புரட்டாசி மாத ராசிபலன்! - துலாம் முதல் மீனம் வரை #Astrology

புரட்டாசி மாத ராசிபலன்! - துலாம் முதல் மீனம் வரை #Astrology

முதல் ஆறு ராசிகளுக்கான பலன்களைப் படிக்க இங்கு க்ளிக் செய்யவும் 


துலாம்  ராசிதுலாம் ராசி நேயர்களே...

12 - ல் சூரியன்;  12,1 - ல் புதன்; 1-ல் சுக்கிரன்; 1,2 - ல் குரு; 3-ல் சனி; 4-ல் செவ்வாய், கேது; 10-ல் ராகு

மாதப் பிற்பகுதியில் குருவும், மாதம் முழுவதும் சுக்கிரனும் சனியும் நன்மை செய்வார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியும் உற்சாகமும் அதிகரிக்கும். சுபநிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள். கணவன் - மனைவிக்கிடையே அன்னியோன்னியம் அதிகரிக்கும். எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும். குடும்பத் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். புதிய முயற்சிகள் வெற்றிகரமாக நிறைவேறும். மனதில் தன்னம்பிக்கையும் தைரியமும் அதிகரிக்கும். குடும்பத்துடன் உறவினர், நண்பர்கள் வீட்டு விருந்து விசேஷங்களில் கலந்துகொள்ளும் வாய்ப்பு ஏற்படும். மாதப் பிற்பகுதியில் உறவினர்கள் வருகை குடும்பத்தில் மகிழ்ச்சி தருவதாக இருக்கும். இதுவரை மறைந்திருந்த உங்கள் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். வெளிவட்டாரத்தில் மதிப்பு மரியாதை அதிகரிக்கும். உறவினர்கள் வகையில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.
அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலையே காணப்படும். பணிச்சுமை அதிகரித்தாலும் சக ஊழியர்கள் உங்கள் பணிகளில் உதவியாக இருப்பார்கள். உங்கள் திறமைகள் நிர்வாகத்தினரால் புரிந்துகொள்ளப்பட்டு, உரிய சலுகைகளும், பதவி உயர்வும் கிடைக்கும். சக ஊழியர்களுக்குத் தேவையான ஆலோசனைகளைச் சொல்லி வழிநடத்துவீர்கள்.

வியாபாரத்தில் அபிவிருத்தி உண்டாகும். ஆனால், புதிய கிளைகளைத் தொடங்குவது மற்றும் புதுத் தொழிலில் முதலீடு செய்வது ஆகியவற்றில் ஒருமுறைக்குப் பலமுறை சிந்தித்து ஈடுபடுவது நல்லது. சக வியாபாரிகளால் சில பிரச்னைகள் ஏற்பட்டாலும் சாமர்த்தியமாகச் சமாளித்துவிடுவீர்கள்.

கலைத்துறையினருக்கு எதிர்பார்த்தபடி புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். பிரபல நிறுவனங்களிலிருந்து அழைப்பு வரும். வருமானமும் திருப்தி தருவதாக இருக்கும். பெயரும் புகழும் அதிகரிக்கும்.

மாணவர்கள் பாடங்களில் கூடுதல் கவனம் எடுத்துக்கொள்ளவேண்டியது அவசியம். சிரமப்பட்டுப் படித்தால்தான் தேர்வுகளில் சிறப்பான முறையில் தேர்ச்சி பெற முடியும். சந்தேகங்களை அப்போதே கேட்டுத் தெரிந்துகொள்வது நல்லது.

பெண்களுக்கு மகிழ்ச்சி தரும் மாதம். உறவினர்களிடம் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். உங்கள் ஆலோசனைகளை ஏற்று நடப்பார்கள். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு அலுவலகத்தில் உற்சாகமான நிலையே காணப்படும். எதிர்பார்த்த சலுகை கிடைக்கும்.
 

