வெளியிடப்பட்ட நேரம்: 13:25 (18/09/2018)

கடைசி தொடர்பு:14:14 (18/09/2018)

உடல் இங்கு, இதயம் ஆர்மேனியாவில்... சென்னை கல்லறைகளின் நெகிழ்ச்சிக் கதைகள்!

இதேபோல ஒவ்வொரு கல்லறைகளும் ஒவ்வொரு கதைகளைக் கூறிக் கொண்டிருக்கின்றன. ஆனால், அவை ஆர்மேனியா மொழியில் எழுதப்பட்டிருப்பதால் படித்துக் காட்டுவதற்கு யாரும் இல்லை...

உடல் இங்கு, இதயம் ஆர்மேனியாவில்... சென்னை கல்லறைகளின் நெகிழ்ச்சிக் கதைகள்!

சென்னை உயர்நீதிமன்றத்துக்கு எதிரே செல்லும் தெருவின் இப்போதைய பெயர் அரண்மனைக்காரத் தெரு. இதற்கு எதற்காக `அரண்மனைக்காரத் தெரு' என்று பெயர் சூட்டினார்கள் என்று தெரியவில்லை. ஆனால், இதன் உண்மையான பெயர் `ஆர்மேனியன் தெரு'.  சென்னையின் பழைமையைச் சுமந்தபடி வரலாற்றுச் சான்றாகத் திகழ்கிறது இந்தத் தெரு. அன்று உயர்தர பருத்தி மற்றும் பட்டுத் துணிகள், வைரக்கற்கள் என்று வர்த்தகத்தால் பரபரப்பாகக் காணப்பட்ட தெரு இன்று தெருவோரக் கடைகளாலும், உணவகங்களாலும் சூழப்பட்டு அல்லல்பட்டுக்கொண்டிருக்கிறது.

ஆர்மேனியன் தெரு

ஒவ்வொரு கிராமமும், ஒவ்வொரு தெருவும் பலநூறு மனிதர்களின் கதைகளையும் வதைகளையும் சுமந்து கொண்டிருக்கின்றன. ஆர்மேனியன் தெருவும் அப்படித்தான்... பலரது வாழ்க்கையையும் வரலாற்றையும் சுமந்துகொண்டிருக்கிறது. இன்று பல கட்டடங்கள் மாறிவிட்டன. சில சிதைந்து போய்விட்டன. தெருவின் இரண்டு பக்கங்களிலும் பாதையை அடைத்தபடி வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. எங்கெல்லாம் இடம் கிடைக்கிறதோ அங்கெல்லாம் ஓர் உணவகம் முளைத்திருக்கிறது. இந்த நெரிசலான தெருவில் வாகனங்கள் எழுப்பும் அலறல் சத்தங்களுக்கு மத்தியில் சுமார் 350 ஆர்மேனியர்கள் அமைதியாகத் தரைக்கு அடியில் உறங்கிக்கொண்டிருக்கிறார்கள்.

இன்றைய அரண்மனைக்காரத் தெருவில் அமைந்திருக்கிறது `ஆர்மேனியர்களின் கன்னி மேரி தேவாலயம்'. பருத்தி, பட்டு, வைரக் கற்களை வணிகம் செய்வதற்கு சென்னைக்கு வந்த ஆர்மேனியர்களால் 1712 - ம் ஆண்டு கட்டப்பட்ட தேவாலயம் இது. மூன்று நூற்றாண்டுகளைக் கடந்தும் பழைமை மாறாமல் கம்பீரமாகக் காட்சியளிக்கும் இந்தத் தேவாலயமும், இங்குக் காணப்படும் கல்லறைகளும் பல்வேறு கதைகளைச் சுமந்துகொண்டிருக்கின்றன. 

சென்னையிலிருந்து 4600 கி.மீ தொலைவில் அமைந்திருக்கிறது ஆர்மேனியா. உலகில், கிறிஸ்துவத்தை அதிகாரபூர்வ சமயமாக ஏற்றுக்கொண்ட முதல் நாடு ஆர்மேனியாதான். ஆர்மேனியர்கள் இந்தியாவுக்கு 8 - ம் நூற்றாண்டின் இறுதியில் வந்துவிட்டதாகக் கூறப்பட்டாலும், அவர்கள் சென்னைக்கு வந்தது 17 - ம் நூற்றாண்டில்தான். வணிகம் செய்யவும், வாழவும் உகந்த சூழல் நிலவியதால் பல ஆர்மேனியர்கள் சென்னையிலேயே தங்கி விட்டார்கள். 1712 - ம் ஆண்டு  ஆர்மேனியாவிலிருந்து வந்த ஒரு கப்பல் கடலில் மூழ்கிவிட்டது. அதில் ஏராளமானோர் இறந்தார்கள். அவர்களை இந்தக் கன்னிமேரி தேவாலயத்தின் அருகிலேயே புதைத்தார்கள். 

