இஸ்லாமிய ஹிஜ்ரீஆண்டு எப்படிக் கணக்கிடப்பட்டது தெரியுமா?

இஸ்லாமிய ஹிஜ்ரீஆண்டு எப்படிக் கணக்கிடப்பட்டது தெரியுமா?

ஸ்லாமிய வரலாற்றின் இரண்டாவது கலீஃபா உமர் இப்னுல் கத்தாப் (ரலி) ஆட்சிக் காலத்தில், ஒரு கடன்பத்திரம் அவரின் பார்வைக்கு வந்தது. அதில் மாதம் `ஷஅபான்’ எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. ‘எழுதியவர்கள் எந்த ஷஅபானைக் குறிப்பிடுகிறார்கள்? கடந்த வருடத்து ஷஅபானா? அடுத்த வருடமா? இப்போதைய ஷஅபானா?’ முடிவுக்கு வர முடியாமல் உமர், நமக்கென ஆண்டுகள் ஏன் இல்லை என்ற கேள்வியுடன் யோசித்தார். 

இஸ்லாம் தொழுகை

முஹாஜிர், அன்சாரி ஆகிய தோழர்களை அழைத்து ஆலோசனை கேட்டார். 

`வருடத்தைக் குறிப்பிட மக்களுக்கு ஒரு தொடக்கம் தேவை. என்ன செய்யலாம்? ரோமர்களின் ஆண்டுப்படி போகலாமா? வேண்டாம். அது ரொம்பப் பழையது. அவர்கள் துல்கர்னைன் காலத்திலிருந்து கணக்கிடுகிறார்கள். 

சரி, பாரசீகர்களின் ஆண்டு? வேண்டாம். அதில் நிறையக் குழப்பங்கள். ஒவ்வொரு புதிய மன்னரும் புது ஆண்டை ஆரம்பிக்கிறார். 

யானை ஆண்டு? அப்ரஹாவின் யானைப் படை துவம்சம் செய்யப்பட்டதே, அதிலிருந்து?' 

அதுவும் நிராகரிக்கப்பட்டது. 

ஆலோசனையில் 4 கருத்துகள் முக்கியமாகப் பேசப்பட்டன. 

1) நபியவர்களின் பிறப்பு 2) அவர்கள் நபியான வருடம் 3) அவர்களின் ஹிஜ்ரத்  4) மரணம். 

இதில் பிறந்த வருடமும், நபியான வருடமும் சர்ச்சை செய்யப்பட்டன. அதனால் கைவிடப்பட்டன. நபியவர்கள் இறந்த வருடத்திலிருந்து தொடங்கினால் முஸ்லிம்கள் எல்லோரையும் அது கவலையில் தள்ளும். அதையும் கணக்கிட வேண்டாம். 

 ஹிஜ்ரீ

ஹிஜ்ரத் செய்த வருடமே பொருத்தம் என்று முடிவானது. (பத்ஹுல் பாரீ பாகம் 7, பக் 268 இதே கருத்து சஹ்ல் இப்னு சஅது (ரலி) மூலமும் அறிவிக்கப்படுகிறது. (ஸஹீஹுல் புகாரீ 3934) 

அலீ அவர்களிடம் உமர் கேட்டார், `நம்முடைய வரலாறு எப்போதிருந்து ஆரம்பிக்கிறது’ என்று. 

அலீ தெளிவாகச் சொன்னார், `இணை வைப்பவர்களின் பூமியை விட்டுவிட்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) எப்போது வெளியேறினார்களோ அப்போதிருந்து... அதாவது, ஹிஜ்ரத்திலிருந்து’ எனக் கூறினார். 

உமர் தீர்மானமாக அறிவித்தார். மக்காவை விட்டு வெளியேறி மதீனா வந்ததிலிருந்து ஆண்டைத் தொடங்கலாம். அதுதான் ஹிஜ்ரீ ஆண்டுக் கணக்கு. 

ஆனால் நபி (ஸல்) அவர்கள் மதீனா வந்தது ரபீ உல் அவ்வல் மாதம். அப்படியென்றால், அதுதான் முதல் மாதமா? நமது ஆண்டின் முதல் மாதம் எது? 

புதிய முடிவு வெளியானது. நபியவர்கள் மதீனா வந்தது ரபீ உல் அவ்வல்தான், ஆனால் ஹிஜ்ரத் செய்யும் யோசனை துல்ஹஜ்ஜில் ஆரம்பமானது. மதீனாவாசிகளின் இரண்டாம் அஃகபா உடன்படிக்கை அப்போதுதான் நடந்தது. அவர்கள் ஹஜ்ஜுக்கு வந்த நேரம் அது. அதற்கு அடுத்த மாதம் முஹர்ரம். மதீனாவாசிகள் தீர்மானமாக வேலையில் இறங்கிய மாதம். ஹிஜ்ரத் திட்டங்கள் ஆரம்பமாயின.. 

ஆனால், முஹர்ரம் மாதம் ஆண்டின் ஒரு தொடக்கம் மட்டுமல்ல! 

முஹர்ரம் - ஓர் ஆண்டின் முதல் மாதம் மட்டுமல்ல! 

காலெண்டர்

திட்டவட்டமாக அல்லாஹ்விடம் மாதங்களின் எண்ணிக்கை பன்னிரண்டுதான். பன்னிரண்டு மாதங்களின் வரிசை: 

1) முஹர்ரம் 

2) ஸஃபர் 

3) ரபீஉல் அவ்வல் 

4) ரபீஉல் ஆகிர் 

5) ஜுமாதா அல்ஊலா 

6) ஜுமாதா அல்உக்ரா 

7) ரஜப் 

8) ஷஅபான் 

9) ரமலான் 

10) ஷவ்வால் 

11) துல்கஅதா 

12) துல்ஹஜ்ஜு 

பிரபஞ்சத்தைப் படைத்தபோதே இத்தனை மாதங்கள்தாம் ஆண்டுக்கு என்று முடிவுசெய்து எழுதியும் வைத்துவிட்டான் அல்லாஹ்

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!