வெளியிடப்பட்ட நேரம்: 19:39 (04/09/2018)

கடைசி தொடர்பு:19:39 (04/09/2018)

சிதைவுகளின்றி, பள்ளத்திலிருந்து மேலே உயர்த்தப்பட்ட 200 ஆண்டு கற்கோயில்..! தேனி அதிசயம்

"முதல்முறையாக முழுவதும் கற்களைக் கொண்டு கட்டப்பட்ட கோயில் ஒன்றை நவீனத்  தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உயர்த்துவது என்பது இதுதான் முதல்முறை என்று சொல்லப்படுகிறது!"

சிதைவுகளின்றி, பள்ளத்திலிருந்து மேலே உயர்த்தப்பட்ட 200 ஆண்டு கற்கோயில்..! தேனி அதிசயம்

வீனத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கட்டடங்களை உயர்த்துவதைப் பற்றி நாம் கேள்விப்பட்டிருப்போம். ஆனால், முழுவதும் கற்களால் ஆன ஒரு கோயிலையே அதன் பழைமை மாறாமல் அப்படியே உயர்த்தும் பணி நடைபெறுவதாக ஒரு தகவலை நம்மிடம் நண்பர் ஒருவர் தெரிவித்தார். மேலும் தேனி மாவட்டத்தில் அமைந்திருக்கும் அந்தக் கோயிலைப் பற்றிய விவரத்தையும் நம்மிடம் கூறினார். நண்பர் தெரிவித்த கோயிலைப் பார்க்கச் சென்றோம்.

கற்கோயில்

தேனி அருகே உள்ள 200 வருடப் பழைமையான கோயில் அது. அந்தக் கோயிலைத்தான், அதன் பழைமை மாறாமல் உயரத்தை அதிகரிக்கும் பணியில் ஈடுபட்டிருக்கின்றனர். இதனை அந்தப் பகுதி மக்கள் ஆர்வத்தோடும் ஆச்சர்யத்தோடும் பார்த்து வருகின்றனர்.

தேனி நகரத்திற்கு அருகே உள்ளது வயல்பட்டி கிராமம். ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கும் இந்த அழகிய கிராமத்திற்கு பாத்தியப்பட்டது ஸ்ரீ அனுமந்த சேவிதராயர் பெருமாள் கோயில். கிராம எல்லை முடியும் இடத்தில் தோட்டப்பகுதிக்குள் அமைந்திருக்கும் இந்தக் கோயில் 200 வருடங்கள் பழைமையான கற்கோயிலாகும். மூலவராக பட்டாபிஷேகக் கோலத்தில் ராமர் காட்சியளிக்கிறார். சீதை, லட்சுமணன், ஆஞ்சநேயர் உடன் காட்சியளிக்கிறார்கள்.

கோயிலை இடித்துக் கட்ட மனம் இல்லை:

கோயிலை அப்படியே உயர்த்துவது பற்றி கிராமக் கமிட்டி நிர்வாகிகளிடம் பேசினோம்.

“எங்கள் கிராமத்தின் பூர்வீகமான கோயில் இது. முற்காலத்தில் இந்தக் கோயில் தரை மட்டத்திலிருந்து 36 அடி உயரமும், 26 அடி நீளமும், 12 அடி அகலமும் கொண்டதாக இருந்தது. சாலை விரிவாக்கப்பணி காரணமாக நாளுக்கு நாள் சாலைகள் உயர்ந்துவிடவே, கோயில் பள்ளத்தில் இருக்கும் நிலை ஏற்பட்டுவிட்டது. மழைக்காலங்களில் கோயிலுக்குள் தண்ணிர் வந்துவிடுமோ என்ற அச்சமும் இருந்தது. இந்நிலையில், கோயிலுக்குக் கும்பாபிஷேகம் நடத்துவது தொடர்பாக கிராமக் கமிட்டிக் கூட்டம் ஒன்றைப் போட்டு மக்களிடம் கருத்து கேட்டோம்.

