பெருமாள் ஆதி வராகனாகக் காட்சியருளும் அதிசயத் திருத்தலம்! | Glory of Sri Aadhi Varaha Perumal Temple

வெளியிடப்பட்ட நேரம்: 18:38 (30/08/2018)

கடைசி தொடர்பு:18:38 (30/08/2018)

பெருமாள் ஆதி வராகனாகக் காட்சியருளும் அதிசயத் திருத்தலம்!

இந்தத் தலத்துக்குத் தொடர்ந்து ஐந்து சனிக்கிழமைகள் வந்து நெய்தீபம் ஏற்றி ஆதிவராக பெருமாளை வழிபட்டால், திருமணத் தடை விலகும் என்றும், குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்றும் பக்தர்கள் நம்பிக்கையுடன் கூறுகிறார்கள்.

பெருமாள் ஆதி வராகனாகக் காட்சியருளும் அதிசயத் திருத்தலம்!

`தர்மம் ஒடுங்கி அதர்மம் தழைக்கும் காலங்களிலெல்லாம் நான் அவதாரம் எடுத்து, அதர்மத்தை அழித்து தர்மம் தழைக்கச் செய்வேன்' என்ற பகவான் கண்ணனின் வாக்கின்படி, திருமால் பல அவதாரங்களை எடுத்திருக்கிறார். அப்படி அவர் எடுத்த அவதாரங்கள் அதர்மத்தை அழித்து தர்மத்தை தழைக்கச் செய்வதாக மட்டுமின்றி, பரிணாம தத்துவத்தை உணர்த்தும் வகையிலும் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. 

ஶ்ரீஆதிவராக பெருமாள் கோயில்

மகாவிஷ்ணு எடுத்த அவதாரங்களில், இரண்டு அசுர சகோதரர்களை சம்ஹாரம் செய்வதற்காக எடுத்த இரண்டு அவதாரங்கள் வராக அவதாரமும் நரசிம்ம அவதாரமும் ஆகும். வராக அவதாரத்தின்போது இரண்யாட்சனை சம்ஹாரம் செய்து பூமியை மீட்டார். நரசிம்ம அவதாரத்தின்போது, பக்தன் பிரகலாதனுக்காக நரசிம்ம அவதாரம் எடுத்து இரண்யகசிபுவை சம்ஹாரம் செய்தார். வராக அவதாரம் மகாவிஷ்ணுவின் மூன்றாவது அவதாரமாகும்.

பகவான் வராகமாக அவதரிக்க வேண்டிய அவசியம் ஏன் ஏற்பட்டது?

முற்காலத்தில் இரண்யாட்சன் என்ற அசுரன் பிரம்மதேவரைக் குறித்துக் கடும் தவம் புரிந்தான். அசுரனுடைய தவத்துக்கு இரங்கிய பிரம்மதேவர் அவனுக்குக் காட்சி தந்ததுடன், அவன் கேட்ட வரங்கள் அனைத்தையும் தட்டாமல் வழங்கினார். இயல்பிலேயே அவன் அசுர குணம் கொண்டவன் என்பதால், தான் பெற்ற வரத்தைத் தவறான வழிகளில் பயன்படுத்தத் தொடங்கினான். இறைவனைப் பழித்ததுடன், தேவர்களையும் பல வகைகளில் துன்புறுத்தினான். முனிவர்களின் யாகங்களை அழித்தான். தானே உயர்ந்தவன் என்ற மமதையில் அவன் செய்த அடாத செயல்களைக் கண்டு பூமிதேவியால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. எனவே, பெருமழை பொழியச் செய்து பூமியை வெள்ளக்காடாக மாற்றினார். வெள்ளம் ஏற்படுத்திய சுமையின் காரணமாக அரக்கனின் பாதாள உலகம் அழுந்தியது. கோபம் கொண்ட இரண்யாட்சன் பூமியைப் பாய்போல் சுருட்டி எடுத்துச் சென்று கடலில் மறைத்து வைத்தான். தேவர்களும் முனிவர்களும் ரிஷிகளும் மனம் வருந்தி மகாவிஷ்ணுவிடம் முறையிட்டனர். அசுரனின் பிடியிலிருந்து பூமியை மீட்க நினைத்த திருமால், வராக அவதாரம் எடுத்து, இரண்யாட்சனை சம்ஹாரம் செய்து பூமியை மீட்டார். இரண்யாட்சனை சம்ஹாரம் செய்த உக்கிரம் தணியாமல் இருந்த வராக மூர்த்தியை சாந்தப்படுத்த எண்ணிய முனிவர்களும் ரிஷிகளும் தேவர்களும் அவருக்கு முன்பாக மண்டியிட்டு வழிபட்டார்கள். அவர்களின் வழிபாட்டில் மனம் குளிர்ந்த வராக மூர்த்தி, பூமி பிராட்டி சமேதராக அவர்களுக்குக் காட்சி அருளினார். 

