திருச்செந்தூர் வெயிலுகந்தம்மன் கோயிலில் ஆவணித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

திருச்செந்தூர், வெயிலுகந்தம்மன் கோயிலில் ஆவணி உற்சவ திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இத்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வரும் 27-ம் தேதி நடைபெறுகிறது.

முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலுடன் இணைந்த உபகோயிலான, வெயிலுகந்தம்மன் திருக்கோயில் மிகவும் பிரசித்திபெற்றது. இக்கோயிலில் ஆண்டுதோறும் மாசி மற்றும் ஆவணி திருவிழா 10 நாள்கள் வெகு விமரிசையாக நடக்கிறது. இந்த வருட ஆவணி உற்சவத் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் விசேச அலங்கார தீபாராதனை நடைபெற்றது. கொடியேற்றத்தை முன்னிட்டு பல்லக்கில் கொடிபட்டம் வீதி உலாவாகக் கோயிலைச் சுற்றி எடுத்து வரப்பட்டது. 

பின்னர், அம்மன் சந்நிதி எதிரே உள்ள கொடிமரத்தில் மேளதாளங்கள் முழங்க கொடியேற்றப்பட்டது. கொடிமரத்துக்கு 16 வகையான வாசனை திரவிய அபிஷேகங்கள் நடைபெற்றது. கொடிமரம் தர்ப்பைப்புல் மற்றும் பலவகை மலர்களால் அலங்கரிக்கப்பட்டது. தொடர்ந்து கொடிமரத்துக்கு வேதபாராயணம் முழங்க சோடஷ உபசார தீபாராதனை நடந்தது.

முதல் நாள் பூஞ்சப்பரத்திலும், 2-ம் நாள் பூதவாகனத்திலும், 3-ம் நாள் சிம்ம வாகனத்திலும், 4-ம் நாள் பூஞ்சப்பரத்திலும், 5-ம் நாள் வேதாள வாகனத்திலும், 6-ம் நாள் அன்ன வாகனத்திலும், 7-ம் நாள், 8-ம் நாள் பூஞ்சப்பரத்திலும், 9-ம் நாள் மான் வாகனத்திலும் தினமும் காலை மற்றும் இரவு அம்மன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி ரத வீதிகளில் வீதி உலா வருதல் நடைபெறுகிறது. இத்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வரும் 27-ம் தேதி திருத்தேரோட்டம் நடைபெறுகிறது.  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!