'மாயோன் மேய ஓண நன் நாள்...' -மதுரைக்காஞ்சி காட்டும் ஓணப்பெருவிழா!

ஒரு காலத்தில், தமிழகத்திலும் பரவலாக சீரும் சிறப்புமாகக் கொண்டாடப்பட்ட ஓணம் பண்டிகை இப்போது சில இடங்களில் மட்டும்  ஆவணி மாத திருவோண நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது...

'மாயோன் மேய ஓண நன் நாள்...' -மதுரைக்காஞ்சி காட்டும் ஓணப்பெருவிழா!

ஜோதிட சாஸ்திரத்தில் 27 நட்சத்திரங்கள் இருந்தாலும் சிவபெருமானுக்குரிய திருவாதிரை, பெருமாளுக்குரிய திருவோணம் ஆகிய இரண்டு நட்சத்திரங்கள் மட்டுமே 'திரு' எனும் அடைமொழியிட்டு மரியாதையுடன் அழைக்கப்படுகின்றன. கேரளாவில் 'கொல்லவர்ஷம்' என அழைக்கப்படும் மலையாள வருடத்தின் முதல் மாதம் சிங்கம்.  இந்த மாதத்தில் வரும் திருவோணம் நட்சத்திர நாளில்  ஜாதி, மதங்களைக் கடந்து வெகு விமர்சையாகக் கொண்டாடப்படும் திருநாளே ஓணம் பண்டிகை. 

ஓணம்

ஒரு காலத்தில், தமிழகத்திலும் பரவலாக சீரும் சிறப்புமாகக் கொண்டாடப்பட்ட ஓணம் பண்டிகை இப்போது சில இடங்களில் மட்டும்  ஆவணி மாத திருவோண நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது. மதுரைக் காஞ்சியில் பத்துநாள் ஓணம் கொண்டாட்டத்தை, 'மாயோன் மேய ஓண நன் நாள் கோணம் தின்ற' என்று மாங்குடி மருதனார் பதிவு செய்திருக்கிறார். பருவமழை நிறைவடைந்து எங்கு பார்த்தாலும் பச்சைப் பசேலென்று காணப்படும் நாளில் மகாபலி சக்கரவர்த்தியை வரவேற்பதற்காக ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது. 

முன்னொரு காலத்தில் மகாபலி சக்கரவர்த்தி சீரும் சிறப்புமாக ஆட்சி செய்து வந்தார். அவரது புகழ் பூலோகம் மட்டுமல்லாமல் பாதாளலோகம், இந்திரலோகம் என்று அனைத்து இடங்களிலும் பரவியிருந்தது. மக்களுக்கு வேண்டியதைச் செய்து, அனைவருக்கும் வாரி வழங்கி கொடைத் தன்மையுடன் ஆட்சி செய்துகொண்டிருந்தார். ஒருமுறை யாகம் ஒன்றை நடத்தினார் மகாபலி சக்கரவர்த்தி. அந்த யாகத்தினால் பாதிக்கப்பட்ட இந்திரன் திருமாலிடம் முறையிட்டார். அந்த யாகத்துக்குத் திருமால் வாமன (குள்ள உருவம்) உருவமெடுத்துச் சென்று மூன்றடி நிலம் கேட்டார். மகாபலி சக்கரவர்த்தியும் `தந்தோம்' என்று வாக்குறுதி அளித்தார். 

உடனே பிரமாண்ட உருவமெடுத்த வாமனர் ஒரு அடியால் பூமியையும், மற்றொரு அடியால் வானத்தையும் அளந்து, `மூன்றாவது அடி எங்கே?' என்று கேட்க, தலை குனிந்து திருமாலை வணங்கிய மகாபலி சக்கரவர்த்தி தனது தலையைச் சுட்டிக்காட்டுவார். மூன்றாவது அடியை மகாபலியின் தலைமீது வைத்த வாமனர் அவரைப் பாதாள உலகத்துக்குத் தள்ளிவிடுவார். 

