வெளியிடப்பட்ட நேரம்: 23:00 (22/08/2018)

கடைசி தொடர்பு:23:00 (22/08/2018)

திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் 40 புதிய சிசிடிவி கேமராக்கள்!

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில், திருட்டுச்சம்பவங்கள்  மற்றும் பக்தர்களை கண்காணிக்கும் வகையில்  புதிதாகப் பொருத்தப்பட்டுள்ள 40 சிசிடிவி கேமராக்கள் இன்று தொடங்கி வைக்கப்பட்டன.

சிசிடிவி கேமரா தொடக்க நிகழ்ச்சி

முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடும் கடற்கரையோரத் தலமும் ஆனது தூத்துக்குடி மாவட்டம் அருள்மிகு திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோயில். ஆண்டு முழுவதும் நடை திறந்திருக்கும் இக்கோயிலுக்கு வெளியூர்களிலிருந்து வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. கந்தசஷ்டி, தைப்பூசம், வைகாசி விசாகம், ஆவணித் திருவிழா, மாசித்திருவிழா, புத்தாண்டு போன்ற விழாக்காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் இக்கோயிலில் கூடுவர்.

திருக்கோயில் உள்பகுதியில் ஏற்கெனவே 16 சிசிடிவி கேமராக்கள் உள்ளன. இவை பழுதடைந்துவிட்ட நிலையில், தற்போது திருக்கோயின் உள்பகுதியில் ரூ.12 லட்சம் மதிப்புள்ள 40 புதிய சிசிடிவி கேமராக்கள் திருக்கோயிலின் தக்கார் கண்ணன் ஆதித்தனின்  சொந்த செலவில் பொருத்தப்பட்டுள்ளன. கோயிலில் உள்ள சுவாமி சிலைகள், சுவாமி நகைகள், உண்டியல்கள், திருக்கோயில் பணியாளர்கள் ஒழுங்குமுறை கண்காணிப்பு, பக்தர்கள் நெருக்கடியின்றி சுவாமி தரிசனம் செய்வதைக் கண்காணித்தல், பக்தர்கள் பாதுகாப்பு மற்றும் இதர குற்ற நடவடிக்கைகள் ஆகியவற்றைக் கண்காணிக்கும் வகையில் இந்தக் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

இதற்கான தொடக்கவிழா கோயில் வளாகத்தில் உள்ள கம்ப்யூட்டர் அறையில் இன்று நடந்தது. திருக்கோயிலின் உள்பகுதி நுழைவு வாயில், சண்முகவிலாச மண்டபம், முதல் கிரிப்பிராகாரம், உள் பிராகாரம், மகா மண்டபம், வெளியேறும் பகுதி உள்ளிட்ட பகுதிகளில் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

நீங்க எப்படி பீல் பண்றீங்க