வெளியிடப்பட்ட நேரம்: 19:30 (26/08/2018)

கடைசி தொடர்பு:19:30 (26/08/2018)

வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத் திருவிழா - கொடியேற்றத்துடன் வரும் 29ம் தேதி தொடங்குகிறது!

நாகை மாவட்டம், வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் வருடந்தோறும் திருவிழா நடைபெறுவது வழக்கம். இவ்வருடத்திற்கான திருவிழா வரும் 29-ஆம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கப்பட  உள்ளது. 

வேளாங்கண்ணி

வேளாங்கண்ணியில் புகழ்பெற்ற புனித ஆரோக்கிய மாதா திருத்தலம் அமைந்திருக்கிறது. இப்பேராலயம்  கத்தோலிக்க கிருத்துவர்கள் மட்டுமின்றி அனைத்து மதங்களைச் சார்ந்த பக்தர்களும் வந்து வழிபாடு செய்யும் பிரசித்தி பெற்ற தலம்.  மொழி, மதம், பண்பாடு போன்றவற்றால் வேறுபட்டிருக்கும் மக்களை எல்லாம் ஒன்றிணைத்து மத நல்லிணக்கத்தை வெளிப்படுத்தும் சான்றாக இந்த ஆலயம் திகழ்கிறது. இவ்வாலயம் "கீழை நாடுகளின் லூர்து நகர்" என்ற சிறப்பினையும் பெற்றுள்ளது.

இத்தகைய சிறப்புகளை உடைய இவ்வாலயத்தில் ஒவ்வொரு ஆண்டும் அன்னை மரியாவின் பிறந்த தினமான செப்டம்பர்-8 ஐ முன்னிட்டு பேராலய திருவிழா நடைபெறுவது வழக்கம். மொத்தம் 11 நாள்கள் திருவிழா வெகுசிறப்பாக நடைபெறும். அதன்படி இவ்வருடத்திற்கான பெருவிழா வருகின்ற புதன்கிழமை(29.8.18) அன்று கொடியேற்றத்துடன் தொடங்க இருக்கிறது. இதற்கு முன்னதாக அன்னை மாதாவின் உருவம் பொறிக்கப்பட்ட கொடி பேராலயத்தின் முகப்பில் இருந்து கடற்கரை வழியாக ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டு பின்பு கொடிக்கம்பத்திற்கு கொண்டு வரப்படும். ஆலயத்தில் வடக்கு பகுதியில் அமைந்திருக்கும் 90 அடி உயரக் கொடிக்கம்பத்தில் தஞ்சை மறைமாவட்ட ஆயர்தேவதாஸ் அம்புரோஸ் 29 ஆம் தேதி மாலை 6.30 மணியளவில் கொடியேற்றுவார் எனப் பேராலய நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

புனித ஆரோக்கிய மாதா

இதன் பிறகு ஆலயத்தில் தமிழில் திருப்பலியும், நோயுற்றவர்களை மந்திரிக்கும் நிகழ்வும் நடைபெற உள்ளது. பின்பு, விண்மீன் பேராலய கீழ்க்கோயில், மேல் கோயிலில் தமிழ், ஆங்கிலம், மராத்தி, இந்தி, கன்னடம், தெலுங்கு, மலையாளம், கொங்கணி ஆகிய பல மொழிகளில் திருப்பலியும் நடைபெற உள்ளது. இதனைத் தொடர்ந்து 31 ஆம் தேதி சிலுவை பாதையும், செப்டம்பர் -1 ஆம் தேதி மாலையில் ஜெப மாலையும் நடைபெற உள்ளது.  செப்டம்பர் -7 ஆம் தேதி இவ்விழாவின் முக்கிய நிகழ்வாக அன்னை மாதாவின் தேர் பவனியும், செப்டம்பர்-8 ஆம் தேதி அன்னையின் பிறந்த நாள் பெரு விழாவும் கொண்டாடப்படுகிறது. தொடர்ந்து 11 தினங்கள் நடைபெறும் இந்த விழாவில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து பல லட்சக்கணக்கான மக்களும், வெளிநாட்டவர்களும் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் வெகு தொலைவில் இருந்து வரும்  பக்தர்களின் வசதிக்காகச் சிறப்பு பேருந்து வசதிகளும் செய்யப்பட உள்ளன.