அதிர்ஷ்ட நாள்கள்: செப்: 18, 19, 25,27, அக்: 4, 5, 6, 10, 11, 15
சந்திராஷ்டம நாள்கள்: செப்: 29, 30, அக்: 1

பாராயணத்துக்கு உரிய மந்திரம்: தினமும் பாம்பன் சுவாமிகள் அருளிய சண்முகக் கவசம் என்னும் எளிய ஸ்தோத்திரத்தை பாராயணம் செய்யவும்.

பரிகாரம்: வெள்ளிக்கிழமை துர்கைக்கு நெய்தீபம் ஏற்றுவதுடன் அர்ச்சனை செய்து வழிபடுவது நன்மை தரும். சங்கடஹர சதுர்த்தியன்று விநாயகருக்கு மோதகம் நைவேத்தியம் செய்து பக்தர்களுக்கு விநியோகிப்பது நல்லது.

விருச்சிகம்விருச்சிக ராசி நேயர்களே...

11 - ல் சூரியன்;  11,12 - ல் புதன்; 12-ல் சுக்கிரன்; 12,1 - ல் குரு; 2-ல் சனி; 3-ல் செவ்வாய், கேது; 9 -ல் ராகு

மாதம் முழுவதும் சூரியன், சுக்கிரன், செவ்வாய், கேது, மாத முற்பகுதியில் புதனும் நன்மை செய்வார்கள். 
புதிய ஆடை, ஆபரணங்கள் சேரும். விருந்து விசேஷங்களில் கலந்துகொள்ளும் வாய்ப்பு உண்டாகும். கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில் மதிப்பும் மரியாதையும் கூடும். அரசாங்க விவகாரங்கள் அனுகூலமாக முடியும்.  தாய்மாமன் வகையில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். வாழ்க்கைத்துணை மூலம் எதிர்பாராத பொருள்வரவுக்கு வாய்ப்பு உண்டு. பழைய வாகனத்தை மாற்றி, புதிய வாகனம் வாங்குவீர்கள். மறைமுக எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் விலகும்.  உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி நிலவும்.  உடல் ஆரோக்கியம் மேம்படும். வீண் செலவுகள் ஏற்படாது. குடும்பத்தில் சில பிரச்னைகள் ஏற்பட்டாலும் அதனால் பாதிப்பு எதுவும் ஏற்படாது. மாதப் பிற்பகுதியில் தாய்மாமன் வழியில் குடும்பத்தில் சில குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். உறவினர்களிடம் அனுசரணையாகச் செல்வது நல்லது. பிள்ளைகளை அவர்கள் போக்கிலேயே விட்டுப் பிடிக்கவும். எந்த ஒரு செயலையும் ஒருமுறைக்குப் பலமுறை போராடித்தான் முடிக்கவேண்டி இருக்கும். 

அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். எந்த ஒரு வேலையையும் சற்று கஷ்டப்பட்டுத்தான் முடிக்கவேண்டி இருக்கும். தீவிர முயற்சியின் பேரிலேயே உங்கள் கோரிக்கைகள் நிறைவேறும். சக ஊழியர்களால் ஓரளவு உதவி உண்டு.

தொழில், வியாபாரத்தில் கூடுதலாக உழைக்கவேண்டும். ஆனால், அதற்கேற்ற ஆதாயம் கிடைக்கும் என்று சொல்வதற்கில்லை. பங்குதாரர்களால் வியாபாரத்தில் லாபம் கூடுதலாகக் கிடைக்கும். வியாபாரத்தை விரிவுபடுத்த வங்கிக் கடனுதவி கிடைக்கும்.

கலைத்துறையைச் சேர்ந்த அன்பர்களுக்கு பெரிய நிறுவனங்களில் இருந்து அழைப்பு வரும். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். புகழும் கௌரவமும் அதிகரிக்கும். ரசிகர்களிடம் உங்கள் செல்வாக்கு கூடும். சிலருக்கு விருதுகளும் பட்டங்களும் கிடைக்கும்.

மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். பாடங்களை ஆர்வத்துடன் கவனிப்பீர்கள். ஆசிரியர்களின் கேள்விகளுக்கு உரிய பதில்களைக் கூறி, பாராட்டு பெறுவீர்கள். மாதப் பிற்பகுதியில் பாடங்களில் ஆர்வம் குறையக்கூடும்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு மகிழ்ச்சி தரும் மாதமாகவே இருக்கும். குடும்பப் பொறுப்புகளை நிறைவேற்றுவதில் சிரமம் எதுவும் இருக்காது. அக்கம்பக்கத்து வீடுகளில் உள்ளவர்கள் உதவிகரமாக இருப்பார்கள். அலுவலகத்துக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு பணிகளில் கூடுதல் கவனம் தேவை.
 

அதிர்ஷ்ட நாள்கள்: செப்: 20, 21, 27, 29, 30 அக்: 1, 6, 9, 12, 14

பாராயணத்துக்கு உரிய மந்திரம்: 'குலம் தரும்' என்று தொடங்கும் திருமங்கையாழ்வாரின் பாசுரங்களைப் பாராயணம் செய்வது நல்லது.
சந்திராஷ்டம நாள்கள்: வியாழக்கிழமை தட்சிணாமூர்த்திக்கு நெய்தீபம் ஏற்றி அர்ச்சனை செய்வதும், சனிக்கிழமையன்று பெருமாளை வழிபடுவதும் நன்மை தரும்.

தனுசுதனுசு ராசி நேயர்களே...

10 - ல் சூரியன்;  10,11 - ல் புதன்; 11-ல் சுக்கிரன்; 11,12 - ல் குரு; 1-ல் சனி; 2-ல் செவ்வாய், கேது; 8 -ல் ராகு

மாதம் முழுவதும் சூரியன், புதன், சுக்கிரன் ஆகியோர் நற்பலன் தருவார்கள்.
அனைத்து காரியங்களிலும் வெற்றி உண்டாகும். பணவரவு மகிழ்ச்சி தருவதாக இருக்கும். புதிய வாகனம் வாங்கும் யோகமும் உண்டாகும். சிலருக்கு எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்புகளும் ஏற்படக்கூடும். தெய்வ பக்தியும் ஆன்மிகத்தில் நாட்டமும் அதிகரிக்கும். தந்தை வழியில் எதிர்பார்த்த காரியம் முடிவதில் தாமதம் ஏற்படும். தந்தையுடன் கருத்து வேறுபாடு ஏற்படக் கூடும் என்பதால் பொறுமையுடன் இருப்பது நல்லது. அரசாங்கக் காரியங்கள் இழுபறியாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. சுக்கிரன் சாதகமாக இருப்பதால் பொன், பொருள் சேர்க்கைக்கு வாய்ப்பு உண்டாகும். வாழ்க்கைத்துணைவழி உறவினர்களால் எதிர்பாராத ஆதாயம் கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. சகோதர வகையில் எதிர்பார்த்த காரியம் சாதகமாக முடியும். வீடு, மனை வாங்கும் முயற்சி அனுகூலமாக முடியும். ஆனால், உறவினர்களால் அடிக்கடி பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால் கூடுமானவரை பொறுமையைக் கடைப்பிடிக்கவும். கணவன் - மனைவிக்கிடையே சிறுசிறு அளவில் கருத்துவேறுபாடு ஏற்பட வாய்ப்பு உள்ளதால், ஒருவரையொருவர் அனுசரித்துச் செல்வது நல்லது.  குடும்பத்தில் அடிக்கடி பிரச்னைகள் ஏற்படக் கூடும். நண்பர்களிடம் எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்கும். நண்பர்களால் வாழ்க்கை யில் நல்ல திருப்பம் ஏற்படக்கூடும்.