கோயில்

பழைமையான கோயில் என்பதால் புனரமைப்பு செய்துவிட்டு பின்னர் கும்பாபிஷேகம் நடத்தலாம் என்று முடிவுசெய்யப்பட்டது. அப்போது, கோயில் பள்ளத்தில் இருப்பது தொடர்பாக கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. கோயிலை இடித்துவிட்டு புதிதாகக் கட்டலாம் என்று ஒரு சிலர் கருத்து தெரிவித்தனர். பழைமையான கோயிலை இடிக்க மனம் இல்லாமல், நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, கோயிலை உயர்த்தலாம் என்று முடிவு செய்தோம். ஊர் மக்களுக்கு அவ்வளவு மகிழ்ச்சி. ஆகம விதிப்படி கருவறையோடு சேர்த்து கோயிலை 3 ¾ அடி உயர்த்த வேண்டும் என்றார்கள். அதற்கான பணிகள் தற்போது வேகமாக நடந்து வருகின்றன.

தமிழகத்தில் இதுதான் முதல் முறை:

முழுவதுமாக கற்களால் ஆன இந்தக் கோயிலின் எடை 300 டன். கோயிலை உயர்த்தும் பணிக்காக இணையதளம் மூலமாக ஹரியானாவைச் சேர்ந்த ஒரு குழுவினரைத் தொடர்பு கொண்டோம். அவர்கள் இங்கு வந்து பார்த்து ஆய்வு செய்தார்கள். இறுதியாக, கோயிலின் பழைமை மாறாமல் உயர்த்தித் தர சம்மதம் தெரிவித்தனர். அதன்படி தற்போது கோயிலை உயர்த்தும் வேலை நடந்து வருகிறது. 200 ஜாக்கிகளைப் பயன்படுத்தி கோயில்  2 அடி உயரத்துக்கு உயர்த்தப்பட்டிருக்கிறது. மேலும் கோயிலின் அஸ்திவாரத்தையும் பலப்படுத்தி இருக்கிறோம்.

ஸ்ரீ அனுமந்த சேவிதராயர் பெருமாள் கோயில்

இந்தப் பணியில் மொத்தம் 10 பேர் ஈடுபட்டிருக்கிறார்கள்.

நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, இதுவரை தமிழகத்தில் பல கட்டடங்கள் உயர்த்தப்பட்டிருக்கின்றன. ஆனால், அவை அனைத்தும் செங்கல் மற்றும் சிமெண்ட் கொண்டு கட்டப்பட்ட கட்டடங்களாகவே இருக்கும். ஆனால், முதல்முறையாக முழுவதும் கற்களைக் கொண்டு கட்டப்பட்ட கோயில் ஒன்றை நவீனத்  தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உயர்த்துவது என்பது இதுதான் முதல்முறை என்று சொல்லப்படுகிறது'' என்றவர்களிடம்,

''இன்னும் எத்தனை நாள்களில்  இந்தப் பணி முடியும் என்று எதிர்பார்க்கிறீர்கள்?'' என்று கேட்டோம்.

''இன்னும் 15 நாள்களில், கோயில் 3 ¾ அடி உயர்த்தப்படும் என்று எதிர்பார்க்கிறோம். பணிகள் முடிந்ததும், கும்பாபிஷேக ஏற்பாடுகளைச் செய்துவிடுவோம்.” என்கின்றனர் வயல்பட்டி கிராம கமிட்டியின் நிர்வாகிகள்.

பட்டாபிஷேகக் கோலத்தில் காட்சியளிக்கும் ராமர் கோயில் சிறிய அளவு சேதம்கூட இல்லாமல் நேர்த்தியாக உயர்த்தப்படுகிறது. அங்கு வேலை செய்யும் வடமாநிலத் தொழிலாளர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்துகொடுப்பது மட்டுமல்லாமல், தினமும் காலை மாலை என இரண்டு வேளையும் கோயிலுக்கு வந்து பார்த்துவிட்டுச் செல்கிறார்கள் வயல்பட்டி கிராமத்தினர்.


டிரெண்டிங் @ விகடன்