வெளியிடப்பட்ட நேரம்: 08:16 (23/08/2018)

கடைசி தொடர்பு:08:54 (23/08/2018)

பாபா உங்களைச் சோதிப்பார்... உங்களிடம் விளையாடுவார் - பக்தர்களின் அனுபவம்! #SaiBaba

பாபா உங்களைச் சோதிப்பார்... உங்களிடம் விளையாடுவார் - பக்தர்களின் அனுபவம்! #SaiBaba

து ஒரு கோடைக் காலம். வெயில் கடுமையாக வாட்டி எடுத்தது. ஒரு நாள் பாபாவின் பக்தரான ரேகே, பாபாவுக்காக எலுமிச்சைப் பழரசம், நன்னாரி வேர், சர்க்கரை ஆகியவற்றைக் கொண்டு இனிப்பு சேர்த்து சர்பத் தயாரித்தார். அவருக்குக் கொடுப்பதற்கு முன்பு தான் கொஞ்சம் சுவைத்துப் பார்த்தார். இனிப்பாக இருந்தது. தான் தயாரித்த பழரசத்தை எடுத்துக்கொண்டு துவாரகாமாயிக்கு வந்தார். தான் கொண்டு வந்த பழரசத்தை பாபாவுக்குக் கொடுத்தார். அதை வாங்கிக் குடித்தவர் முகத்தைச் சுளித்தபடி, ``சே, சர்பத் ஒரே புளிப்பாக இருக்கிறதே'' என்று கூறினார். ரேகேவுக்கு அதிர்ச்சி. தான் சொன்னதை ரேகே நம்பவில்லை என்பதைப் புரிந்துகொண்டவர், அருகிலிருந்த தீக்ஷித்திடம் கொஞ்சம் சர்பத் கொடுத்து குடிக்கும்படிக் கூறினார். தீக்ஷித்தும் பருகிப் பார்த்துவிட்டு, ``உண்மைதான் ரேகே. சர்பத் புளிப்பாகத்தான் இருக்கிறது'' என்று கூறினார். ரேகேவும் கொஞ்சம் சுவைத்துப் பார்த்தார். ஒரே புளிப்பாக இருந்தது. சற்று நேரம் சென்ற பிறகு பாபா மறுபடியும் அந்த சர்பத்தைக் குடித்துவிட்டு, 'அட, இப்போது மிகவும் இனிப்பாக இருக்கிறதே' என்றபடி தீக்ஷித்துக்கும் கொஞ்சம் சர்பத் கொடுத்தார். அவரும் குடித்துவிட்டு இனிப்பாக இருப்பதாகக் கூறினார். தொடர்ந்து ரேகேவுக்கும் கொடுத்தார். அவரும் பருகிப் பார்த்தார். அமுதமாய் இனித்தது.

பாபா

எல்லாம் பாபாவின் திருவிளையாடல்தான் என்பதை ரேகே புரிந்துகொண்டார். ரேகேவிடம், ``நீ என் குழந்தைதானே! அதனால்தான் உன்னுடன் கொஞ்சம் விளையாடிப் பார்த்தேன்'' என்றார் சாயி.

பழரசத்தைப் போலவே பழத்தைக் கொண்டும் ஓர் அருளாடல் புரிந்தார். காகா மஹாஜனி என்பவரும் பாபாவின் பக்தர்களில் ஒருவர். அவர் ஜேதாபாய் என்பவரிடம் வேலை செய்து வந்தார். ஜேதாபாய் பெரும் செல்வந்தர். காகா மஹாஜனி அடிக்கடி ஷீரடிக்கு வந்து  தரிசித்துச் செல்வது வழக்கம். பாபாவின் மகிமைகளை அவர் மற்றவர்களிடம் பரவசத்துடன் பகிர்ந்துகொள்வார். அதேபோல் தன் முதலாளியிடமும் அவரின் அருமை பெருமைகளை பரவசத்துடன் பகிர்ந்துகொள்வது வழக்கம். ஆனால், ஜேதாபாய்க்கு காகா மஹாஜனி சொல்வதில் நம்பிக்கை ஏற்படவில்லை. எல்லாம் வெறும் உளறல் என்று உதாசீனப்படுத்தினார். 

பாபா

ஒரு நாள் காகா மஹாஜனி ஷீரடிக்குச் சென்றபோது, தானும் வருவதாகக் கூறி உடன் சென்றார் ஜேதாபாய். பாபாவின் ஆற்றலை சோதிக்கவே அவர் வருகிறார் என்பது காகா மஹாஜனிக்குத் தெரியாது. பாபாவிடம் பக்தி கொண்டே வருவதாக அவர் நினைத்துவிட்டார்.

ஜேதாபாய் பாபாவுக்குக் கொடுப்பதற்காக கொஞ்சம் திராட்சைப் பழங்களும் வாங்கிக் கொண்டார். துவாரகாமாயிக்குச் சென்று  தரிசித்துவிட்டு, தான் வாங்கி வந்த திராட்சைப் பழங்களை பாபாவுக்குச் சமர்ப்பித்தார். பெற்றுக்கொண்ட பாபா, அவர்கள் இருவரையும் உட்காரும்படிக் கூறினார். 

சற்று நேரம் சென்றது. திராட்சைப் பழங்களிலிருந்து சில பழங்களை எடுத்து ஜேதாபாய்க்குக் கொடுத்த பாபா, அதைச் சாப்பிடும்படிக் கூறினார். வாங்கி வாயில் போட்டுக்கொண்ட ஜேதாபாய், பழத்தில் பெரிய அளவில் விதைகள் இருப்பதைக் கண்டு, துப்பவும் முடியாமல், மெல்லவும் முடியாமல் திணறினார். நாசூக்காக அந்த விதைகளைக் கையில் எடுத்து தன் ஜிப்பா பாக்கெட்டில் போட்டுக்கொண்டார். விலையுயர்ந்த பட்டுத் துணியில் தைக்கப்பட்ட ஜிப்பா பாழாகிறதே என்ற கவலை அவருக்கு. 

பாபா

இன்னும் சற்றுப் பொறுத்து மேலும் கொஞ்சம் திராட்சைப் பழங்களை ஜேதாபாயிடம் கொடுத்து சாப்பிடச் சொன்னார். தனக்கு பாபாவிடம் பெரிதாக ஈடுபாடு இல்லாவிட்டாலும், மற்றவர்கள் மதித்துப் போற்றும் மகான் என்பதால், அவரின் வார்த்தைகளை மீறமுடியாமல் தயக்கத்துடன் திராட்சைப் பழங்களை வாயில் போட்டு பட்டும் படாமலும் மெல்லத் தொடங்கினார். ஆச்சர்யப்படும் வகையில் பழத்தில் விதைகளே இல்லாததுடன், அதுவரை அவர் சுவைத்திராத அற்புதமான சுவையுடன் இருந்தது. 

``பாய், உங்களிடம் கொஞ்ச நேரம் விளையாட விரும்பினேன். அதனால்தான் அப்படிச் செய்தேன்'' என்று கூறினார். 

சாயி தன்னிடம் விளையாடியதாகக் கூறினாலும்கூட, தம்முடைய சந்தேகத்தைத் தீர்ப்பதற்காகவே அப்படி ஓர் அருளாடல் நிகழ்த்தினார் என்பதை உணர்ந்துகொண்ட ஜேதாபாய், காகா மஹாஜனியுடன் ஊருக்குத் திரும்பும்போது அவரின் அருமை பெருமைகளைப் பலவாறாகப் புகழ்ந்து பேசிக்கொண்டே இருந்தார்.


டிரெண்டிங் @ விகடன்