வெளியிடப்பட்ட நேரம்: 09:09 (24/08/2018)

கடைசி தொடர்பு:11:07 (24/08/2018)

குடும்பத்தில் மகிழ்ச்சியை வாரி வழங்கும் வரலட்சுமி விரதம்... கடைப்பிடிப்பது எப்படி?

வரலட்சுமி விரதம் மேற்கொண்டு மகாலட்சுமியைப் பூஜித்து வழிபட்டால் இல்லத்தில் மகாலட்சுமியின் கடாட்சம் பெருகும்...

குடும்பத்தில் மகிழ்ச்சியை வாரி வழங்கும் வரலட்சுமி விரதம்... கடைப்பிடிப்பது எப்படி?

செல்வத்துக்கு அதிபதியான மகாலட்சுமியின் ஓர் அம்சமே வரலட்சுமி. கேட்கும் வரங்கள் அனைத்தையும் அருளும் வரலட்சுமியை விரதமிருந்து வழிபடும் நாளே வரலட்சுமி விரத நன்னாள். வருடந்தோறும் ஆடி அமாவாசைக்குப் பிறகு, பௌர்ணமிக்கு முன்பு வரும் வெள்ளிக்கிழமைதான் வரலட்சுமி விரதம் அனுஷ்டிக்கும் நாள். பெரும்பாலும் வரலட்சுமி விரதம் ஆவணி மாதத்திலேயே வரும்.

செல்வம், பூமி, கல்வி, அன்பு, புகழ், சாந்தி, மகிழ்ச்சி, பலம் ஆகிய எட்டையும் அருளும் தேவியர்களே அஷ்டலட்சுமியர் என்று வழிபடப்படுகின்றனர். அஷ்டலட்சுமியரின் அம்சமாக இருந்து கேட்கும் வரங்களை அருள்பவளே வரலட்சுமி.  

வரலட்சுமி விரதம்

மகாலட்சுமி அவதரித்ததாகச் சொல்லப்படும் வரலட்சுமி விரத நாளில் விரதம் இருப்பதன் அவசியம் பற்றியும், அதனால் நமக்கு கிடைக்கக்கூடிய பலன்கள் பற்றியும் ஞானநூல்கள் விவரிக்கின்றன. வரலட்சுமி விரத மகிமையை உணர்த்தும் ஒரு திருக்கதை இங்கே உங்களுக்காக...

பத்ரசிவன் என்ற மன்னன் மிகச்சிறந்த விஷ்ணு பக்தன். அவனது மனைவி கரசந்திரிகா. இவர்களது ஒரே மகள் சியாமபாலா திருமணம் முடிந்து சென்ற பிறகு, ஒரே மகளைப் பிரிந்த காரணத்தினால் கரசந்திரிகா துயருற்றாள். கரசந்திரிகாவின் துயர் நீக்க மகாலட்சுமியே வயதான சுமங்கலி வடிவில் சென்றாள். வந்திருப்பது மகாலட்சுமி என்பதை அறியாத கரசந்திரிகா அவமானப்படுத்தி அனுப்பிவிட்டாள். மகாலட்சுமி அங்கிருந்து வெளியேறியதால், சுபிட்சம் இழந்த பத்ரசிவன் - கரசந்திரிகா அனைத்து செல்வங்களையும் இழந்தனர். தனது பெற்றோர்களின் வறுமையை அறிந்த சியாமபாலா ஒரு குடம் நிறையப் பொற்காசுகளை அனுப்பி வைத்தாள். ஆனால், கரசந்திரிகாவின் கை பட்டதும் பொற்காசுகள் கரியாகின. தனது தவற்றை உணர்ந்த கரசந்திரிகா சியாமபாலாவின் ஆலோசனைப்படி வரலட்சுமி விரதம் அனுஷ்டித்தாள். அதன் பலனாக இழந்த செல்வங்கள் அனைத்தையும் மறுபடியும் பெற்றதுடன், வம்சம் தழைக்க ஓர் ஆண்குழந்தையையும் பெற்றாள். 

