வாஜ்பாய் அஸ்தியைத் தமிழக நீர்நிலைகளில் கரைப்பது ஏன்?

வாஜ்பாயின் அஸ்தி, சென்னை, கன்னியாகுமரி, திருச்சி, ராமேஸ்வரம், ஈரோடு, மதுரை ஆகிய இடங்களில் உள்ள புண்ணிய நதிகளில் ஒரே நேரத்தில் ஆகஸ்ட் 26-ம் தேதி கரைக்கப்பட உள்ளது.

வாஜ்பாய் அஸ்தியைத் தமிழக நீர்நிலைகளில் கரைப்பது ஏன்?

ஞ்ச பூதங்களால் உருவான உடல் மரணமடைந்ததும் மீண்டும் பஞ்ச பூதங்களைச் சென்று சேர வேண்டும் என்ற உயரிய நோக்கத்துடன் நமது இறுதிச் சடங்கு முறைகள் உருவாக்கப்பட்டன. இறந்த உடல்கள், புதைப்பதன் மூலம் மெதுவாக பஞ்ச பூதங்களை அடைகிறது என்றால், எரிப்பதன் மூலம் விரைவாகச் சென்றடைகின்றன. தீயால் தகனமாகும் உடல் காற்றாகக் கலக்கிறது. உடலின் சாரங்கள் பூமியையும் இறுதியாக எஞ்சிய அஸ்தி நீரையும் அடைவதன் வழியாக ஐந்து பூதங்களையும் மனித உடல் அடைகிறது. புண்ணிய தீர்த்தங்களில் இறந்தவரின் அஸ்தி கரைக்கப்படும்போதுதான் அந்த ஆன்மா சாந்தி பெற்று பித்ரு லோகத்தை அடைகிறது என்பது நமது நம்பிக்கை. இந்த நம்பிக்கையை ஒட்டியே முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் அஸ்தி நாடெங்கும் உள்ள புண்ணிய தீர்த்தங்களில் கரைக்கப்படுகிறது. 

வாஜ்பாய்

ஆகஸ்ட் 16-ம் தேதி காலமான வாஜ்பாயின் உடல் 17-ம் தேதி எரியூட்டப்பட்டது. அவரது அஸ்தியின் ஒரு பகுதி ஹரித்துவாரிலுள்ள கங்கை நதியில் கரைக்கப்பட்டது. மிஞ்சிய அஸ்தியைப் பிரித்து இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் உள்ள புண்ணிய தீர்த்தங்களில் கரைக்க திட்டமிட்டார்கள். ஆகஸ்ட் 26-ம் தேதி  தமிழகத்தின் 6 முக்கிய புண்ணிய தீர்த்தங்களில் அவரது அஸ்தி கரைக்கப்படவுள்ளது.  

அஸ்தியை நதியில் கரைக்கும் சடங்கு `சஞ்சயனம்' எனப்படுகிறது. `எங்கிருந்து வந்தோம்', 'எங்குச் செல்கிறோம்' என்பதே புரியாத மனித வாழ்க்கை நீரைப் போன்றதுதான். அதனால்தான் உடலைவிட்டு வெளியேறும் ஆன்மா எங்கு சென்றாலும், எதுவாகப் பிறந்தாலும், கங்கையின் அம்சமான நீரைப்போல பயனுள்ளவாறு இருக்க வேண்டும் என வேண்டிக்கொண்டு ஜீவனின் இறுதி அடையாளமான அஸ்தியைப் புனித தீர்த்தங்களில் கரைக்கிறார்கள். வாழும்போது பலருக்கும் பயன்பட்ட ஜீவன், காலமானதும் சதாசிவனை சரணடைய வேண்டும் என்றே நீறணியும் நெற்றிக்கண்ணனை வணங்கி உடலைத் தகனம் செய்து சாம்பலாக்கி, கங்கையின் அம்சமான நீரில் கரைக்கிறார்கள்.

வாஜ்பாய் அஸ்தி

அஸ்தியை எப்படிக்  கரைக்க வேண்டும்? அதன் தாத்பர்யம் என்னவென்று அறிந்தே செய்ய வேண்டும். அப்படிக் கரைத்தால் மட்டுமே இறந்தவர் ஆன்மா அமைதியடைந்து எல்லோரையும் வாழ்த்தி விடைபெறும். அதனால் உரிய நியமப்படி அஸ்தி கரைப்பது நடக்க வேண்டும். அஸ்திக் கலசத்தை தீர்த்தக் கரைகளில் வைக்க வேண்டும். கலசத்தை இறந்தவர் உடலாகப் பாவித்து மரியாதை செய்ய வேண்டும். இறந்துபோன ஆன்மாக்களின் மூக்குக்கு ஊதுபத்தி ஏற்ற வேண்டும். ஆன்மாவின் செவிக்கு இனிமையாகத் தேவாரம், திருவாசகம், திவ்யப்பிரபந்தம் பாட வேண்டும். வாய்க்குச் சுவையாகத் தாம்பூலம், பழங்கள் வைக்க வேண்டும். கண்ணுக்கு இனிமையாகத் தீபம் காட்ட வேண்டும். அஸ்தி கலசத்தைக் கைகளால் தொட்டு வணங்கி அவர்களை ஸ்பரிசித்து மரியாதை செலுத்த வேண்டும். இப்படிச் செய்யும்போது அஸ்திக்குள் ஆன்மா ஆவாகனமாகிவிடும் என்பது ஐதிகம். ஆரத்தி காட்டி இறந்தவரை மனதில் தியானித்து, `அவர் நற்கதி அடைய வேண்டும், இறைவனடி சேர வேண்டும்' என்று வேண்டி வணங்க வேண்டும். 

பிறகு, அஸ்தியைத் தலையில் வைத்துக்கொண்டு நீரில் மார்பு முங்கும் வரை இறங்கி சூரிய தேவனை எதிர்நோக்கியபடி நின்று வணங்க வேண்டும். அவரவர் விருப்படி, ,`சிவ சிவ', 'கோவிந்தா கோவிந்தா', 'ஓம் முருகா' என்று கூறியபடி தலையிலிருந்து இறக்கி இடது கையில் ஏந்தி வலது கையால் அஸ்தியைக் கரைக்க வேண்டும். அப்போது வில்வம், தர்ப்பை சேர்த்து நீரிலிட்டு இறந்தவர் ஆன்மா மோட்சம் அடையப் பிரார்த்திக்க வேண்டும்.  

தமிழிசை

வாஜ்பாயின் அஸ்தி, சென்னை, கன்னியாகுமரி, திருச்சி, ராமேஸ்வரம், ஈரோடு, மதுரை ஆகிய இடங்களில் உள்ள புண்ணிய நதிகளில் ஒரே நேரத்தில் ஆகஸ்ட் 26-ம் தேதி கரைக்கப்பட உள்ளது. சென்னையின் வங்கக்கடல், முக்கடல் சங்கமிக்கும் குமரித்துறை, கங்கைக்கு நிகரான காவிரி, ராமேஸ்வரத்தின் அக்னித் தீர்த்தம், பவானி கூடுதுறை, சொக்கநாதரால் உருவாக்கப்பட்ட புண்ணியமிகு வைகை எனத் தமிழகத்தின் முக்கிய புண்ணிய தீர்த்தங்களில் அஸ்தி கரைக்கப்படும். இந்தியா முழுவதும் உள்ள மக்களால் விரும்பப்பட்ட வாஜ்பாயின் அஸ்தி இந்தியா முழுவதும் கரைக்கப்படவிருப்பது குறிப்பிடத்தக்கது! 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!