வேளாங்கண்ணி மாதா பேராலய ஆண்டுப் பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தின் ஆண்டுப் பெருவிழா, கொடியேற்றத்துடன் தொடங்கியது.

வேளாங்கண்ணி

கீழ்த்திசை நாடுகளின் லூர்து நகர் என்றழைக்கப்படும் நாகப்பட்டினம் மாவட்டம், வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தின் ஆண்டுப் பெருவிழா, ஒவ்வோர் ஆண்டும் ஆகஸ்ட் மாதம் 29-ம் தேதி மாலை கொடியேற்றத்துடன் தொடங்கி, செப்டம்பர் 8-ம் தேதி முடிய 11 நாள்கள் வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுவது வழக்கம். இவ்விழாவில், தமிழகம் மட்டுமல்லாது இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் லட்சக்கணக்கானோர் கலந்துகொள்வர்.

வேளாங்கண்ணி

இந்த ஆண்டு, வேளாங்கண்ணி பேராலயத்தின் ஆண்டுப் பெருவிழா வழக்கமான உற்சாகத்துடன் இன்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் பங்கேற்பதற்காகப் பல்லாயிரக்கணக்கானோர் வேளாங்கண்ணியில் குவிந்துள்ளனர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஆயிரக்கணக்கானோர் மாதாவின் சப்பரங்களை இழுத்தபடி பாதயாத்திரையாக வந்த வண்ணம் உள்ளனர். மாலை 6 மணியளவில், பேராலய முகப்பிலிருந்து திருக்கொடி ஊர்வலம் புறப்பட்டு, முக்கிய வீதிகள் வழியாக வலம்வந்து கொடி மேடையை அடைந்தது. பின்பு, தஞ்சை ஆயர் மேதகு தேவதாஸ் அம்புரோஸால் திருக்கொடி புனிதம் செய்யப்பட்டு, பின்னர் கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. கொடி, மெள்ள மெள்ள காற்றில் அசைந்து கொடிமர உச்சியை அடைந்ததும், பக்தர்களின் சரண கோஷத்துடன், வண்ண வண்ண வாணவேடிக்கைகள் மற்றும் அதிர்வேட்டுகள் முழங்க, ஆலயத்தில் அமைக்கப்பட்டுள்ள மின் விளக்குகள் ஒன்றுசேர்ந்து எரிவது கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக அன்னையின் திருத்தேர் பவனி செப்டம்பர் மாதம் 7-ம் தேதி இரவு நடைபெறுகிறது. 8-ம் தேதி கொடி இறக்கப்பட்டு, திருவிழா நிறைவுபெறும்.

 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!