வெளியிடப்பட்ட நேரம்: 17:03 (23/09/2018)

கடைசி தொடர்பு:17:03 (23/09/2018)

திருப்பதி ஏழுமலையான் கோயில் சேவையில் ஈடுபட விரும்புகிறீர்களா? - உடனே விண்ணப்பிங்க!

இறைவனை தரிசிக்க வரும் பக்தர்களின் தேவையறிந்து சேவைசெய்யும் தன்னார்வத்தொண்டர்களை நாம் திருப்பதியில் காணலாம். இந்தச் சேவையில் ஈடுபட விரும்பும் பக்தர்களுக்கான கட்டுரை...

திருப்பதி ஏழுமலையான் கோயில் சேவையில் ஈடுபட விரும்புகிறீர்களா? - உடனே விண்ணப்பிங்க!

திருப்பதி ஏழுமலையானுக்குச் சேவை செய்ய விரும்புகிறீர்களா? 

உங்களுக்காகத்தான் இந்தப் பதிவு...

இறைவனை வழிபடுவதை விடவும், வழிபட வரும் பக்தர்களின் தேவையறிந்து அவர்களுக்குச் சேவை செய்வது அளவற்ற புண்ணியம் தரவல்லது மட்டுமல்ல, இறைவனுக்கும் அதுதான் உகந்தது. அப்படி இறைவனைத் தரிசிக்க வரும் பக்தர்களின் தேவையறிந்து சேவை செய்யும் தன்னார்வத் தொண்டர்களை நாம் திருப்பதியில் காணலாம். 

நாம் வேங்கடேச பெருமாளைத் தரிசிக்கச் செல்லும்போது, பலர் நம்முடைய உதவிக்கு வருவார்கள். 'ஶ்ரீவாரி சேவை' என்ற பெயரில் தன்னார்வத் தொண்டர்கள் பலர் பறவைகளைப் போல் பறந்து பறந்து நமக்கு உதவி செய்வார்கள். 

திருப்பதி

இறைவனுக்கு மிகவும் உகந்த ஶ்ரீவாரி சேவையில் நீங்களும் பங்கேற்க விரும்புகிறீர்களா? 

உங்களுக்காக,  அதுபற்றிய விவரங்களை, தேவஸ்தானம் அறிவித்துள்ளதன் அடிப்படையில் இங்கே பதிவு செய்துள்ளோம்.
திருமலை திருப்பதி ஶ்ரீவாரி சேவையில் ஈடுபட விரும்புபவர்கள் முதலில் ஒரு வாரக் காலம் சேவை செய்வதற்கு 10 பேர்கள் கொண்ட ஒரு குழுவை அமைத்துக்கொள்ள வேண்டும். 

இந்தக் குழுவில் இருப்பவர்களுக்கு ஆன்மிகத்தில் ஈடுபாடும் பெருமாள் கைங்கரியத்தில் ஆர்வமும் இருக்கவேண்டியது முக்கியத் தகுதியாகும். ஆண், பெண் வேறுபாடுகள் இல்லை. ஆனால், சேவாவில் ஈடுபடுபவர்கள் இந்துக்களாக இருக்கவேண்டும். 

ஶ்ரீவாரி சேவையில் ஈடுபட விரும்புபவர்கள் தங்களின் பெயர், முகவரி, பாலினம், தொழில், ஸ்டாம்ப் சைஸ் புகைப்படம், தொலைபேசி எண்கள் ஆகியவை அடங்கிய விண்ணப்பப் படிவத்தை, 'மக்கள் தொடர்பு அலுவலர், திருமலை திருப்பதி தேவஸ்தானம், நிர்வாக கட்டடம், கபிலத்தீர்த்தம் சாலை, திருப்பதி - 517501 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். 

சேவகர்கள்

மேலும், விவரங்கள் உங்களுக்குத் தேவைப்பட்டால், 0877- 2263544, 2263293 என்னும் தொலைபேசி எண்களில் தொடர்புகொள்ளலாம்.
 3 நாள்கள், 4 நாள்கள் அல்லது 7 நாள்கள் வரை ஶ்ரீவாரி சேவையில் பங்கு பெறலாம். இதில் பங்கேற்க, இணையதளத்தின் வாயிலாக  www.tirumala.org எனும் வலைதளத்தில் 'ஶ்ரீவாரி சேவை' எனும் இணைப்பின் மூலமாகப் பதிவு செய்துகொள்ளவேண்டும்.

ஶ்ரீவாரி சேவையில் பங்குகொள்ள வருபவர்கள், ஆதார் அட்டை ஒரிஜினல் மற்றும் நகல் பிரதியையும் அவசியம் கொண்டுவரவேண்டும். ஆதார் அட்டை இல்லாதவர்கள் சேவையில் ஈடுபட அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

குழுத்தலைவர் அல்லது ஒருங்கிணைப்பாளர் ஶ்ரீவாரி சேவகர்களின் முழுவிவரங்களையும் திருமலையிலுள்ள 'ஶ்ரீவாரி சேவா சதனில்' தெரிவிக்கவேண்டும். ஶ்ரீவாரி சேவகர்கள் தங்களுடன் குழந்தைகளையோ, நோயாளிக ளையோ, வயதானவர்களையோ அழைத்து வரக்கூடாது. அவ்வாறு அழைத்து வந்தால், எந்த விதத்திலும் அவர்கள் சேவையில் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

ஶ்ரீவாரி சேவைக்கு வரும் குழுத்தலைவர், அவருக்குத் தனிப்பட்ட முறையில் தெரிந்தவர்களை மட்டுமே அழைத்து வர வேண்டும்.. சேவகர்கள் செய்யும் தவறுகளுக்குக் குழுத்தலைவரே முழுப் பொறுப்பாவார். சேவர்களைத் திருமலைக்கு அழைத்துவருவது முதல் திரும்ப அவர்கள் சொந்த ஊருக்குச் செல்லும் வரை முழுப் பொறுப்பும் குழுத்தலைவரையே சேரும்.

