திருப்பதியில் இரு தினங்களுக்கு சர்வதரிசனம், திவ்ய தரிசனம் ரத்து

திருமலை திருப்பதியில் கடந்த 13-ம்  தேதி மாலை கருடக் கொடியேற்றத்துடன் பிரம்மோற்சவம் தொடங்கியது. இன்று (15-ம் தேதி) காலை சிம்ம வாகனத்தில்  வேங்கடேசப் பெருமாளின் வீதி உலா நடைபெற்றது. பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்ச்சியான கருடசேவை வருகிற 17 - ம் தேதி திங்கட்கிழமை மாலை 7 மணிக்கு நடைபெறுகின்றது.   

திருப்பதி

திருமாலின் நித்ய சூரிகளின் தலையாயப் பொறுப்பில் இருக்கும் கருடாழ்வார் எனும் 'பெரிய திருவடி' சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர். திருமலையில் திருமாமணி மண்டபத்தில், கருடன் வேங்கடவனைக் கூப்பிய கரத்துடன் நின்ற நிலையில், சிறகுகள் விரித்த நிலையில், நமக்காக பிரார்த்திப்பதால், இங்கு பகவான் காட்சி தரும் கருடசேவை மிக விசேஷமாகும். 

கருட சேவையின்போது 3 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் வருவார்களென எதிர்பார்க்கப்படுகின்றது. கட்டுக்கடங்காமல் வரும் கூட்டத்தைக் கட்டுப்படுத்துவதற்காக திருமலை திருப்பதி தேவஸ்தானம் விரிவான பல ஏற்பாடுகளைச் செய்துள்ளது. இதனால், சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு வழங்கப்படும் சர்வ தரிசனம், மலைப்பாதை வழியாக வருபவர்களின் திவ்ய தரிசனம் ஆகியவற்றுக்கு வழங்கப்படும் டோக்கன்கள் நாளை 16-ம் தேதி ஞாயிற்றுக்கிழமையும், 17-ம் தேதி திங்கட்கிழமையும் ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளனர்.  

18-ம் தேதி செவ்வாய்கிழமை முதல் சர்வ தரிசன டோக்கன்களும் 300 ரூபாய் சிறப்பு தரிசன டோக்கன்களும் தலா 7,000 வழங்கப்படும். அலிபிரி வழியில் மலையேறி வருபவர்களுக்கு 14,000 திவ்ய தரிசன டோக்கன்களும், ஶ்ரீவாரிமெட்டு வழியாக வருபவர்களுக்கு 6,000 டோக்கன்களும் வழங்கப்படும். பக்தர்கள் இதற்குத் தகுந்தவாறு தங்களது பயணத்தைத் திட்டமிட்டுக்கொள்ள வேண்டுமென திருமலை திருப்பதி தேவஸ்தானம் கேட்டுக்கொண்டுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!