ஓணப்பெருவிழா

வாமனரின்  பாதத்தைத் தனது தலைமீது தாங்குகையில் மகாபலிச் சக்கரவர்த்தி 'ஒவ்வொரு ஆண்டும் நான் எனது மக்களை வந்து சந்திக்க வேண்டும்' என்று வரம் வாங்கினார். வாமனரிடம் பெற்ற வரத்தின் மூலம் மகாபலிச் சக்கரவர்த்தி ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதத்தில் தனது மக்களைக் காண வருவதாக ஐதீகம். அப்படி, தமது மக்களைக் காண வரும் திருநாளே ஓணம் பண்டிகை.

ஓணம் திருநாள் கொண்டாடப்படும் பத்து நாட்களும் அதிகாலையில் எழுந்து நீராடி 'கசவு' எனும் வெண்ணிற ஆடையணிந்து வழிபாட்டில் ஈடுபடுவர். அஸ்தம், சித்திரை, சுவாதி, விசாகம், அனுஷம், கேட்டை, மூலம், பூராடம், உத்திராடம், திருவோணம்  என்று பத்து நட்சத்திர நாட்களிலும் ஓணம் கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு நாளுக்கும் ஒவ்வொரு சிறப்பு உண்டு. சுவாதி நட்சத்திரமன்று பரிசுகளைக் கொடுத்து மகிழ்வார்கள், விசாக நட்சத்திரத்தன்று அறுசுவை உணவுகளைத் தயார் செய்து கொண்டாடுவார்கள்.  அனுஷ நட்சத்திரத்தன்று, `படகுப் போட்டி' கோலாகலமாக நடக்கும். பத்தாவது நாள் ஓணம் கொண்டாட்டத்துடன் விழா நிறைவடைகிறது. கேரளாவில் ஆவணி மாதத்தில் மலர்கள் பூத்துக் குலுங்கும். அதனால், பூக்கோலமிட்டு தம்மைக் காண வரும் மகாபலி சக்கரவர்த்தியை வரவேற்பார்கள் மக்கள். இந்த பூக்கோலத்தில் முதன்மை பெறுவது அத்தப்பூ கோலம் தான். முதல் நாள் ஒரு பூ, இரண்டாம் நாள் இரண்டு பூ என்று கோலமிட்டு பத்தாவது நாள் பத்துவகை பூக்களால் பூக்கோலமிட்டு அமர்க்களப்படுத்துவார்கள். இதில் தும்பை, சங்குப்பூ, அரிப்பூ, அத்தப்பூ ஆகியவை  முதன்மையாக இடம்பெறும். 

திருவோணம்

மக்களைப் பார்ப்பதற்காக ஊர் ஊராக, தெருத் தெருவாக மகாபலி சக்கரவர்த்தி வருவார் எனும் நம்பிக்கையை மெய்ப்பிப்பதைப் போன்று மகாபலி சக்கரவர்த்தியைப் போன்று பலர் மாறுவேடமிட்டு மக்களுக்கு ஆசி வழங்குவது கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். 

திருமாலின் நட்சத்திரம் திருவோணம். இந்த நாளில் திருமால் கோயிலுக்குச் சென்று வழிபட்டால் இடையூறுகள் அனைத்தும் விலகி சுபிட்சமான நல்வாழ்வு கிடைக்கும் என்பது நம்பிக்கை. 

இந்த வருடம் அடித்துக்கொட்டிய தென்மேற்குப் பருவ மழையால் கேரளாவே சின்னாபின்னமாகியிருக்கிறது. கேரள அரசு இந்த ஓணம் கொண்டாட்டத்தைக் கைவிட்டு மீட்புப் பணியில் கவனம் செலுத்தியிருக்கிறது. திருமாலின் அருளாலும், மகாபலி சக்கரவர்த்தியின் துணையாலும் இழந்த பொலிவை கேரளா மீண்டும் பெற வேண்டிக்கொள்வோம்..!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!