அன்னதானக்கூடத்தில்...  முதல்வர் சந்திரபாபு நாயுடு

சேவையின்போது ஆண்கள் வெள்ளைச்சட்டை, குர்தா, பேண்ட், வேஷ்டி பைஜாமா ஆகியற்றில் ஏதேனும் ஒரு உடையை அணிய வேண்டும். பெண்கள் மெரூன் பார்டர் கொண்ட ஆரஞ்சு வண்ணப்புடவை, மெரூன் பார்டர் கொண்ட ரவிக்கை ஆரஞ்சு வண்ண குர்தா, மெரூன் வண்ண பைஜாமா, மெரூன் வண்ண சுடிதார் ஆகியற்றை மட்டுமே அணியவேண்டும். 

ஶ்ரீவாரி சேவைக்  குழுவினர்  அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ள தேதியில் காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணிக்குள் திருமலையில் உள்ள ஆர்.டி.சி. பேருந்து நிலையத்தில் இருக்க வேண்டும். அங்குள்ள ஶ்ரீவாரி சேவா சதனில் உள்ள உதவி நிர்வாக அதிகாரியையோ சிறப்பு அலுவலரையோ சந்தித்துத் தகவல் அளிக்கவேண்டும்.

ஆண்களுக்குத் திருமலை ஆர்.டி.சி. பேருந்து நிலைய வளாகக் கட்டடத்திலும், பெண்களுக்கு பி.ஏ.சி-3 கட்டடத்திலும் தங்குவதற்கு வசதி செய்யப்பட்டுள்ளது. சேவகர்கள் தங்கும் அறைக்கு அவர்களே சொந்தமாக பூட்டு சாவி கொண்டு வரவேண்டும்.
ஶ்ரீவாரி சேவாசதனில் சேவகர்களுக்கு அடையாள அட்டையை அளித்து, சேவை செய்யவேண்டிய இடம் மற்றும் பணிகளை ஒதுக்குவார்கள். தினமும் குறைந்தது 6 மணி நேரமாவது சேவை புரிய வேண்டும்.

திருமலை

தினமும் காலை 9 மணி முதல் 10 மணி வரையிலும் மாலை 6 மணி முதல் 7 மணி வரையிலும் பஜனை, சத்சங்கம், பயிற்சிகள் அளிக்கப் படும். காலையில் சேவை செய்பவர்கள் மாலையிலும், மாலையில் சேவை செய்பவர்கள் காலையிலும் பயிற்சியில் கலந்து கொள்ளவேண்டும்.  

ஶ்ரீவாரி சேவையில் இருக்கும்போது மட்டுமே ஸ்கார்ப் அணியவேண்டும். சேவகர்கள் நெற்றியில் திருநாமம், குங்குமம். சந்தனம் ஆகியவற்றில் திலகமிட்டுக்கொண்டு கோவிந்த நாமத்தை உச்சரித்தவண்ணம் இருக்கவேண்டும். மற்றவர்களையும் 'கோவிந்தா' என்றே அழைக்கவேண்டும். ஶ்ரீவாரி சேவகர்கள் தமக்கு அளிக்கப்படும் இடங்களில் மட்டுமே சேவை செய்யவேண்டும். பக்திப் பூர்வமாக தங்களின் சேவையைச் செய்யவேண்டும். 

சேவை செய்த நேரம் போக மற்ற நேரங்களில் இரவில் ஆண்கள் அரை பேண்ட் (பெர்முடாஸ்) பெண்கள் நைட்டி போன்றவற்றை அணியக்கூடாது. தங்குமிடத்தில் தண்ணீர், மின்சாரம் ஆகியவற்றை முறையாகப் பயன்படுத்தவேண்டும்.  

விதிமுறைகளைக் கடைப்பிடிக்கத் தவறினால், சேவகர்கள் இரண்டு ஆண்டுகளுக்குச்சேவை செய்ய அனுமதிக்கப்பட மாட்டார்கள். 
ஶ்ரீவாரி சேவை என்பது பக்தர்களுக்கு செய்யும் இலவச சேவை மட்டுமே. இதற்காக குழுத்தலைவர்களுக்கோ, சேவகர்களுக்கோ பணம் பொருள் எதுவும் அளிக்கக்கூடாது என்றும் அறிவுறுத்தப்படுகிறது. 

இவ்வாறு ஶ்ரீவாரி சேவையில் ஈடுபடுபவர்களுக்கான நெறிமுறைகளைத் திருமலை திருப்பதி தேவஸ்தானம் வகுத்துள்ளது.
'மக்கள் சேவையே மகேசன் சேவை' என ஶ்ரீவாரி சேவையில் கலந்துகொண்டு, மலையப்ப சுவாமியின் அருளைப் பெறலாமே!

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்