திருமணங்களுக்குத் தனி மண்டபம்... இனி திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் சுப தரிசனம்! | New marriage hall built in Thirukadaiyur Amirthakadeswarar Abirami Temple

வெளியிடப்பட்ட நேரம்: 19:49 (05/09/2018)

கடைசி தொடர்பு:19:49 (05/09/2018)

திருமணங்களுக்குத் தனி மண்டபம்... இனி திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் சுப தரிசனம்!

தனி மண்டபம் திறந்த பிறகு, சுவாமி தரிசனத்துக்கு வரும் பக்தர்கள் சிரமமில்லாமல் சுவாமியைத் தரிசிக்க முடிகிறது. பக்தர்களும் மகிழ்ச்சியுடன் சுவாமி தரிசனம் செய்கின்றனர்.

திருமணங்களுக்குத் தனி மண்டபம்... இனி திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் சுப தரிசனம்!

திருக்கடையூர் மார்க்கண்டேயர், 'என்றும் பதினாறு' என்று  சிரஞ்சீவித்துவம் பெற்ற திருத்தலம். ஆயுஷ்ஹோமம், சஷ்டியப்தபூர்த்தி, பீமரதசாந்தி, சதாபிஷேகம் என்று நாள்தோறும் கல்யாணக் களைகட்டும். திருக்கடையூர் கோயிலின் சுற்றுப் பிராகாரத்தில் தினமும் நூற்றுக்கணக்கில் ஆயுஷ் ஹோமத் திருமணங்கள் நடைபெற்றுவருகின்றன. இதன் காரணமாக, கோயிலுக்கு வரும் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதில் பல சிரமங்கள் ஏற்பட்டன. தற்போது, இத்தகைய திருமணங்கள் கோயில் வெளிப் பிராகாரத்தில் தனியாகக் கட்டப்பட்ட புதிய மண்டபத்தில் நடைபெற்றுவருகின்றன. இதனால், சுவாமி தரிசனத்துக்கு வரும் பக்தர்கள், சிரமமில்லாமல் சுவாமியைத் தரிசிக்கமுடிகிறது. பக்தர்களும் மகிழ்ச்சியுடன் சுவாமி தரிசனம் செய்கின்றனர்.

அபிராமி

நாகை மாவட்டம், திருக்கடையூரில் ஸ்ரீ அபிராமி உடனுறையும் ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர் திருக்கோயில் உள்ளது.  ஆயிரம் ஆண்டுகள் பழைமைவாய்ந்த இந்தக் கோயில் அப்பர், சுந்தரர், திருஞானசம்பந்தர் ஆகிய மூவரால் பாடல்பெற்ற தலமாகும்.  தருமபுரம் ஆதீனத்துக்குச் சொந்தமான ஆயுள் விருத்தி தலம் இது என்பதால், தினமும் நூற்றுக்கணக்கான ஆயுஷ் ஹோமத் திருமணங்கள் நடைபெற்று வருகின்றன.  60, 70, 80, 90 வயது நிரம்பியவர்கள், தமிழ்நாட்டிலிருந்து மட்டுமல்லாமல் வெளிமாநிலங்களில் இருந்தும் இந்தக் கோயிலுக்கு வந்து ஆயுஷ் ஹோமம், ஆயுஷ் ஹோம பூஜைகள், திருமணங்கள் செய்துவருகின்றனர். அமிர்தகடேஸ்வரர் சந்நிதிக்கு எதிர்ப்புறமுள்ள சங்கு மண்டபத்தில் திருமணம் செய்துகொள்ள முக்கியப் பிரமுகர்கள் போட்டிபோடுவார்கள்.  பிறந்த நட்சத்திர நாளே இத்தகைய திருமணங்கள் நடத்துவதற்கு கணக்கில் கொள்ளப்படுவதால் அஷ்டமி, நவமி, கரிநாள் என்று பார்க்காமல்  எல்லா நாள்களிலும் திருமணங்கள் நடைபெறும்.  சுவாமி மற்றும் அம்பாள் சந்நிதி பிராகாரங்களில், நூற்றுக்கணக்கான திருமணங்கள் நடப்பதாலும், அவர்களது உறவினர்கள் கூடி நிற்பதாலும் சாதாரண பக்தர்கள் எளிதில் உள்ளே போய் சுவாமியைத் தரிசித்து வழிபட முடியாது.  மேலும், யாக குண்டங்களிலிருந்து கிளம்பும் புகை மூட்டங்கள் மூச்சுத்திணறவைக்கும்.  இதில் சிக்கி பல பக்தர்கள் மயக்கமடைந்ததும் உண்டு.

ஆயுஷ் ஹோமத் திருமணம்

ஆனால், இத்தகைய திருமணங்கள்மூலம் கோயில் நிர்வாகத்துக்கும் சிவாச்சார்யார்களுக்கும் வருமானம் கிடைப்பதால், கோயில் திருப்பணிகளைத் தொடங்கினால் வருமானம் தடைப்படும் என்பதற்காக, கோயில் வேலைகள் தொடங்கப்படாமலும் கும்பாபிஷேகம் நடத்தப்படாமலும் இருந்தது. கோயில் சுவர் முழுவதும் கரி படிந்து காணப்படுகிறது.

இந்நிலையில்தான் பக்தர்களும், பொது மக்களும் கோயிலுக்குள் திருமணங்கள் நடத்துவதற்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.  எனவே, கோயில் வெளிப் பிராகாரத்தில் தனி மண்டபம் கட்டப்பட்டு, அதன் திறப்பு விழா கடந்த ஆகஸ்ட் 23-ம் தேதி தருமை ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ சண்முக தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகளால் திறந்துவைக்கப்பட்டது. தற்போது, அந்த மண்டபத்தில்தான் இத்தகைய திருமணங்கள் நடைபெற்றுவருகின்றன.

திருக்கடையூர் கோயில்

இதுபற்றி கோயில் சிவாச்சாரியார் ஒருவரிடம் பேசியபோது, “புதிய திருமண மண்டபத்தில் 36 திருமணங்கள் நடத்தவே இடமிருக்கிறது. அதில் 25 திருமணங்கள் மட்டுமே நடத்துவதற்கு வசதியாக இருக்கும்.  இதுநாள் வரை கோயிலுக்குள் சுவாமி, அம்பாள், சந்நிதி பிராகாரங்களில் ஆயுஷ் திருமணங்கள் செய்துகொண்டதில் பக்தர்கள் பெரும் மகிழ்ச்சியும் திருப்தியும் கொண்டனர்.  ஆனால், தற்போது வெளியே மண்டபத்தில் திருமணம் செய்துகொள்வதில் அவர்களுக்கு திருப்தியில்லை.  என்றாலும், நாளடைவில் இது சரியாகிவிடும்.

மண்டபத்தில் போதிய இடவசதி இல்லாத காரணத்தால், ஷிப்ட் முறையில் காலை 6 மணி முதல் 8 மணி வரை; 8 மணி முதல் 10 மணி வரை, 10 மணி முதல் 12 வரை மூன்று ஷிப்ட்டுகளாக திருமணங்களை நடத்துகிறோம். நீண்ட காலத்துக்குப் பிறகு கோயில் திருப்பணிகள் தொடங்கப்பட இருப்பதும், கும்பாபிஷேகம் நடைபெற இருப்பதும் எங்களுக்கெல்லாம் மிகுந்த சந்தோஷம் தருகிறது. சுவாமியைத் தரிசிக்க வரும் பக்தர்களும் இதை மகிழ்ச்சியுடன் வரவேற்றுள்ளனர்'' என்றார்.


டிரெண்டிங் @ விகடன்