அலுவலகத்தில் பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்ற சலுகைகள் கிடைக்கும். ஆனாலும், பணிச்சுமை அதிகரிக்கவே செய்யும். சக ஊழியர்கள் உங்கள் பணிகளில் உதவிகரமாக இருப்பார்கள். சிலருக்கு வேலையில் இடமாற்றமும் ஊர்மாற்றமும் ஏற்பட வாய்ப்பு உண்டாகும்.

தொழில் மற்றும் வியாபாரத்தில் மாத முற்பகுதியில் விற்பனை அதிகரிப்பதுடன் லாபமும் படிப்படியாக உயரும். ஆனால், முன்பின் தெரியாதவர்களுடன் ஒப்பந்தம் செய்துகொள்ள வேண்டாம். ஷேர் மூலம் ஆதாயம் வரும். 

கலைத்துறையைச் சேர்ந்த அன்பர்களுக்கு தடைப்பட்ட வாய்ப்புகள் கைகூடி வரும். வருமானமும் அதிகரிக்கும். பாராட்டுகள் குவியும். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். சிலருக்கு வெளியூர், வெளிநாடு செல்லும் வாய்ப்பும் உண்டாகும்.
மாணவ - மாணவியர் படிப்பில் கூடுதல் கவனம் எடுத்துப் படிக்கவேண்டியது அவசியம். பொழுதுபோக்குகளைக் குறைத்துக்கொள்வது நல்லது. ஆசிரியர்கள் பாடங்கள் நடத்தும்போது கூர்ந்து கவனிப்பது அவசியம்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு குடும்பத்தை நிர்வகிப்பதில் சற்று சிரமம் இருக்கவே செய்யும். பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது. வேலைக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு வேலைச்சுமை கூடுதலாக இருக்கும். 
 

அதிர்ஷ்ட நாள்கள்: செப்:18, 19, 22, 23, 24, 29, 30, அக்: 1, 2, 3, 9, 10, 11, 15
சந்திராஷ்டம நாள்கள்: அக்: 4, 5

பாராயணத்துக்கு உரிய மந்திரம்: தினமும் கந்தசஷ்டி கவசம் அல்லது கந்தரனுபூதி பாராயணம் செய்யவும்.

பரிகாரம்: செவ்வாய்க்கிழமைகளில் முருகனுக்கு அபிஷேக, அர்ச்சனைகள் செய்வதும், சனிக்கிழமை ஆஞ்சநேயரை வழிபடுவதும் நன்மை தரும். 

 

 

ராசிபலன்

மகரம்மகர ராசி நேயர்களே...

9 - ல் சூரியன்;  9,10 - ல் புதன்; 10-ல் சுக்கிரன்; 10,11 - ல் குரு; 12-ல் சனி; 1-ல் செவ்வாய், கேது; 7 -ல் ராகு

மாதப் பிற்பகுதியில் புதன், குரு, ஆகியோரும், மாதம் முழுவதும் சுக்கிரனும் நன்மை செய்வார் கள். 
பணவரவு கணிசமாக உயரும். புதிய ஆடை, ஆபரணங்கள் சேரும். மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். எதையும் சாதிக்கவேண்டும் என்ற மன உறுதி ஏற்படும். பழைய வாகனத்தை மாற்றிவிட்டு, புதிய வாகனம் வாங்குவீர்கள். கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் நிம்மதியும் ஏற்படும். பிரிந்திருந்த தம்பதி ஒன்று சேருவார்கள். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். சுபநிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் வாய்ப்பு ஏற்படும். குடும்பத்துடன் விருந்து விசேஷங்களுக்குச் சென்று வருவீர்கள். உறவினர்களால் உதவி கிடைக்கும் அதே நேரத்தில் அவர்களால் சிறு உபத்திரவமும் ஏற்படலாம். உறவினர்கள் வகையில் சற்று பக்குவமாக நடந்துகொள்வது நல்லது. வெளிவட்டாரத்தில் மதிப்பு மரியாதை கூடும். வாழ்க்கைத்துணை வழி உறவுகள் உங்கள் ஆலோசனைகளை ஏற்றுக் கொள்வார்கள். அவர்கள் மத்தியில் உங்கள் கௌரவம் உயரும்.

