நம்பிக்கை வழிகாட்டி... தும்பிக்கையானைக் கொண்டாடுவோம்! #Vikatan360

தூய்மையான பக்தியுடன் தம்மை வழிபடுபவர்களின் மனங்களில் தம்மை எளிதாக்கிக்கொண்டு எழுந்தருள்கிறார் என்னும் பேருண்மையையும் மூஞ்சூறு வாகனம் நமக்கு உணர்த்துகிறது...

நம்பிக்கை வழிகாட்டி... தும்பிக்கையானைக் கொண்டாடுவோம்! #Vikatan360

விநாயகர் சதுர்த்தி இன்று கொண்டாடப்படுகிறது. பிள்ளையார் என்றதும் குழந்தைகளுக்குக் கொண்டாட்டம்தான். அதனால்தான் அவருக்கு, 'குழந்தை சாமி' என்ற செல்லப்பெயரும் உண்டு. விநாயகர் நம் வாழ்க்கையுடன் பல வகைகளில் ஒன்றிவிட்டவர். விநாயகரை வழிபட்ட பிறகே பூஜை, ஹோமங்கள் மற்றும் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளைத் தொடங்குவோம். விநாயகர் பூஜைதான் பிரதானபூஜை. அவ்வளவு ஏன்? நாம் எப்போதும் எழுதத் தொடங்குவதற்கு முன்பு, 'உ' என்று பிள்ளையார்சுழி போட்ட பிறகே மற்றவற்றை எழுதுவோம். 

உங்கள் ராசிக்கு நீங்கள் எந்த விநாயகரை வணங்க வேண்டும்...?  கீழே இருக்கும் வீடியோவைப் பாருங்கள்!

'உ' என்பது `ஓம்' என்னும் பிரணவத்தின் நடுவில் இருக்கும் எழுத்து. `அ-உ-ம' என்ற மூன்று எழுத்துகளும் சேர்ந்ததே `ஓம்காரபிரணவம்'. விவரம் அறிந்தவர்கள் `ஓம்' என்பதை ஆங்கிலத்தில் எழுதும்போது `Om' என்று எழுதாமல், `Aum' என்றுதான் எழுதுவார்கள். 'அ' என்பது சிருஷ்டி; 'உ' என்பது காத்தல்; 'ம' என்பது சம்ஹாரம். ஓம்கார வடிவினரான விநாயகரே மூன்று தொழில்களுக்கும் காரணகர்த்தாவாக விளங்குகிறார். ஆனால், நாம் 'உ' என்ற எழுத்தையே பிள்ளையார் சுழியாகப் போட்டு எழுதத் தொடங்குகிறோம். 'உ' என்பது பிள்ளையாரின் காக்கும் தொழிலைக் குறிப்பிடும் எழுத்தாகும். பிறவித் துன்பத்தில் நம்மை ஆழ்த்தும் 'அ' மற்றும் அழித்தல் தொழிலுக்குரிய 'ம' ஆகிய எழுத்துகளைத் தவிர்த்துவிட்டு, காக்கும் எழுத்தான 'உ' என்பதையே பிள்ளையார் சுழியாகப் போட்டு, நாம் தொடங்கும் செயல்கள் எந்தப் பிரச்னையும் இல்லாமல் வெற்றி பெற வேண்டிக்கொள்கிறோம்.

விநாயகரை வழிபட வேண்டிய முறை, படைக்க வேண்டிய பட்சணங்கள், அவற்றின் செய்முறைகள், வழிபட வேண்டிய நேரம் போன்ற தகவல்களைத் தெரிந்து கொள்ள கீழே இருக்கும் ஸ்லைடு ஷோவைப் பாருங்கள்!

`சுழி' என்பது வளைந்திருப்பது. இதை `வக்ரம்' என்பார்கள். பிள்ளையாரின் தும்பிக்கை நுனி வளைந்து சுருட்டியபடி இருக்கும். `பிள்ளையார் சுழி' என்பது ஒரு வளைவில் தொடங்கி, நேர்கோடாக முடிவது. நாம் பிள்ளையார்சுழி போட்டு எழுத, செய்யத் தொடங்கும் விஷயம் நல்லபடியாக முடியும். 

விநாயகரின் உருவம் மனித உடலும், யானை முகமும் கொண்டதாக அமைந்திருக்கிறது. யானை முகத்தில் ஒரு தந்தம் உடைந்த நிலையில் காணப்படும். பொதுவாக யானைக்கு அழகும் கம்பீரமும் சேர்ப்பதே அதன் தந்தங்கள்தான். தன் அழகு குறைந்தாலும் பரவாயில்லை என்று நினைத்து, தன் தந்தத்தை உடைத்து, நாம் படித்து பயன்பெறும் வகையில் மகாபாரதம் என்னும் ஒப்பற்ற இதிகாசத்தை நமக்கு வழங்கியவர் விநாயகர். அவரது தியாகத்தை உணர்த்தும் நிகழ்ச்சியே இது. நாமும் மற்றவர்களின் பொருட்டு தியாகம் செய்யவேண்டும் என்பதையே விநாயகரின் இந்த உடைந்த தந்தம் நமக்கு உணர்த்துகிறது. 

