திருப்பதியில் தேரோட்டம் - நாளையுடன் முடிவடைகிறது பிரம்மோற்சவம்! | Tirupati brahmotsavam functions will end by tomorrow

வெளியிடப்பட்ட நேரம்: 14:40 (20/09/2018)

கடைசி தொடர்பு:14:40 (20/09/2018)

திருப்பதியில் தேரோட்டம் - நாளையுடன் முடிவடைகிறது பிரம்மோற்சவம்!

திருமலை திருப்பதியில் கடந்த 13-ம் தேதி (வியாழக்கிழமை) மாலை கருடக்கொடியேற்றத்துடன் தொடங்கியது. பிரம்மோற்சவ விழாவை யொட்டி வைகாநஸ ஆகம விதிமுறைகளின்படி வேங்கடேச பெருமாளுக்கு தினமும் பூஜைகளும் அலங்காரங்களும் செய்விக்கப்பட்டு, நான்கு மாடவீதிகளில் சுவாமி வீதி உலா வந்தார்.

திருப்பதி

கருடக்கொடியேற்றத்துடன் தொடங்கிய விழாவில் தினமும் காலையிலும் மாலையிலும் சுவாமி வீதி உலா நடைபெற்றது. பெரிய சேஷ வாகனம், சிறிய சேஷ வாகனம், ஹம்ச (அன்னப்பறவை) வாகனம், சிம்ம வாகனம், முத்துப்பந்தல், கற்பக விருட்ச வாகனம், சர்வ பூபால வாகனம், மோகினி அவதாரம், பல்லக்கு வாகனம் ஆகியவற்றில் சுவாமி வீதி உலா நடைபெற்றது.

ஐந்தாம் நிகழ்ச்சியான கருட சேவை நிகழ்ச்சிக்கு 3 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் திருமலையில் குவிந்தனர். இதைத்தொடந்து அனுமன் வாகனம், யானை வாகனம், தங்கத்தேர், சூர்ய பிரபை வாகனம், சந்திரபிரபை வாகனம்  ஆகியவற்றில் சுவாமி  வீதி உலா நடைபெற்றது.

திருப்பதி பிரம்மோற்சவம்


இன்று  (20.9.2018) காலை 7 மணிக்கு தேரோட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்தனர். இரவு குதிரை வாகன வீதி உலா நடைபெறுகிறது. நாளை  21-ம் தேதி காலை 7 மணிக்கு சக்கர ஸ்நான நிகழ்ச்சி சுவாமி புஷ்கரணியில் நடைபெறுகிறது. இரவு 7 மணிக்கு கொடி இறக்கத்துடன் விழா நிறைவு பெறுகிறது. திருமலை திருப்பதி தேவஸ்தானம் இதற்காக விரிவான ஏற்பாடுகளைச் செய்துள்ளது.

படங்கள் உதவி: திருமலை திருப்பதி தேவஸ்தானம் 


 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close