அலுவலகத்தில் இதுவரை இருந்து வந்த இறுக்கமான சூழ்நிலை மாறும். உங்கள் பணிகளில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். சிலருக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்ற சலுகைகள் கிடைக்கும். நிர்வாகத்தினரிடம் எதிர்பார்த்த கோரிக்கைகள் நிறைவேறும். 

தொழில் மற்றும் வியாபாரத்தில் லாபம் சுமாராகத்தான் கிடைக்கும். மாத முற்பகுதியில் வீண் விரயம் ஏற்பட சாத்தியமுள்ளது. புதிய முயற்சிகளைத் தவிர்ப்பதுடன், வியாபாரத்தை விரிவு படுத்தும் முயற்சிகளையும் தவிர்க்கவும். சக வியாபாரிகளால் மறைமுகப் போட்டிகளைச் சந்திக்க நேரிடலாம். 

கலைத்துறையைச் சேர்ந்த அன்பர்களுக்கு மாத முற்பகுதியில் எதிர்பார்த்த புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். மாதத்தின் பிற்பகுதியில் சக கலைஞர்களால் மறைமுக தொல்லைகள் ஏற்பட்டு நீங்கும்.

மாணவ மாணவியர்க்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற சற்று கஷ்டப்பட்டு படித்தால்தான் முடியும். ஆசிரியர் மற்றும் பெற்றோரின் ஆலோசனையைக் கேட்டு நடப்பது நல்லது.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு பல வகைகளிலும் முன்னேற்றம் தரும் மாதமாக இருக்கும். புகுந்த வீட்டு உறவினர்கள் மத்தியில் மதிப்பும் மரியாதையும் கூடும். கணவரின் பாராட்டுகள் கிடைக்கும்.அலுவலகத்துக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு சிறப்பான பலன்கள் ஏற்படக்கூடும். எதிர்பார்த்த பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைக்கக்கூடும்.
 

அதிர்ஷ்ட நாள்கள்: செப்: 20, 21, 25, அக்: 2, 3, 4, 10, 11, 12, 14
சந்திராஷ்டம நாள்கள்: அக்: 6, 7

பாராயணத்துக்கு உரிய மந்திரம்: தினமும் அனுமன் சாலீசா பாராயணம் செய்வது நல்லது. முடியாதவர்கள் 'ஶ்ரீராம ஜெயராம ஜெய ஜெயராம' என்று மனதுக்குள் 15 நிமிடங்கள் ஜபிப்பது நன்மை தரும்.

பரிகாரம்: ஆஞ்சநேயர் வழிபாடும், துர்கை அம்மன் வழிபாடும் நன்மை தரும்.

கும்பம்கும்ப ராசி நேயர்களே...

8 - ல் சூரியன்;  8,9 - ல் புதன்; 9-ல் சுக்கிரன்; 9,10 - ல் குரு; 11-ல் சனி; 12-ல் செவ்வாய், கேது; 6 -ல் ராகு

மாத முற்பகுதியில் புதன், குரு, மாதம் முழுவதும் சுக்கிரன், சனி, ராகு ஆகியோர் அற்புதமான நன்மைகளைச் செய்யவிருக்கிறார்கள்.

