார்.

பின், ரிஷிகேஷ் சென்று சிறு குடிலில் ஆன்மிக சாதனைகளைத் தொடர்ந்தார். சம்ஸ்கிருத இலக்கணம் மற்றும் உபநிடதங்களின் முடிவாகிய ப்ரஹ்ம சூத்திரமும் பயின்றார். ஆன்மிக சாதகர்களுக்கு வேதாந்தக் கருத்துக்களைக் கற்பித்தார். 

1967 - ம் ஆண்டு இமயமலையின் அடிவாரத்தில், கங்கைக் கரையில் சொந்தமாக ஓர் ஆஸ்ரமம் நிறுவினார். 1982 - ம் ஆண்டு 'ஆர்ஷ வித்யா பீடம்' என்று ஓர் அமைப்பை ஏற்படுத்தினார். இங்கு நீண்ட காலமாக வேதாந்த வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. உலகெங்கும் பரவி இருக்கும் சுவாமிஜியின் சீடர்கள் இங்கு வந்து ஆன்மிக முகாம்களை நடத்துகிறார்கள். அயல் நாடுகளுக்கும் சென்று வேதாந்த கருத்துகளைப் பரப்பி ஆஸ்ரமங்களை நிறுவினார். இவர் வெளியிட்ட 'வீடு தோறும் கீதை' புத்தகத்தை  உலகம் முழுவதும் பல மதத்தைச் சேர்ந்தவர்களும் விரும்பிப் படிக்கின்றனர். 

தயானந்த சரஸ்வதி

இவர் துவக்கிய,  'Aim  For  Seva " அமைப்பு இந்தியா முழுவதும் கல்வி மற்றும் சமூகப்  பணிகளை முன்னெடுத்துச் செய்கிறது. தான் பிறந்த மஞ்சக்குடி கிராமத்தில் கல்வி அறக்கட்டளை நிறுவி பள்ளி மற்றும் கல்லூரியை ஆரம்பித்து முன்னோடி கிராமமாக மேம்படுத்தினார். 

ஸ்வாமிஜி மிகவும் எளிமையானவர். அனைவரையும் சமமாகவே பாவித்து அன்பு செலுத்துபவர். சிக்கலான வேதாந்த விஷயங்களைக்கூட மிகவும் எளிமையாகவும் கதைபோலவும் நகைச்சுவை கலந்து சொல்லி விளங்க வைத்தவர். குறிப்பாக, வேதாந்தக் கருத்துகளை இன்றைய இளைய தலைமுறையினரிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்பதில் பிரத்தியேகமான கவனமும் அக்கறையும் கொண்டிருந்தார்.

''இன்றைய இளைஞர்கள் நம்மைவிடவும் மிகுந்த புத்திசாலிகள். எதையும் கற்றுக் கொள்வதில் துடிப்பும் ஆர்வமும் உள்ளவர்கள். அவர்களிடம் உள்ள ஒரே குறை பொறுப்பு இல்லாததுதான். நாம் முதலில் அவர்களுடைய பொறுப்புணர்வை அவர்கள் உணரும்படி செய்யவேண்டும். இது சற்று சவாலான பணிதான். ஆனால், நாம் சிரத்தை எடுத்து இதைச் செய்துதான் ஆகவேண்டும்.'' என்றார் ஸ்வாமிகள்.

இருப்பதெல்லாம் இறைவனே என்ற வேதாந்த உண்மையை உலகெங்கும் ஒலிக்கச் செய்த தயானந்தர், 2015 - ம் ஆண்டு செப்டெம்பர் 23 - ம் நாள் இறைவனடி சேர்ந்தார். அவரது பூத உடல் உரிய மரியாதைகளுடன் சமாதியாக நிறுவப்பட்டது. அவருடைய முக்திக்குப் பிறகு 2016 - ம் ஆண்டு அவருக்கு  'பத்ம பூஷண்' விருது வழங்கியது மத்திய அரசு. 

சிந்தனைக்கு எட்டாத சீரிய கருத்துகளைத் தெளிந்த ஆங்கிலத்தில் கேட்பவர்கள் வியக்கும் வண்ணம் விளக்கிய மஹான், ஆன்மிக சாதகர்களின் இதய சிம்மாசனத்தில் என்றென்றும் வீற்றிருப்பார்.

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!