திருமணத் தடை நீக்கி அருள்புரியும் திருத்தங்கல் நின்ற நாராயணப் பெருமாள்!

இது 108 திவ்யதேசங்களில், 91 வது திவ்ய தேசம். பழம்பெருமை மிக்க பாரம்பர்ய வரலாறு இந்தத் தலத்துக்கு உண்டு. இந்தக் கோயில், திருமலை நாயக்கர் மன்னரால் கட்டப்பட்டது.

திருமணத் தடை நீக்கி அருள்புரியும் திருத்தங்கல் நின்ற நாராயணப் பெருமாள்!

திருப்பாற்கடலில் பகவான் நாராயணன் சயனித்திருந்தார். அப்போது, அவர் அருகில் இருந்த ஸ்ரீதேவி, பூமாதேவி, நீளாதேவி ஆகிய மூவரிடையே தங்களில் `யார் சிறந்தவர்?’ என்ற போட்டி ஏற்பட்டது. மூவரின் தோழிகளுக்கிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒவ்வொருவரும் தங்களுடைய தேவிகளின் பெருமைகளைச் சொல்லி இவரே சிறந்தவர் என வாதிட்டனர். விவாதம் முடியாமல் நீண்டுகொண்டே சென்றது. இந்தச் சூழலில் தானே சிறந்தவள் என்பதை நிரூபிக்கும்பொருட்டு ஶ்ரீதேவி தங்காமலை வந்தார். இங்கு, செங்கமலை நாச்சியார் என்ற பெயரில் இறைவனை நோக்கிக் கடும் தவம் செய்தார். தவத்தை மெச்சி, அவர் முன் தோன்றிய பெருமாள், 'நீயே சிறந்தவள்' எனக் கூறி, ஸ்ரீதேவியை ஏற்றுக்கொண்டார். இந்தத் தலத்தில் திருமகள் தங்கியதால் திருத்தங்கல் எனப் பெயர் பெற்றது.

அம்மன்

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள தங்காமலை மீது திருத்தங்கல் நின்ற நாராயண பெருமாள் கோயில் அமைந்திருக்கிறது. இது 108 திவ்யதேசங்களில், 91 வது திவ்ய தேசம். பழம்பெருமை மிக்க பாரம்பர்ய வரலாறு இந்தத் தலத்துக்கு உண்டு. இந்தக் கோயில், திருமலை நாயக்கர் மன்னரால் கட்டப்பட்டது. இங்கு, மூலவர் நின்ற நாராயணப்பெருமாள் மேல் நிலையில் நிற்கும் கோலத்தில் பக்தர்களுக்கு அருள்புரிகிறார். இவருடன் ஸ்ரீதேவி, பூமாதேவி, நீளாவேதி ஆகிய மூவரும் உடன் இருக்கின்றனர். தாயார் செங்கமலத்தாயார் தகச் சந்நிதியில் வீற்றிருக்கிறார். மூலவர் நின்ற நாராயணப் பெருமாள் எனும் பெயரிலும், உற்சவர் `திருத்தங்கலாப்பன்’ என்ற திருப்பெயரிலும் வழிபடப்பெறுகிறார்.

இந்தத் திருக்கோயிலின் பிரதான வாயில் தெற்குப் பக்கமாகவும் மற்றொரு வாயில் கிழக்குப் பக்கமாகவும் அமைந்திருக்கிறது. பாதுகாப்பு காரணங்களுக்காக நுழைவு வாயில் புழக்கத்தில் இல்லை. தெற்கு வாயிலில் அமைந்திருக்கும் பதினெட்டு படிகளின் வழியாகத்தான் ஏறிச் செல்லவேண்டும். முதலில் சிற்ப வேலைப்பாடுகளுடன் கூடிய கருங்கல் மண்டபம், மேற்கூரையுடன் நம்மை வரவேற்கிறது.