விநாயகர் மெகா கொழுக்கட்டை

பருமனான உடல்வாகு கொண்டவர் விநாயகர். ஆனால், அவரது வாகனமான மூஞ்சூறு உருவத்தில் மிகச்சிறியது. இதிலும் ஒரு தத்துவம் அடங்கியிருக்கிறது. மூஞ்சூறு என்பது அறியாமையின் அடையாளம். நம்முடைய அறியாமையை அடக்கி ஆள்பவர் விநாயகர் என்பதை மூஞ்சூறு வாகனம் நமக்கு உணர்த்துகிறது. இதில் மற்றொரு தத்துவமும் அடங்கியிருக்கிறது. தூய்மையான பக்தியுடன் தம்மை வழிபடுபவர்களின் மனங்களில் தம்மை எளிதாக்கிக்கொண்டு எழுந்தருள்கிறார் என்னும் பேருண்மையையும் மூஞ்சூறு வாகனம் நமக்கு உணர்த்துகிறது. 

விநாயகரின் காதுகள் முறம் போன்று பெரிதாக இருக்கும். நல்ல விஷயங்களைக் கேட்கவேண்டும் என்பதை நமக்கு உணர்த்தவே காதுகள் பெரிதாக அமைந்துள்ளன. தும்பிக்கை, விநாயகரின் வாயை மறைத்துள்ளது. அது நாம் பேசுவதைக் குறைக்க வேண்டும் என்பதை உணர்த்துகிறது. 

விநாயகர் ஒரு கையில் மோதகம் வைத்துள்ளார். மோதகத்துக்குள் இருப்பது இனிப்பான பூரணம். தம்மை வழிபடுபவர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சியை மட்டுமே அருள்வார் என்பதை உணர்த்தவே விநாயகரின் கரத்தில் மோதகம் இருக்கிறது. இந்த மோதகம் பிரபஞ்சத்தைக் குறிப்பிடுகிறது. இந்தப் பிரபஞ்சத்தில் நாம் காணும் அனைத்தும் இனிப்பானவையே. நாமும் மற்றவர்களுடன் இனிமையாகப் பேசினால், பிள்ளையார் நம்மை தம் கரத்தில் ஏந்திக் காப்பாற்றுவார் என்பதை உணர்த்துவதாகவும் கொள்ளலாம்.

மகாகவி பாரதி எழுதிய விநாயகர் வணக்கப்பாடலை தன் தேன் குரலால் ஒலிக்கச் செய்கிறார் பாடகி பவ்யா ஹரிசங்கர்.  2.27 நிமிடங்களுக்கு காது கொடுங்கள்! 

இவை அனைத்தையும்விட விநாயகப் பெருமான் அணுகுவதற்கு எளிமையான கடவுள். ஆனாலும், அருள் திறத்தில் எல்லை இல்லாதவர். மற்ற தெய்வங்களைப் போல் அல்லாமல், பிள்ளையாரை மட்டும் சாலையோரங்களிலும் மரத்தடிகளிலும்கூட வைத்து வழிபடுகிறோம்... அது சரியா? அவரை நம் தலையில் குட்டிக் கொண்டு வணங்குவதன் தாத்பர்யம் என்ன என்று காஞ்சி மஹா ஸ்வாமிகள் அளித்த அருளுரை இது.... 

"பிள்ளையார் ஏழை எளியவர்களுக்கெல்லாம் அருள் செய்யும் எளிய சுவாமி. மஞ்சள் பொடியிலும், களிமண்ணிலும், வெல்லத்திலும்கூட பிள்ளையாரைப் பிடித்து வழிபட சாஸ்திரம் அனுமதிக்கிறது. சொல்லப்போனால் வெல்லப்பிள்ளையாரைக் கிள்ளி அவருக்கே நைவேத்தியம் செய்யலாம். அந்த அளவுக்கு எளிமையானவர் பிள்ளையார். அவரை வழிபட நாம் நிறைய சாஸ்திரம் படிக்கவேண்டும் என்பதில்லை. ஒன்றும் படிக்காதவனுக்குக்கூட அவர் கூப்பிட்ட உடனே வந்துவிடுவார். 

