அசுத்தப்படும் கோயில் அமிர்தபுஷ்கரணி..! வேதனைப்படும் பக்தர்கள் | Temple going bad in Nagaipattinam

வெளியிடப்பட்ட நேரம்: 04:03 (25/09/2018)

கடைசி தொடர்பு:10:01 (25/09/2018)

அசுத்தப்படும் கோயில் அமிர்தபுஷ்கரணி..! வேதனைப்படும் பக்தர்கள்

Thirukadaiyur Pound

பிரசித்திபெற்ற திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோயிலில் உள்ள அமிர்தபுஷ்கரணி என்றழைக்கப்படும் திருக்குளத்தில் கழிவுநீர் கலப்பது கண்டு பக்தர்கள் வேதனை தெரிவிக்கிறார்கள்.  

Thirukadaiyur

நாகை மாவட்டம் திருக்கடையூரில், மார்க்கண்டேயனுக்கு என்றும் 16 என சிரஞ்சீவி வரமளித்த அமிர்தகடேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. உயிர்களைப் பறிக்கும் எமனை சம்ஹாரம் செய்த தலம் இது என்பதால், ஏராளமான பக்தர்கள் இங்கு வந்து ஆயுள் விருத்தி ஹோமங்கள் செய்துகொள்கிறார்கள். இதனால், பிரதான சந்நிதிகள் முன்பும் சுவாமி, அம்பாள் பிரஹாரங்களிலும் தினந்தோறும் நடைபெறும் நூற்றுக்கணக்கான திருமணங்களால் கோயில் முழுதும் கூட்ட நெரிசலால் நிரம்பி வழியும். சுவாமி தரிசனம் செய்து, ஆலயம் சுற்றிவரும் பக்தர்கள் விழிபிதுங்கிச் சிரமப்படுவார்கள்.  

Thirukadaiyur Pound

இப்படிப்பட்ட பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க பக்தர்கள் பல ஆண்டுகளாய் கோரிக்கை வைத்துவந்தனர். இதை ஏற்ற கோயில் நிர்வாகம், சுமார் 80 லட்ச ரூபாய் செலவில், கோயில் வெளிப்பிராஹாரத்தில் இத்தகைய திருமணங்கள் நடத்த தனி மண்டபம் அமைத்தது. கடந்த செப்டம்பர் 1-ம் தேதி முதல் இந்தத் தனி மண்டபத்தில்தான் திருமணங்கள் நடந்துவருகின்றன. இந்நிலையில்தான், நிகழ்ச்சிகளால் ஏற்படும் கழிவுநீர், அமிர்த புஷ்கரணியில் நேரடியாகக் கலப்பதாகப் புகார் எழுந்திருக்கிறது. இதுபற்றி வேத சாஸ்திரங்கள் அறிந்த சிவாச்சாரியார் ஒருவரிடம் பேசியபோது, “திருமணங்கள் நடத்த தனி மண்டபம் அமைத்தார்கள். அங்கு, தினமும் நூற்றுக்கணக்கான தம்பதிகளுக்கு திருமணம் நடக்கின்றன. கலச பூஜைகள் முடிந்தபின், மண்டபத்தின் பின்புறம் தம்பதிகளை அமரவைத்து அவர்களுக்குக் கலகாபிஷேகம் செய்கிறார்கள். அவர்கள் நீராடும் அந்தக் கழிவுநீரை அப்படியே அமிர்தபுஷ்கரணியில் விடுகிறார்கள்.

தேவர்கள் திருப்பாற்கடலைக் கடைந்தெடுத்து வந்த அமிர்தத்தை இந்தப் புஷ்கரணியில் நீராடிய பின்தான் அருந்தினார்கள் என்கிறது புராண வரலாறு.  அதுமட்டுமல்ல, ஆண்டுதோறும் ஆடிப் பூரம் மற்றும் சித்திரை மாதத்தில் நடைபெறும் எம சம்ஹாரத் திருவிழாவில், பஞ்சமூர்த்திகளும் அமிர்தபுஷ்கரணியில் எழுந்தருளி தீர்த்தவாரி வழங்குவது வழக்கம்.  இத்தகைய சிறப்புமிக்க புஷ்கரணியில் அசுத்தநீரைக் கலக்கவிடலாமா? இது இறைவனை அவமதிக்கும் செயல் என்பதோடு, ஆகம விதிகளுக்கு முரணானது.  புஷ்கரணி செல்லும் பாதையைத் திறந்தவெளி கழிப்பிடமாகவும், புஷ்கரணியைச் சுற்றிலும் குப்பை மேடாகவும் காட்சியளிக்கும் அவலத்தையும் மாற்றியமைக்க வேண்டும். இதைக் காணும் பக்தர்களின் மனம் மிகவும் புண்படுகிறது” என்றார்.