மகாலட்சுமி

விரதம் அனுஷ்டிக்கும் முறை:

வியாழக்கிழமை அன்று இரவே வீட்டையும், பூஜை செய்யும் இடத்தையும் தூய்மை செய்ய வேண்டும். வெள்ளிக்கிழமை அதிகாலையில் எழுந்து குளித்து, வாசலில் பச்சரிசி மாவினால் கோலம் போட வேண்டும். வாசலில் மாவிலைத் தோரணங்கள் கட்ட வேண்டும். பூஜையறையில் ஒரு தலைவாழை இலையில் ஒரு கலசம் (பித்தளை அல்லது வெள்ளிச் சொம்பு) வைத்து அதில் பச்சரிசி அல்லது சுத்தமான தண்ணீரால் நிரப்ப வேண்டும். தண்ணீர் நிரப்பினால், அதனுடன் சிறிது மஞ்சள் பொடி, ஒரு எலுமிச்சைப் பழம் மற்றும் கருகமணிகள் சிறிது சேர்க்க வேண்டும். கலசத்தை நிரப்பிய பிறகு கலசத்தின் மேல் மஞ்சள் பூசி, குங்குமப் பொட்டு வைத்து அலங்கரிக்க வேண்டும். மஞ்சள் தடவிய  கயிறுகளை கலசத்துக்கு முன்பாக பழம், தேங்காய், தாம்பூலம் வைக்கப்பட்டிருக்கும் தாம்பாளத்தில் வைக்கவேண்டும்.

பிறகு கலசத்தில் மாவிலை செருகி, அதன் நடுவில் மஞ்சள் பூசிய தேங்காயை வைக்க வேண்டும். அதன் மேல் அம்மன் முகத்தை வைத்து (தற்போது பூஜைப் பொருள்கள் விற்கும் கடைகளில் கிடைக்கிறது) அலங்காரம் செய்ய வேண்டும். பிறகு பாவாடை போன்ற வஸ்திரத்தைச் சாத்தி, நம் விருப்பப்படி மலர்களாலும், நகைகளாலும் அலங்கரிக்க வேண்டும்.  கலசத்துக்கு முன்பாக மஞ்சளினால் பிள்ளையார் பிடித்து வைக்க வேண்டும்.

விரதம்

நல்ல நேரமாகப் பார்த்து தூய பக்தியுடன், ‘சுக்லாம் பரதரம்’ என்ற ஸ்லோகம் சொல்லி விநாயகரை பூஜிக்க வேண்டும். விநாயகர் பூஜை முடிந்ததும் கலசத்தில் வரலட்சுமியை ஆவாஹணம் செய்து, விஷ்ணு சகஸ்ரநாமம், லக்ஷ்மி சகஸ்ரநாமம் போன்ற பக்தி ஸ்லோகங்களைப் பாராயணம் செய்ய வேண்டும். நிறைவாகப் பழங்கள் மற்றும் இனிப்புகளைக் கொண்டு நைவேத்தியம் செய்து மங்கல ஆரத்தி எடுக்க வேண்டும். பூஜை முடிந்ததும் மஞ்சள் கயிற்றை எடுத்துக் கையில் கட்டிக்கொள்ள வேண்டும். அன்றைக்கு மாலை சில சுமங்கலிப் பெண்களை வீட்டுக்கு அழைத்துத் தாம்பூலம் தர வேண்டும். 

'ததாதி பிரதி க்ருஹ்ணாதி’ என்பார்கள். அதாவது, நாம் எதைக் கொடுக்கிறோமோ, அதுவே நமக்குக் கிடைக்கும். கனிவும் கருணையும் கொண்டவள் ஸ்ரீமகாலட்சுமி. அவளை மகிழ்வித்தால், அவள் நம்மையும் நம் குடும்பத்தையும் மகிழச் செய்வாள்.

கன்னிப்பெண்கள் விரதமிருந்தால் விரைவில் திருமண பாக்கியம் கிடைக்கும். வரலட்சுமி விரதத்தைக் கடைப்பிடிக்கும் குடும்பத்தில் உள்ள குழந்தைகளுக்கு உயர்ந்த ஞானமும், ஆரோக்கியமும் கிடைக்கும். மாமியார் - மருமகள் உறவு மேம்படும். விரும்பிய நலன்கள் எல்லாம் கிடைக்கும். வீட்டில் செல்வம் நிறையும் என்பது  ஐதீகம்.

சக்தியின் வடிவமாகப் போற்றப்படும் பெண்கள் வரலட்சுமி விரதம் மேற்கொண்டு மகாலட்சுமியைப் பூஜித்து வழிபட்டால் இல்லத்தில் மகாலட்சுமியின் கடாட்சம் பெருகும். வரங்கள் அனைத்தையும் அருளும் ஸ்ரீ மகாலட்சுமியை நம் இல்லத்துக்கு வரவேற்றுப் போற்றி வழிபடுவோம்... அனைத்து ஐஸ்வர்யங்களும் கிடைக்கப்பெற்று இன்பமாகவும், வளமாகவும் வாழ்வோம்...

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்