ஶ்ரீஆதிவராக பெருமாள்

அப்படி வராக மூர்த்தி காட்சி அருளிய தலம்தான் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்திலிருந்து சுமார் 8 கி.மீ தொலைவிலுள்ள பெருமண்டியூர் திருத்தலம். முனிவர்களும் ரிஷிகளும் மண்டியிட்டு வராக மூர்த்தியை வழிபட்டதால் இந்தத் தலத்துக்கு, 'பெருமண்டியூர்' என்ற பெயர் ஏற்பட்டதாகச் சொல்லப்படுகிறது. நாளடைவில் அந்தப் பெயர் மருவி தற்போது, 'பெரமண்டூர்' என்று அழைக்கப்படுகிறது. 

புராணச் சிறப்பும் புராதனப் பெருமையும் கொண்ட ஸ்ரீஆதிவராக பெருமாள் திருக்கோயில், மகேந்திரவர்ம பல்லவ மன்னரின் காலத்தில் எழுப்பப்பட்டது. கலைநயம் மிக்க எண்ணற்ற பல சிற்பங்களுடன் எழுப்பப்பட்ட இந்தக் கோயில், காலப்போக்கில் சிதிலமடைந்துவிட்டது. பின்னர், ஆதிவராக பெருமாள் டிரஸ்ட் சார்பில் பழைமை மாறாமல் கோயில் புதுப்பிக்கப்பட்டதுடன், ஆஞ்சநேயர், ஆண்டாள், ஆழ்வார்களுக்கும் சந்நிதிகள் ஏற்படுத்தப்பட்டதுடன் நித்திய பூஜைகளும் நடைபெற்று வருகின்றன. 

சிற்பம்

இந்தத் தலத்தில் பெருமாள் ஆதிவராக பெருமாள் என்ற திருப்பெயரில் ஆதிசேஷன் மீது ஒரு திருவடியும் பூமியில் ஒரு திருவடியும் வைத்த கோலத்தில் பூமிதேவியை மடியில் இருத்திய திருக்கோலத்தில் காட்சி தருகிறார். தாயார் அம்புஜவல்லி தாயார் என்ற திருப்பெயரில் தனிச் சந்நிதிகொண்டிருக்கிறார்.

இந்தத் தலத்துக்குத் தொடர்ந்து ஐந்து சனிக்கிழமைகள் வந்து நெய்தீபம் ஏற்றி ஆதிவராக பெருமாளை வழிபட்டால், திருமணத் தடை விலகும் என்றும், குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்றும் பக்தர்கள் நம்பிக்கையுடன் கூறுகிறார்கள். பூமியை மீட்ட ஆதிவராக மூர்த்தியை அர்ச்சனை செய்து வழிபட்டால், நிலம் தொடர்பான பிரச்னைகள் நீங்கும் என்பது ஐதிகம். 

சிற்பம்

மகாவிஷ்ணுவின் மூன்றாவது அவதாரத் தலமான பெரமண்டூர் திண்டிவனத்திலிருந்து சுமார் 8 கி.மீ தொலைவில் அமைந்திருக்கிறது. திண்டிவனத்திலிருந்து பேருந்து வசதி உண்டு.


டிரெண்டிங் @ விகடன்