சென்னையில் 11-ம் தேதி தொடங்குகிறது திருப்பதி திருக்குடை ஊர்வலம்!

திருமலை திருப்பதி பிரம்மோற்சவத்தை முன்னிட்டு, ஹிந்து தர்மார்த்த ஸமிதி சார்பில் திருக்குடை ஊர்வலத் திருவிழா, சென்னையில் 11-ம் தேதி தொடங்குகிறது. ஊர்வலத்தை, அன்று காலை 10.31 மணிக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தொடங்கி வைக்கிறார்.

திருப்பதி  திருக்குடை

இதுகுறித்து, இந்து தர்மார்த்த சமிதி அறங்காவலர் ஆர்.ஆர்.கோபால்ஜி வெளியிட்ட அறிக்கையில்,  ``திருமலை திருப்பதியில் நடக்கும் பிரம்ம உற்சவத்தை முன்னிட்டு, ஏழுமலையான் சேவைக்காக ஆண்டுதோறும் தமிழக மக்கள் சார்பில் 11 அழகிய வெண்பட்டுக் குடைகள் ஊர்வலமாகச் சென்று, திருமலை திருப்பதி தேவஸ்தானத்திடம் சமர்ப்பிக்கப்படும். இதில், 2 திருக்குடைகள் திருச்சானூர் தாயாருக்கு சமர்ப்பிக்கப்படும். இந்து தர்மார்த்த சமிதி டிரஸ்ட் சமர்ப்பிக்கும் இந்தத் திருக்குடைகள், கருடசேவை மட்டுமின்றி ஆண்டு முழுவதும் திருமலை உற்சவங்களில் பயன்படுத்தப்படும்.

தமிழகத்தின் மிகப்பெரிய ஆன்மிகத் திருவிழாவாக நடத்தப்படும் ‘திருப்பதி திருக்குடை ஊர்வலம், வரும் செப்டம்பர் 11-ம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 10.31 மணிக்கு, சென்னை பூக்கடை தேவராஜ் முதலி தெருவில் உள்ள சென்ன கேசவப் பெருமாள் கோயிலில் இருந்து சிறப்பு பூஜைகளுடன் புறப்படுகிறது.

திருக்குடை ஊர்வலம்

ஆளுநர் பன்வாரிலால் புரோகித், சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று திருப்பதி திருக்குடை ஊர்வலத்தைத் தொடங்கிவைக்கிறார். கன்னியாகுமரி, வெள்ளிமலையில் உள்ள ஸ்ரீவிவேகானந்தா ஆசிரம தலைவர் சுவாமி சைதன்யானந்தா மகராஜ் ஆசியுரை வழங்குகிறார்.

திருப்பதி திருக்குடை ஊர்வலம், 16-ம் தேதி திருமலையை அடைகிறது. அங்கு, மாட வீதி வலம்வந்து வஸ்திரம் மற்றும் மங்களப் பொருள்களுடன் திருப்பதி ஜீயர்கள் முன்னிலையில் திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகளிடம் மதியம் 3 மணிக்கு முறையாக சமர்ப்பணம் செய்யப்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!