நின்ற நாராயணப் பெருமாள்

மேற்கே சற்றுத் தாழ்வான பகுதிக்குச் சென்றால் `பாபநாச புஷ்கரனி’ எனும் அழகான திருக்குளத்தை காணலாம். இது ஒரு காலத்தில் பராமரிப்பின்றி இருந்திருக்கிறது. இப்போது, குளத்தில் தூர்வாரி பராமரிக்கின்றனர். குளத்தைப் பாதுகாக்கும் பொருட்டு பாதுகாப்பு வேலி அமைக்கப்பட்டிருக்கிறது. இந்தக் குளத்தில் கங்கை, யமுனை போன்ற புண்ணிய நதிகளின் சேர்க்கை இருப்பதால், இரவு நேரங்களில் தேவர்கள் குளிப்பதற்காக இங்கு வருகின்றனர் என்ற நம்பிக்கை இருக்கிறது. அதனால், பக்தர்கள் இங்கு குளிப்பதற்கு மட்டும் அனுமதியில்லை. இங்குள்ள குடைவரைக்கோயில் காண்போரைப் பரவசத்தில் ஆழ்த்துகிறது. 

கோயில்

இங்குள்ள தாயாருக்கு தினமும் திருமஞ்சனமும் பெருமாளுக்குத் தைலக்காப்பும் சாத்தப்படுகிறது. நீண்ட நாள்களாகத் திருமணமாகாதவர்கள் இங்கு வந்து பெருமாளை வணங்கினால், திருமணத் தடை நீங்கும் என்பது நம்பிக்கை. செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் அம்மனுக்குப் பட்டு சாத்தி, வழிபட்டால் வாழ்க்கையில் ஏற்படும் அனைத்து பிரச்னைகளும் முடிவுக்கு வரும். இந்தக் கோயிலில் வைகாநஸ ஆகமப்படியே பூஜைகள் நடக்கின்றன. இங்கு வைகுண்ட ஏகாதசி சிறப்பாக கொண்டாடப்படுகிறது. மார்கழி  மாதம் முழுவதும், பெண்கள் இந்தத் திருத்தலத்துக்கு வந்து, வழிபாடு செய்கின்றனர். சொர்க்க வாசல் திறப்புக்கு இரவிலிருந்தே பக்தர்கள் காத்திருந்து, தரிசனம் செய்துவிட்டுச் செல்கின்றனர். உள்ளூர் மட்டுமல்லாமல், வெளியூர்களிலிருந்தும் வெளி மாநிலங்களிலிருந்தும் பக்தர்கள் வந்து வழிபட்டுச் செல்கின்றனர். 

தீர்த்தக் குளம்

ஆனி மாத பிரம்மோற்சவமும் வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. 9-ம் நாள் தேரோட்டத்தின்போது, அனைத்து மக்களும் சமமாகத் தேரை இழுத்துச் செல்கின்றனர். 5-ம் நாள் மங்களாசாசனம், கருடசேவை கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. உற்சவர் `திருத்தங்கலாப்பன்’ ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலுக்குச் சென்று திருமாலையைப் பெறுகிறார். இந்தத் திருக்கோயிலில் அனைத்து திவ்யதேசங்களின் திருமால் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. மூலவரின் பிராகாரத்தைச் சுற்றி அற்புத கல்வெட்டுகள் பொறிக்கப்பட்டுள்ளன. இங்கு ரங்கநாதர், செங்கமலத்தாயார், கருடாழ்வார், ஆஞ்சநேயர், ராமாநுஜர், சக்கரத்தாழ்வார், ஆண்டாள், நாகமுனிவர் ஆகியோருக்கு தனித் தனி சந்நிதி அமைந்துள்ளது.

ஆகாய விமானம்

காலை 6 மணிக்கு நடை திறக்கப்பட்டு, ஐந்து கால பூஜை நடக்கிறது. இரவு 9 மணிக்கு நடை மூடப்பட்டு விடும். இந்தத் திருத்தலம், கல்லிநாத சுவாமி எனும் சிவன் கோயிலுடன் இணைக்கப்பட்டுள்ளது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!