ஆர்மேனியர்கல்லறை

பழைமையான அறிவிப்புப் பலகையுடன் காணப்படும் மரக் கதவுகளைத் தாண்டி உள்ளே சென்றால் பசுமையான மரங்கள், பூச்செடிகள், புல்வெளிகளுக்கு மத்தியில் அமைதியாகக் காணப்படுகிறது கன்னி மேரி தேவாலயம். தேவாலயத்தின் மத்தியில் கன்னி மேரியின் உருவப்படம் வைக்கப்பட்டுள்ளது. தேவாலயத்தைச் சுற்றி 350 பேரின் கல்லறைகள் அமைக்கப்பட்டுள்ளன. பொதுவாக, ஆர்மேனியர்கள் தங்களது கல்லறையைத் தரைக்கு மேலே உயர்த்த மாட்டார்கள். இங்கு ஒரேயொரு கல்லறையைத் தவிர மற்ற கல்லறைகள்  தரையமைப்பில்தான் உள்ளன.

தரைக்கு மேலே உயர்ந்திருக்கும் அந்தக் கல்லறைக்குச் சொந்தக்காரர் யார்..? 

அவர் பெயர், `ரெவரென்ட் ஹரோடியன் ஷ்மாவோனியன்'. `அஸ்தாரர்' (Azdarar) என்ற பழைமையான ஆர்மேனியப் பத்திரிகையை சென்னையில் அச்சிட்டு கப்பல் மூலம் ஆர்மேனியாவுக்கு அனுப்பி வைத்த பத்திரிகையாளர் இவர். சுதந்திர ஆர்மேனியாவின் அரசியல் சாசனத்தை சென்னையில் வாழ்ந்தபடியே ஆர்மேனியர்கள் தயாரித்து கப்பல் மூலம் அனுப்பி வைத்ததாகவும் வரலாற்றுக் குறிப்புகள் உண்டு. அனைத்துக் கல்லறைகளின் மீது ஆர்மேனியா மொழியில் அவர்களைப் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. அந்தக் கல்லறைகளில் தேவதைகள், இரண்டு தலையுடைய பறவைகள் ஆகியவை வண்ண ஓவியங்களாகத் தீட்டப்பட்டுள்ளன. 

அஸ்தாரர்

அங்குக் காணப்படும் கல்லறைகளில், `கோஜா பீட்ருஸ் ஒஸ்கான்' (kojah petrus woskan) என்பவரது கல்லறையைப் பற்றிக் குறிப்பிட வேண்டும். 1750 - ம் ஆண்டுகளில் சென்னையில் வாழ்ந்த ஆர்மேனியர்களுக்குத் தலைவர் இவர்தான். பரங்கிமலையில் உள்ள தேவாலயத்துக்குப் படிக்கட்டு அமைத்துக் கொடுத்தவர் இவர். 1751 - ம் ஆண்டு இறந்தபோது கல்லறையில் புதைக்கப்படுவதற்கு முன்பு இவரது இதயம் உடலிலிருந்து வெட்டி எடுக்கப்பட்டுவிட்டது. 

எதற்காக என்று கேட்கிறீர்களா, `உலகத்தில் எனது உடலை எங்கே வேண்டுமானாலும் புதைத்துவிடுங்கள். ஆனால், இதயம் எனது நாட்டில் என் பெற்றோர்களின் கல்லறைகளுக்கு இடையில் மட்டுமே புதைக்கப்படவேண்டும்' என்று விருப்பப்பட்டார் கோஜா பீட்ருஸ் ஒஸ்கான். அவரது விருப்பத்துக்கேற்ப அவரது இதயம் தங்கப் பெட்டியில் வைத்து எடுத்துச்செல்லப்பட்டு ஆர்மேனியா நாட்டிலிருக்கும் நியூ - ஜால்ஃபாவில் புதைக்கப்பட்டிருக்கிறது. 

இதேபோல ஒவ்வொரு கல்லறைகளும் ஒவ்வொரு கதைகளைக் கூறிக்கொண்டிருக்கின்றன. ஆனால், அவை ஆர்மேனியா மொழியில் எழுதப்பட்டிருப்பதால் படித்துக் காட்டுவதற்கு யாரும் இல்லை. காலம் மாறிக்கொண்டே இருக்கும். அது யாருக்காகவும், எதற்காகவும் காத்திருக்காது என்பதற்கு அடையாளமாகத் திகழ்கிறது ஆர்மேனியன் தெரு. சென்னையின் புராதனச் சின்னங்களில் ஆர்மேனியா தேவாலயமும் குறிப்பிடத்தக்கது. அமைதியான இடம். அனைவருக்கும் அனுமதி உண்டு! 

வாழ்க்கையின் மீது மிரட்சியையும், வியப்பையும் ஒருசேர உருவாக்குகின்றன இந்தக் கல்லறைகள்!

நீங்க எப்படி பீல் பண்றீங்க