வெளிவட்டாரத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாக முடியும். தந்தை வழி உறவுகளால் ஆதாயம் உண்டாகும். பணவரவு கணிசமாக உயரும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் உற்சாகமும் நிலவும். கணவன் - மனைவிக் கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். உறவினர்கள் வருகையும், அதனால் மகிழ்ச்சியும் உண்டாகும். உறவினர்களிடம் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாகும். வீடு, மனை வாங்கும்  முயற்சியில் தற்போது ஈடுபடவேண்டாம். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். எதிரிகளின் தொல்லை இல்லாமல் போகும். அவர்களால் மறைமுக ஆதாயமும் கிடைக்கக்கூடும். முக்கிய முடிவுகளைத் துணிச்சலுடன் எடுப்பீர்கள். உங்கள் முயற்சிகளுக்கு மனைவி, மகள் உள்ளிட்ட குடும்பப் பெண்கள் பக்கபலமாக இருப்பார்கள். ஆனால், மாதப் பிற்பகுதியில் விலை உயர்ந்த நகை மற்றும் பொருள்களை இரவல் தரவும் வாங்கவும் வேண்டாம். வீட்டில் பொருள்கள் களவு போகக்கூடும் என்பதால், எச்சரிக்கையாக இருக்கவும். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன் அனுசரித்துச் செல்வது நல்லது. உடல் ஆரோக்கியம் மேம்படும்.

அலுவலகத்தில் ஓரளவுக்கு முன்னேற்றமான சூழ்நிலையே காணப்படுகிறது. எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். சக ஊழியர்கள் உங்கள் பணிகளில் ஒத்துழைப்பு தருவார்கள். உங்கள் கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்படும். பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைப்பதில் இருந்த தடைகள் விலகும். 

தொழில் மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். விற்பனையும் லாபமும் எதிர்பார்த்த படியே இருக்கும். அரசாங்கத்திடம் எதிர்பார்த்த லைசென்ஸ் போன்ற விஷயங்கள் சற்று இழுபறிக்குப் பிறகே முடியும். வியாபாரத்தை விரிவுபடுத்தும் எண்ணம் இருந்தால், அதற்கான முயற்சிகளில் இந்த வாரம் ஈடுபடலாம்.

கலைத்துறையைச் சேர்ந்த அன்பர்களுக்கு எதிர்பார்த்தபடியே வாய்ப்புகள் கிடைத்தாலும், சரியாகப் பயன்படுத்திக்கொள்ள முடியாத சூழ்நிலை ஏற்படக்கூடும். மாதப் பிற்பகுதியில் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்.

மாணவ - மாணவியர்க்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும்.தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் பெறுவீர்கள். ஆசிரியர்களின் பாராட்டுகள் மனதுக்கு மகிழ்ச்சி தரும். போட்டி, பந்தயங்களில் வெற்றி பெறுவீர்கள்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு மாதத்தின் பெரும்பகுதி மகிழ்ச்சி தருவதாக இருக்கும். கணவரிடம் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாகும். உறவினர்களிடையே மதிப்பு மரியாதை அதிகரிக்கும். அலுவலகத்துக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட நாள்கள்: செப்: 18, 19, 22, 23, 24, அக்: 4, 5, 6, 7, 22, 24, 27, அக்: 4, 6, 7, 13, 14, 15
சந்திராஷ்டம நாள்கள்: அக்: 8, 9

பாராயணத்துக்கு உரிய மந்திரம்: தினமும் விநாயகர் அகவல் பாராயணம் செய்வது நல்லது. 

பரிகாரம்: ஞாயிற்றுக்கிழமைகளில் சூரிய பகவானை வழிபடுவதும், விநாயகருக்கு நெய்தீபம் ஏற்றுவதும் நன்மை தரும்.

மீனம்மீன ராசி நேயர்களே...

7 - ல் சூரியன்;  7,8 - ல் புதன்; 8-ல் சுக்கிரன்; 8,9 - ல் குரு; 10-ல் சனி; 11-ல் செவ்வாய், கேது; 5 -ல் ராகு

மாதப் பிற்பகுதியில் புதன், குரு, மாதம் முழுவதும் சுக்கிரன், செவ்வாய், கேது ஆகியோர் நன்மை செய்வார்கள்.