மற்ற சுவாமிகளை நாம் தரிசனம் செய்ய வேண்டும் என்றால், நேரம் பார்த்து, குளித்து முழுகி, அர்ச்சனைப் பொருள்களை வாங்கிக் கொண்டு கோயிலுக்குப் போகவேண்டி இருக்கிறது. போனாலும் நேராக சுவாமியிடம் போய்விடமுடியாது. பிராகாரத்தைச் சுற்றிக்கொண்டு போகவேண்டும். அப்படியும் சுவாமிக்கு ரொம்பவும் பக்கத்தில் போய்விடமுடியாது. கொஞ்சம் தள்ளித்தான் நிற்கவேண்டும்.  ஆனால், பிள்ளையார் அப்படி இல்லை. சாலையோரத்திலும் மரத்தடியிலும்கூட அவர் அமர்ந்துகொண்டிருக்கிறார்.

 

பிள்ளையாரை அருகில் சென்று கும்பிடலாம். ஆபீஸ், கடை அல்லது பள்ளிக்கூடம் போகும் வழியிலும்கூட அவரைத் தலைநிமிர்ந்து பார்த்து வணங்கலாம். அதிலேயே நமக்கு அளவற்ற மகிழ்ச்சி கிடைத்துவிடும். அவர் எளிமையான குழந்தை வடிவமான சுவாமி. பிள்ளையார் வழிபாட்டுக்கென்றே சில அம்சங்கள் இருக்கின்றன. சிதறு தேங்காய் போடுவது, நெற்றியில் குட்டிக்கொள்வது, இரண்டு கைகளை குறுக்காக மறித்து இரண்டு காதுகளையும் பிடித்துக் கொண்டு, முட்டிக்கால் தரையில் படுவதுபோன்று தோப்புக்கரணம் போடுவது ஆகியவை பிள்ளையார் வழிபாட்டில் அடங்கிஇருக்கின்றன. 

யோக சாஸ்திரம் என்று ஒன்று இருக்கிறது. அதில் நாம் நாடிகளில் ஏற்படும் சலனங்களால், எப்படி மனதையும் நல்லதாக மாற்றிக்கொள்ளலாம் என்று வழி சொல்லப்பட்டுள்ளது. நம்முடைய உடம்பைப் பல தினுசுகளாக வளைத்துச் செய்யும் அப்பியாசங்களால், சுவாசத்தின் போக்கில் உண்டாக்கிக் கொள்ளும் மாறுதல்களால், நம்முடைய உள்ளம் உயர்வதற்கான வழி அந்த யோக சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. தலையில் குட்டிக்கொள்வது, தோப்புக்கரணம் போடுவது போன்றவற்றால் நம்முடைய நாடிகளின் சலனம் மாறும். மனதில் தெய்வீகமான மாறுதல்கள் உண்டாகும். நம்பிக்கையுடன் செய்தால் அதற்கு நிச்சயமாகப் பலன் தரும்'' 

முருகனுக்கு அறுபடை வீடுகள் இருப்பது தெரியும்... விநாயகப் பெருமானின் அறுபடை வீடுகள் பற்றி அறிந்து கொள்ளலாமா? 

விரதங்களில்கூட விநாயகர் சதுர்த்தி விரதம்தான் புராதனமான விரதம். அளவற்ற நன்மைகளை அளிக்கும் விரதம். 

முருகக் கடவுள் ஒருமுறை சிவபெருமானிடம், '’தந்தையே! விரதங்களில் எல்லாம் சிறந்தது எது?' என்று கேட்டார். உடனே சிவபெருமான், 'சந்தேகமே இல்லாமல் கூறுகின்றேன். விநாயகர் சதுர்த்தி விரதம்தான் தலைசிறந்த விரதம்' என்று பதிலளித்தார்.  இதைக்கேட்ட முருகன் சற்றே குழம்பிப் போனார். காரணம் விநாயகரைப் பெற்றவரே சிவபெருமான்தானே? அப்படி இருக்க விநாயகரைக் குறித்த விரதம் எப்படிச் சிறப்புடையதாகும்?  முருகனின் இந்தக் குழப்பத்தைத் தெளிவிக்கும் விதமாகச் சிவபெருமான் இவ்வாறு கூறினார்.

''முருகா! மூல முழுமுதற் பொருள் விநாயகர்தான். அவர்தான் மும்மூர்த்திகளான எங்களையும், அகில உலகங்களையும்தோற்றுவித்தவர். அவர் இதற்கு முன்பும் பலமுறை பல காரண காரியங்களுக்காக அவதாரம் செய்துள்ளார். அப்படி ஒருகாரணத்தை முன்னிட்டே அவர் எனக்குப் பிள்ளையாகப் பிறந்திருக்கிறார். எனவே, அவரே சகலமும்." 

விநாயகர்

கலைஞர்களின் கைவண்ணத்தில் உருவான, விதம் விதமான ஆதி முழு முதலானை இங்கே தரிசனம் செய்யுங்கள் 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!