வெளிவட்டாரத்தில் மதிப்பு மரியாதை நல்லபடியே இருக்கும். பண வரவு திருப்தி தருவதாக இருக்கும். காரியங்கள் அனுகூலமாக முடியும். குடும்பத்தில் வசதி வாய்ப்புகள் பெருகும். வீட்டில் மகிழ்ச்சியும் நிம்மதியும் உண்டாகும். பெண்களால் நன்மை உண்டாகும். புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கை உண்டாகும். கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். உறவினர்களால் நன்மைகள் ஏற்படும். குடும்பத் தேவைகள் ஒவ்வொன்றாக நிறைவேறும். தந்தை வழியில் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாக முடியும். பெண்களால் நன்மை உண்டாகும். அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும். பூர்வீகச் சொத்துப் பிரச்னையில் பொறுமையைக் கடைப்பிடிக்கவும்.  சிலருக்கு தடைப்பட்ட திருமணம் கூடி வரும். வீட்டில் சுபநிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். குடும்பத்துடன் கோயில்களுக்குச் சென்று பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். வெளியூர்ப் பயணங்களின்போது கைப்பொருள்களை பத்திரமாகப் பார்த்துக்கொள்ளவும்.
அலுவலகத்தில் உற்சாகமாக செயல்படுவீர்கள். உங்கள் ஆலோசனைகள் நிர்வாகத்தினரால் ஏற்றுக்கொள்ளப்படும். மாதப் பிற்பகுதியில் மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். சிலருக்கு பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்ற சலுகைகள் கிடைப்பதற்கான வாய்ப்பு உண்டு. சக ஊழியர்களிடையே உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும்.

தொழில் மற்றும் வியாபாரத்தில் லாபம் அதிகமாகக் கிடைக்கும். மற்ற வியாபாரிகளின் போட்டியாளர்களின் மறைமுக எதிர்ப்புகளை முறியடிப்பீர்கள். பங்குதாரர்களுடன் இணக்கமான சூழ்நிலை ஏற்படும். வியாபாரத்தை விரிவுபடுத்தவோ அல்லது புதிய முதலீடு செய்வதையோ  தவிர்த்துவிடவும்..

கலைத்துறையைச் சேர்ந்த அன்பர்களுக்கு புதுப் புது வாய்ப்புகள் தேடி வரும். திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும். சிலருக்கு விருதும் பாராட்டும் கிடைக்கும் வாய்ப்பு ஏற்படக்கூடும். சக கலைஞர்கள் அனுசரணையாக நடந்துகொள்வார்கள்.

மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்று ஆசிரியர் மற்றும் பெற்றோர்களின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். போட்டி பந்தயங்களில் கலந்துகொண்டு பரிசும் பாராட்டும் பெறுவீர்கள்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு மகிழ்ச்சி தரும் மாதமாக இருக்கும். குடும்பத்தில் உங்கள் ஆலோசனைகள் மற்றவர்களால் ஏற்றுக்கொள்ளப்படும். உறவினர்களும் உங்களுக்கு உதவியாக இருப்பார்கள். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களால் அனுகூலம் உண்டாகும். வேலைக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.
 

அதிர்ஷ்ட நாள்கள்: செப்: 18,19, 20, 21, 25, 29, அக்: 1, 6, 7, 9, 15
சந்திராஷ்டம நாள்கள்: அக்: 10, 11

பாராயணத்துக்கு உரிய மந்திரம்: அப்பர் சுவாமிகளின், 'சொற்றுணை வேதியன்' என்று தொடங்கும் தேவாரப் பதிகத்தைப் பாராயணம் செய்வது நல்லது. 

பரிகாரம்: திங்கள்கிழமைகளில் அருகிலுள்ள சிவன் கோயிலுக்குச் சென்று சிவபெருமானுக்கு வில்வத்தால் அர்ச்சனை செய்வதும், பிரதோஷ நாளில் நந்திதேவருக்கு காப்பரிசி நைவேத்தியம் செய்வதும் நல்லது.

 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!